காணாமல் போன கடவூர் தொகுதி

Advertisement
ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டத்தில் ஒரு காலத்தில் சட்டமன்ற தொகுதியாக இருந்த கடவூர், காலச்சக்கரத்தின் சுழற்சியில் காணாமல் போனதோடு மருங்காபுரி, மணப்பாறை என்று பெயர் மாற்றம் செய்யப்பட்ட வரலாறு.
ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டத்தில் மணப்பாறை தாலுகாவில் அமைந்திருந்தது கடவூர். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கடவூர் ஜமீன் என அழைக்கப்பட்டது. 154 ஏக்கர் பரப்பளவில் அமைந்த கடவூர் ஜமீன், அதன் அரண்மனை போன்றவை இன்றும் அப்பகுதியில் காட்சிப்பொருளாக உள்ளன. கடவூர் ஒரு காலத்தில் சட்டமன்ற தொகுதியாக இருந்தது.
1967-ம் ஆண்டு மற்றும் 1971-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல்களில் ஒரு சட்டமன்ற தொகுதியாக கடவூர் இருந்தது. கடவூரில் ஜமீன்தாராக இருந்த கே.கே.முத்தையா காங்கிரஸ் கட்சி சார்பில் 2 முறை தொடர்ந்து இந்த தொகுதியில் வெற்றி வாகை சூடி சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார்.
Advertisement
பெயர் மாற்றம்
தொகுதி சீரமைப்பு, எல்லைகள் மாற்றி அமைப்பு என்று தேர்தல் ஆணையத்தால் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த சீரமைப்பில் 1977-ம் ஆண்டு இந்த தொகுதி மருங்காபுரி என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அப்போது நடந்த தேர்தலிலும் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட கே.கே.முத்தையா தி.மு.க. வேட்பாளரை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார்.
கடவூர் சட்டமன்ற தொகுதி 1967-ம் ஆண்டுக்கு முன்பாக 2 தேர்தல்களில் மட்டும் மணப்பாறை என்ற பெயரில் இருந்து உள்ளது. 1952, 1957 தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி இந்த தொகுதியில் வெற்றி பெற்றிருக்கிறது. 1967-ம் ஆண்டுதான் இத்தொகுதி கடவூர் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அதன்பின்னர் மருங்காபுரி, தற்போது மீண்டும் மணப்பாறை என்று மாற்றப்பட்டுள்ளது.
அ.தி.மு.க. கோட்டையாக மாறியது
இந்த தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் 1980-ம் ஆண்டு ராஜ்குமார், 1984-ம் ஆண்டு சோலைராஜ் ஆகியோர் வெற்றி பெற்றனர். 1989-ம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில் பேராசிரியர் கே.பொன்னுசாமி (அ.தி.மு.க.) வெற்றி பெற்றார். 1991-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலிலும் மீண்டும் அவரே வெற்றி வாகை சூடினார். அப்போது ஜெயலலிதா அமைச்சரவையில் அவர் சட்டமன்ற துணை சபாநாயகராகவும், பின்னர் கல்வித்துறை அமைச்சராகவும் பதவி வகித்தார்.
1996-ம் ஆண்டு தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட புலவர் செங்குட்டுவன் வெற்றி பெற்றார். பின்னர் 2001-ம் ஆண்டு இந்த தொகுதியை மீண்டும் தன்வசமாக்கிய அ.தி.மு.க. 2021-ம் ஆண்டு வரை தனது கோட்டையாக மாற்றி வைத்திருந்தது.
அ.தி.மு.க. சார்பில் 2001-ம் ஆண்டு செல்லையா, 2006-ம் ஆண்டு சின்னசாமி, 2011 மற்றும் 2016-ம் ஆண்டு சந்திரசேகர் ஆகியோர் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். கடைசியாக கடந்த 2021-ம் ஆண்டு நடந்த தேர்தலில் ம.ம.க.வை சேர்ந்த அப்துல் சமது தி.மு.க. சார்பில் போட்டியிட்டு தற்போது எம்.எல்.ஏ.வாக உள்ளார்.
இரு திராவிட கட்சிகளின் ஆதிக்கம்
ஆரம்பத்தில் 27 ஆண்டுகள் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக இருந்த இந்த தொகுதி காலச்சக்கரத்தின் சுழற்சியில் காணாமல் போனதோடு மருங்காபுரி, மணப்பாறை என்று பெயர் மாற்றம் செய்தாலும், கடந்த 45 ஆண்டுகள் தொடர்ந்து இரு திராவிட கட்சிகளே வெற்றி வாகை சூடி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
Advertisement






