விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளராக துரை.ரவிக்குமார் அறிவிக்கப்பட்டுள்ளார்.
வி.சி.க. வேட்பாளர்
நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு விழுப்புரம், சிதம்பரம் ஆகிய 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதில் விழுப்புரம் (தனி) நாடாளுமன்ற தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வேட்பாளராக அக்கட்சியின் மாநில பொதுச்செயலாளரான டாக்டர் துரை.ரவிக்குமார் அறிவிக்கப்பட்டுள்ளார்.
முதல் முறையாக...
இவர் எம்.ஏ.,பி.எல். பட்டங்களையும், தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் Ôமன்னன் நந்தனின் மறைக்கப்பட்ட வரலாறு‘ என்ற தலைப்பில் ஆய்வு செய்து 2018&ம் ஆண்டு டாக்டர் பட்டத்தையும் பெற்றவர். கடந்த 2006&ம் ஆண்டில் நடந்த சட்டமன்ற தேர்தலில் காட்டுமன்னார்கோவில் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். கடந்த 2016&ல் நடந்த சட்டமன்ற தேர்தலில் வானூர் தொகுதியில் போட்டியிட்டார். ஆனால் அந்த தேர்தலில் அவரால் வெற்றி பெற முடியவில்லை. தற்போது நாடாளுமன்ற தேர்தலில் முதல் முறையாக துரை.ரவிக்குமார் களம் இறங்குகிறார்.
அரசியல் விமர்சனம், கவிதை, மொழிபெயர்ப்பு என 40&க்கும் மேற்பட்ட நூல்களின் ஆசிரியராக இருந்துள்ளார். சுமார் 40 நூல்களை தொகுத்து வெளியிட்டுள்ளார். தேர்ந்தெடுக்கப்பட்ட இவரது கட்டுரைகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு நூலாக வெளியிடப்பட்டுள்ளன. இதுதவிர சுமார் ஆயிரம் கட்டுரைகளை எழுதியிருக்கிறார்.
மேலும் மக்கள் சிவில் உரிமைக்கழக அமைப்பின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பகுதிகளுக்கு தலைவராக இருந்துள்ளார். கடந்த 2010&ம் ஆண்டுக்கான தமிழக அரசின் ‘அறிஞர் அண்ணா‘ விருதையும், இந்தஆண்டில் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் ‘திறனாய்வுச் செம்மல்‘ விருதையும் பெற்றார். தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தின் ஆட்சி மன்றக்குழு உறுப்பினராகவும், செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் எண் பேராயக்குழு உறுப்பினராகவும், அண்ணாமலை பல்கலைக்கழக செனட் உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார். இதுதவிர தமிழக அரசின் சார்பில் புதிரை வண்ணார் நல வாரியம், சமூக சீர்திருத்த வாரியம் ஆகியவற்றின் உறுப்பினராகவும் இருந்து பணியாற்றியுள்ளார்.
சொந்த ஊர்
வேட்பாளர் துரை.ரவிக்குமார், நாகை மாவட்டம் சீர்காழி தாலுகா மாங்கணாம்பட்டில் 10.6.1961&ல் பிறந்தார். இவருடைய பெற்றோர் துரைசாமி& கனகம்மாள். துரை.ரவிக்குமார் தற்போது விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா திருச்சிற்றம்பலம் பகுதியில் வசித்து வருகிறார். இவருடைய மனைவி செண்பகவள்ளி குடும்ப பொறுப்புகளை கவனித்து வருகிறார். இவருக்கு ஆதவன், அதீதன் என்ற 2 மகன்கள் உள்ளனர். இவர்கள் இருவருக்கும் திருமணமாகி சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர்