தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள டாக்டர் எஸ்.செந்தில்குமார் தர்மபுரி டவுன் வைன்டிங் டிரைவர் சின்னசாமி தெருவை சேர்ந்தவர். இவருக்கு வயது 42. எம்.டி. (ரேடியோ டையக்னோடிஸ்) படித்துள்ளார். இவரது தந்தை டி.என்.வி.செல்வராஜ், தாயார் ஷீலா செல்வராஜ். இவரது தாத்தா டி.என்.வடிவேல் கவுண்டர் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராகவும், தர்மபுரி தொகுதி எம்.எல்.ஏ.வாகவும், தர்மபுரி நகராட்சி தலைவராகவும் இருந்தவர். செந்தில்குமாருக்கு ஷோபனா என்ற மனைவியும், சுவீட்சன், என்ற மகனும், சுவானிதா என்ற மகளும் உள்ளனர். தர்மபுரியில் தனியார் மருத்துவமனைகள், பள்ளி கூடங்கள் மற்றும் பல்வேறு வணிக நிறுவனங்களை நிர்வகித்து வரும் டாக்டர் எஸ்.செந்தில்குமார் பல்வேறு சமூக பணி, பொதுப்பணிகளில் ஆர்வம் காட்டினார். பின்னர் தி.மு.க.வில் இணைந்த இவர் பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டார். கட்சியில் தீவிரமாக பணியாற்றிய இவருக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.