Daily ThanthiMaalaimalarThanthi TVDTNext
Articles
ஏப்ரல் 2, 9:00 am5 min read

அதிரும் தமிழக தேர்தல் களம்: 4 முனைப்போட்டி யாருக்கு சாதகம்..?

DT

Daily Thanthi News Desk

Tamil Nadu Election 2026 Bureau

அதிரும் தமிழக தேர்தல் களம்: 4 முனைப்போட்டி யாருக்கு சாதகம்..?

2026 சட்டசபை தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க., த.வெ.க. இடையே கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்வு, தேர்தல் இரண்டுக்கும் பெரிய வித்தியாசம் ஒன்றும் கிடையாது. தேர்வின்போது, பேப்பரில் மாணவர்கள் எழுதியதற்கு ஆசிரியர்கள் மதிப்பெண் அளிப்பார்கள். தேர்தலின்போது, பொது வாழ்வில் அரசியல்வாதிகளின் செயல்பாட்டுக்கு மக்கள் மதிப்பெண் கொடுப்பார்கள்.

மாணவர்களுக்கு ஆண்டுக்கு ஆண்டு பொதுத்தேர்வு வருவதுபோல், அரசியல்வாதிகளுக்கு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை வருவது பொதுத்தேர்தல். அந்த வகையில், தமிழகத்தில் 17-வது சட்டசபை தேர்தல் வருகிற 23-ந்தேதி (23.4.2026) நடைபெற இருக்கிறது.

Advertisement

அனல் பறக்கும் தேர்தல் களம்

இதுவரை நடைபெற்ற 16 சட்டசபை தேர்தலின்போது இருந்த அதே பரபரப்பும், விறுவிறுப்பும் கொஞ்சமும் குறையாத வகையில் இந்த தேர்தலிலும் அனல் பறந்து வருகிறது. தனித்து போட்டி என்ற த.வெ.க. தலைவர் விஜய்யின் அறிவிப்பை தொடர்ந்து, தமிழக சட்டசபை தேர்தலில் 4 முனைப்போட்டி என்பது உறுதியாகி இருக்கிறது.

கடந்த முறை 13 கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட தி.மு.க., இந்த முறை 26 கட்சிகளுடன் மெகா கூட்டணியை அமைத்து வலுவாக களம் காண்கிறது.

அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க., பா.ம.க., அ.ம.மு.க., த.மா.கா. உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. நடிகர் விஜய்யின் த.வெ.க.வையும் இணைத்தால், தேர்தலில் வெற்றி நிச்சயம் என்ற எண்ணத்துடன் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், அந்த முயற்சி கைகூடவில்லை.

எப்படி, 2006-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் விஜயகாந்த், 2016-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் சீமான் புதிய வரவாக இருந்ததுபோல, இப்போது (2026) நடிகர் விஜய்யின் த.வெ.க.வும் முதல் முறையாக தேர்தல் களம் காண்கிறது.

கடந்த 2 சட்டசபை தேர்தல்களில் (2016, 2021) தனித்து போட்டியிட்ட சீமானின் நாம் தமிழர் கட்சி இந்த முறையும் தனித்தே களம் காண்கிறது. அதனால், இந்தத் தேர்தலில் பரபரப்புக்கும், விறுவிறுப்புக்கும் கொஞ்சமும் குறைவு இருக்காது.

4 முனைப்போட்டி யாருக்கு சாதகம்?

தி.மு.க. கூட்டணிக்கு எப்போதுமே சிறுபான்மையினர் வாக்குகள் பக்க பலமாக இருக்கும். தற்போதும் அந்தக் கூட்டணியில் 4 இஸ்லாமிய கட்சிகளும், பல கிறிஸ்தவ அமைப்புகளின் ஆதரவும் இருப்பதால், இந்த முறையும் எப்போதும் போல் வாக்குகள் சிந்தாமல் சிதறாமல் கிடைக்கும் என்று அக்கட்சி எதிர்பார்க்கிறது.

