விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் உள்ள கீழ்மாம்பட்டு எனும் குக்கிராமத்தில் 1964-ம் ஆண்டு ஜூலை 2-ம் தேதி அய்யாசாமி உதந்திக்கவுண்டர் என்பவருக்கு மகனாகப் பிறந்தார் ஏ.கே.மூர்த்தி. வன்னியர் இனத்தைச் சேர்ந்தவர். சொந்த கிராமத்திலேயே பள்ளிப்படிப்பை முடித்த மூர்த்தி, அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் சமூகவியல் பிரிவில் எம்.ஏ பட்டம் பெற்றார். பொது வாழ்க்கையில் ஈடுபடுவதற்குமுன்பு சென்னையில் சொந்தமாகக் காய்கறி மற்றும் பழங்கள் வணிகம் செய்தார். மூர்த்தியின் மனைவி பத்மினிதேவி. இவர்களுக்கு விஜயமகேஷ் என்ற ஒரு மகனும் சமித்ரா என்ற மகளும் உள்ளனர். மகன் லண்டனில் எல்.எல்.எம் சட்டப்படிப்பும் மகள் சென்னையில் பி.ஆர்க் எனும் கட்டடக் கலையும் பயில்கின்றனர். சென்னையில் உள்ள தி.நகரில் குடும்பத்துடன் வசித்துவருகிறார்.
டாக்டர்.ராமதாஸ் மீதான ஈர்ப்பால், பா.ம.க-வில் சாதாரண தொண்டனாக அடியெடுத்துவைத்தார். பின்னர், சென்னை மாநகர வட்டச் செயலாளராகப் பொறுப்பேற்ற மூர்த்தி படிப்படியாக உயர்ந்து தென் சென்னை மாவட்டச் செயலாளர், மாநில துணை பொதுச் செயலாளர், மாநில தொழிற்சங்கத் தலைவர் உட்பட பல்வேறு பொறுப்புகளை வகித்திருக்கிறார். தற்போது, வடக்கு மண்டல இணை பொதுச் செயலாளராக உள்ளார்.
செங்கல்பட்டு நாடாளுமன்றத் தொகுதியில் (மறுசீரமைப்புக்கு முன்பு) தொடர்ந்து இரண்டு முறை பா.ம.க சார்பில் வெற்றிபெற்றிருக்கிறார். மத்திய ரயில்வே துறை இணையமைச்சராகப் பதவி வகித்த மூர்த்தி, பா.ம.க. மக்களவைக் கொறடாவாகவும் பொறுப்பு வகித்திருக்கிறார்
ஏ.கே.மூர்த்தி, அவரது மனைவி ஏ.எம். பத்மினிதேவி, மகன் ஏ.கே.விஜய்மகேஷ், மகள் ஏ.கே.சமித்ரா ஆகியோரது பெயர்களில்
மொத்தம் ரூ.5 கோடியே 63 லட்சத்து 3 ஆயிரத்து 417 மதிப்பில் அசையும், அசையா சொத்துகள் இருப்பதாக அவரது
வேட்புமனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏ.கே.மூர்த்தி பெயரில் 26 லட்சத்து 69 ஆயிரத்து 80, அவரது மனைவி பெயரில் ரூ.26 லட்சத்து 69 ஆயிரத்து 80, மகன் பெயரில்
ரூ.23 லட்சத்து 72 ஆயிரத்து 418 கடன் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
8,29,61,484 ரூபாய் மதிப்பில் அசையும், அசையா சொத்துகளும் 77,10,578 ரூபாய்க்குக் கடன் இருப்பதாகவும் வேட்புமனுவில் தெரிவித்திருக்கிறார் மூர்த்தி.