தொகுதி மறுசீரமைப்பு விவகாரம்.. மு.க.ஸ்டாலின் மீது எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு

Advertisement
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பல்லடத்தில் நடந்த பரப்புரையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தொகுதி மறுசீரமைப்பு, போதை பொருள் பிரச்சினை உள்பட பல விஷயங்களில் முதல்வர் ஸ்டாலினை கடுமையாக சாடினார்.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கோவை, மேட்டுப்பாளையம் சட்டமன்றத் தொகுதிகளில் மக்களை சந்தித்துவிட்டு, பல்லடம் திருப்பூர் சாலையில் பெருந்திரளாகக் கூடியிருந்த மக்கள் மத்தியில் பரப்புரை நிகழ்த்தினார்.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் முன்னாள் அமைச்சர் உடுமலைப்பேடை ராதாகிருஷ்ணன், திருப்பூர் வடக்கு தொகுதியில் முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன், காங்கேயம் தொகுதியில் முன்னாள் எம்.எல்.ஏ நடராஜன், பல்லடம் தொகுதியில் முன்னாள் எம்.எல்.ஏ பரமசிவம், தாராபுரம் தொகுதியில் திருமதி.சத்யபாமா ஆகிய ஐந்து பேருக்கும் இரட்டை இலை சின்னத்தில் வாக்களியுங்கள். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக சார்பில் திருப்பூர் தெற்கு தொகுதியில் தங்கராஜ்க்கு தாமரை சின்னத்தில் வாக்களியுங்கள். அமமுக சார்பில் மடத்துக்குளம் தொகுதியில் சி.சண்முகவேலுக்கு குக்கர் சின்னத்தில் வாக்களியுங்கள்.
Advertisement
கருப்புச் சட்டை விவகாரம்
ஸ்டாலின் கருப்புச் சட்டை போட்டிருக்கிறார். மே 4ம் தேதிக்கு பிறகு கருப்புச் சட்டை போட்டுக்கொள்ளுங்கள். இப்போது எதற்கு கருப்புச்சட்டை? அம்மா அவர்கள் பெண்களுக்கு நாடாளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் 33% இடஒதுக்கீட்டுக்கு முதலில் குரல் கொடுத்தார். 1998ல் அம்மா வேண்டுகோளை ஏற்று அப்போதைய பிரதமர் வாஜ்பாய் ஒப்புக்கொண்டார், தம்பிதுரை சட்டத்துறை அமைச்சராக அந்த மசோதாவை தாக்கல் செய்தார்.
அப்போது இண்டியா கூட்டணியில் இருந்த முலாயம்சிங் யாதவ் அந்த மசோதாவை தம்பிதுரையிடம் இருந்து பிடுங்கி கிழித்தெறிந்தார். இன்று பிரதமர் மோடி பெண்களுக்குச் சம வாய்ப்பு அளிக்க வேண்டும் என்பதற்காக இந்த சட்டத்தை கொண்டு வருகிறார்.
தொகுதி மறுசீரமைப்பு
பாராளுமன்றத் தொகுதி மறுவரையறை செய்கிறார்கள். அதற்கு ஸ்டாலின் கருப்புச் சட்டை அணிந்து, ஊர் முழுவதும் கருப்புக் கொடி ஏற்றச் சொன்னார். நான் வரும் வழியில் எங்கேயும் கருப்புக் கொடியை பார்க்கவில்லை.
தமிழ்நாட்டின் நாடாளுமன்ற எண்ணிக்கை குறைந்துவிடும் என்கிறார். தமிழ்நாட்டிற்கு விழுக்காடு குறையாது என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா சொல்லிவிட்டார். அதன்பிறகும் வேண்டுமென்றே கூட்டத்தில் கருப்புச் சட்டை போட்டிருக்கிறார் ஸ்டாலின். இப்போது நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் மீண்டும் தெளிவுபடுத்தியிருக்கிறார். தமிழ்நாட்டுக்கு 59 தொகுதிகள் என்று அறிவித்துவிட்டார். ஏற்கனவே 7.18% இருக்கிறது, இப்போது 7.23% ஆகியிருக்கிறது, 0.5% கூடியிருக்கிறது. இப்போது சட்டையைக் கழற்ற வேண்டியதுதானே.