அ.தி.மு.க. கூட்டணிக்கு சிக்கல்

அ.தி.மு.க.வை பொறுத்தவரை கடந்த தேர்தலைப்போல, இந்த முறையும் பா.ஜ.க., பா.ம.க., த.மா.கா. ஆகிய கட்சிகள் கூட்டணியில் இடம்பெற்றுள்ளன. கூடுதலாக அ.ம.மு.க.வும் இடம்பெற்றுள்ளது. என்றாலும், கடந்த முறை ஒருங்கிணைந்த பா.ம.க.வாக இருந்தது, இந்த முறை டாக்டர் ராமதாஸ் தலைமையில் மற்றொரு அணியாக, வேட்பாளர்களை களமிறக்கியிருப்பது வன்னியர்கள் வாக்குகளை சிதைக்கும் என்றே தெரிகிறது.

மேலும், அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க. இடம்பெற்றிருப்பதால், சிறுபான்மையினர் வாக்குகள் குறைவதற்கான வாய்ப்பு உள்ளது.

தாக்கத்தை ஏற்படுத்தும் விஜய்

சட்டசபை தேர்தலில் புது வரவான த.வெ.க.வுக்கு முதல் தலைமுறை வாக்காளர்கள், இளம் வாக்காளர்கள் மத்தியில் நல்ல செல்வாக்கு இருக்கிறது. அந்தக் கட்சியினுடைய இலக்கே 'வீட்டுக்கு ஒரு ஓட்டு' என்பதுதான். அதாவது, தமிழ்நாட்டில் உள்ள ரேஷன் கார்டுகள் கணக்குப்படி, 2¼ கோடி வாக்குகளை அக்கட்சி குறிவைத்துள்ளது.

மேலும், ஆளுங்கட்சியையும், ஆண்ட கட்சியையும் விரும்பாதவர்கள் த.வெ.க.வுக்கு வாக்களிப்பார்கள் என்று கூறப்படுகிறது. சிறுபான்மையினர், கிறிஸ்தவ வாக்குகளும் விஜய்-க்கு இந்த முறை கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது. எனவே, அவரும் தேர்தலில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று கூறப்படுகிறது. த.வெ.க.வின் வருகை தி.மு.க. கூட்டணியின் வாக்கு சதவீதத்தையும் சிதைக்கும் என தெரிகிறது.

நாம் தமிழர் கட்சிக்கு பாதிப்பு?

தேர்தலுக்கு தேர்தல் அதிகரித்து வந்த நாம் தமிழர் கட்சியின் வாக்கு சதவீதம் தற்போதைய நிலையில் 7 சதவீதத்திற்கு மேல் உள்ளது.

இது வரும் தேர்தலில் இரட்டை இலக்கத்தை தொடும் என்று அக்கட்சியினர் கூறிவருகின்றனர். என்றாலும், நாம் தமிழர் கட்சிக்கும் முதல் தலைமுறை வாக்காளர்கள் மற்றும் இளம் வாக்காளர்களின் ஓட்டுகளே அதிகம் கிடைத்துவருதால், த.வெ.க.வின் வருகையால் இந்தக் கட்சிக்கும் பாதிப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது.

இழுபறி நிலை நீடிக்கலாம்

மொத்தத்தில், நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க., த.வெ.க. இடையேதான் கடும் போட்டி நிலவும் என்று தெரிகிறது. ஆளப்போகும் கட்சிக்கு மெஜாரிட்டிக்கு தேவையான 118 தொகுதிகள் கூட கிடைக்க முடியாத அளவுக்கு இழுபறி நிலை நீடிக்கலாம் என்றும் கூறப்படுகிறது. அந்த அளவுக்கு விஜய் தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று சொல்லப்படுவதால், ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிபோல், சட்டசபை தேர்தல் முடிவும் பரபரப்பாகவே அமையும்.

"ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிபோல், சட்டசபை தேர்தல் முடிவும் பரபரப்பாகவே அமையும்."

அரசியல் ஆய்வாளர்
Share this article: