கார்த்தி சிதம்பரத்தின் சொந்த ஊர், தமிழ்நாட்டிலுள்ள சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கந்தனூர். இவரது மனைவி டாக்டர் ஸ்ரீநிதி ரங்கராஜன். இவர்களுக்கு அதிதி நளினி சிதம்பரம் என்கின்ற ஒரு மகள் உள்ளார். இவரது தந்தை ப.சிதம்பரம் இந்தியாவின் நிதி அமைச்சராகவும், உள்துறை அமைச்சராகவும் பணியாற்றியவர்.
கார்த்தி சிதம்பரம் சென்னை எழும்பூரில் உள்ள டான் பாஸ்கோ பள்ளியில் படித்தார். பின்பு அமெரிக்காவின் டெக்சாஸ் பல்கலைக் கழகத்தில் வணிக மேலாண்மை பயின்றார் மற்றும் லண்டனில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் சட்டப் படிப்பை முடித்தார்.
கல்லூரி படிப்பை முடித்த பின்பு அரசியலில் ஈடுபட ஆரம்பித்தார். 2001 ஆம் ஆண்டு இவரது தந்தை ப.சிதம்பரம் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி காங்கிரஸ் ஜனநாயக பேரவை என்ற தனி கட்சியை அமைத்தார். கார்த்தி சிதம்பரம் இக்கட்சியின் பொதுச்செயலாளராகவும், தேர்தல் மேலாளராகவும் பணியற்றினார். 2014 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில், காங்கிரஸ் வேட்பாளராக சிவகங்கை மக்களவை தொகுதியில் போட்டியிட்டு தோல்வியுற்றார்.
வேட்பாளர் கார்த்தி, அவரது மனைவி டாக்டர் ஸ்ரீநிதி பெயரில் ரூ. 79 கோடியே 44 லட்சத்து 14 ஆயிரத்து 749 மதிப்பிலான அசையும், அசையா சொத்துக்கள் உள்ளன.
சொத்து மதிப்பு: அசையும் சொத்து மதிப்பு ரூ.24 கோடியே 13 லட்சத்து 73 ஆயிரத்து 168-ம், அசையா சொத்து மதிப்பு ரூ.22 கோடியே 88 லட்சத்து 89 ஆயிரத்து 30. வங்கி கையிருப்பு ரூ.3 லட்சத்து 54 ஆயிரத்து 619 என்றும், தன் மீது சி.பி.ஐ.யில் 2 வழக்குகளும், அமலாக்கத்துறையில் 2 வழக்குகளும் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
கார்த்தி சிதம்பரத்தின் மனைவி ஸ்ரீநிதி பெயரில் உள்ள அசையும் சொத்துகளின் மதிப்பு ரூ.9 கோடியே 37 லட்சத்து 99 ஆயிரத்து 140, அசையா சொத்து மதிப்பு ரூ.22 கோடியே 96 லட்சத்து 67 ஆயிரத்து 413 உள்ளதாக கூறியுள்ளார். அவரிடம் கையிருப்பாக ரூ.3 லட்சத்து 31 ஆயிரத்து 106 உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.