போதை பொருள் பிரச்சினை
தமிழ்நாட்டில் எங்கு பார்த்தாலும் மூலைமுடுக்கெல்லாம் கஞ்சா கரைபுரண்டு ஓடுகிறது. போதை பொருள் நிறைந்த மாநிலமாக மாறிவிட்டது தமிழ்நாடு. இதனால், மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் பாதிப்படைகின்றனர். போதை ஆசாமிகளால் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை நடக்காத நாளே இல்லை.
வரி சுமையும் விலைவாசியும்
திருப்பூர் தொழில் நிறைந்த மாவட்டம். கடுமையான மின்வெட்டு, நிலைக்கட்டணம் வீடுகளுக்கு முதலில் 52% உயர்த்தினார்கள். ஆண்டுக்கு 5% என மூன்றாண்டுகளில் 15% உயர்த்தி, இப்போது 67% ஆக உள்ளது. கடைக்கு பீக் ஹவர் என்ற பெயரில் டபுள் சார்ஜ் வசூலிக்கிறார்கள். வீட்டுவரி 100% உயர்ந்துவிட்டது, கடைக்கு வரி 150% உயர்ந்துவிட்டது. போதாக்குறைக்கு குப்பைக்கும் வரி போட்டுவிட்டனர்.
விண்ணை முட்டும் அளவுக்கு உணவுப்பொருள்களின் விலை உயர்ந்துவிட்டது. விலைவாசியைக் கட்டுப்படுத்த திமுக அரசு முயலவில்லை. ஏழை நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கெல்லாம் முதல்வர் கவலைப்படவில்லை. எப்போது பார்த்தாலும் முதல்வருக்கு மகன் பற்றியும் வசூல் பற்றியும் தான் சிந்தனை.
முதலீடு குறித்த விவாதம்
திமுக ஆட்சியில் தொழில் முதலீடு 1179 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், 15 லட்சத்து கோடி முதலீடு ஈர்க்கப்பட்டதாக ஸ்டாலின் பச்சை பொய் சொல்கிறார். ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்ட பின் நிலம், அனுமதி, நிதி ஆதாரம் என பல கட்டங்களை கடந்து தொழிற்சாலை பயன்பாட்டுக்கு வர நான்கு ஆண்டுகள் பிடிக்கும். அம்மாவும், நானும் போட்ட ஒப்பந்தங்களால் தான் இரட்டை இலக்கம் வந்திருக்கிறது என்று எடப்பாடி தெளிவுபடுத்தினார்.
அதிமுக வருங்கால வாக்குறுதிகள்
நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும். கைத்தறி நெசவாளர்களுக்கு 450 யூனிட் விலையில்லாமல் கொடுக்கப்படும், விசைத்தறி நெசவாளர்களுக்கு 1400 யூனிட் வழங்கப்படும். நிலைக்கட்டணம் குறைக்கப்படும். 65 மேற்பட்ட ஓய்வூதியதாரர்களுக்கு 2500 ரூபாய் வழங்கப்படும். கஞ்சா விற்பனை மூன்றே மாதத்தில் ஒழிக்கப்படும்.
திமுக ஆட்சியின் வரிச்சுமையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவித்தொகை 10 ஆயிரம் ரூபாய் வங்கியில் செலுத்தப்படும். எல்லா குடும்பத் தலைவிக்கும் மாதம் 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லாமல் ஃப்ரிட்ஜ் வழங்கப்படும். 5 லட்சம் மகளிருக்கு அம்மா இரு சக்கர வாகனம் வாங்க தலா 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். ஒவ்வொரு குடும்பத்திற்கும் 3 சிலிண்டர்கள் விலையின்றி வழங்கப்படும். பெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் கட்டணம் இல்லாமல் பயணிக்கலாம்.
அதிமுகவுக்கு இரட்டை இலை, பாஜகவுக்கு தாமரை, அமமுகவுக்கு குக்கர் என வாக்களித்து தமிழகம் அதிமுகவின் கோட்டை என்று நிரூபியுங்கள். மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தினார்.
Advertisement






