வாக்காளர்கள் | : | | 1443436 |
ஆண் | : | | 720770 |
பெண் | : | | 722481 |
திருநங்கை | : | | 185 |
வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் பின்வருமாறு:
1. ஜி.கலியமூர்த்தி - பகுஜன் சமாஜ் கட்சி-3943
2. ரவிக்குமார்.டி - திராவிட முன்னேற்ற கழகம்-559585-வெற்றி
3. பி.அபிராமி - தமிழ்நாடு இளைஞர் கட்சி-4739
4. அன்பின் பொய்யமொழி - மக்கள் நீதி மய்யம்-17891
5. பிரகலதா - நாம் தமிழர் கட்சி-24609
6. எஸ்.ராஜா - அகில இந்திய மக்கள் கழகம்-2532
7. வடிவேல் ராவணன் - பட்டாளி மக்கள் கட்சி-431517
8. என்.வானூர் கணபதி - அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்-58019
9. டி.அன்பழகன் - சுயேச்சை-1314
10. கே.அரசன் - சுயேச்சை -12781
11. கதிர்வேல்.எம் - சுயேச்சை-995
12. தேசிங்கு - சுயேச்சை-1350
13. ராஜசேகரன் - சுயேச்சை-4322
14.நோட்டா-11943
வாக்காளர்கள் எவ்வளவு?
கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியில் 14 லட்சத்து 27 ஆயிரத்து 874 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 7 லட்சத்து 14 ஆயிரத்து 211 பேரும், பெண் வாக்காளர்கள் 7 லட்சத்து 13 ஆயிரத்து 480 பேரும், மூன்றாம் பாலினத்தினர் 183 பேரும் உள்ளனர்.
சட்டமன்ற தொகுதிகள் வாரியாக வாக்காளர்கள் எண்ணிக்கை விவரம் வருமாறு:-
விழுப்புரம்....................2,46,290
விக்கிரவாண்டி................2,20,882
வானூர் (தனி)................2,17,665
திண்டிவனம் (தனி)...........2,18,725
உளுந்தூர்பேட்டை.............2,79,862
திருக்கோவிலூர்...............2,44,450
பச்சை பசேலென பசுமை நிறைந்த வயல்வெளிகள் அதிகம் கொண்டது விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதி. 2007-ம் ஆண்டில் நடைபெற்ற தொகுதி மறுசீரமைப்புக்கு பிறகு தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 13 நாடாளுமன்ற தொகுதிகளில் விழுப்புரம் தொகுதியும் ஒன்று. இது தனி தொகுதியாகும்.
7 முறை காங்கிரஸ் வெற்றி
தொகுதி மறுசீரமைப்புக்கு முன்பு திண்டிவனம் நாடாளுமன்ற தொகுதி என்ற பெயருடன் இருந்தது. அப்போது இதில் திண்டிவனம், வானூர் (தனி), கண்டமங்கலம் (தனி), விழுப்புரம், முகையூர், திருநாவலூர் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் இருந்தன.
கடந்த 1951-ல் நடைபெற்ற தேர்தலில் உழவர் உழைப்பாளர் கட்சி சார்பில் போட்டியிட்ட முனுசாமி வெற்றி பெற்றார். 1952-ல் நடைபெற்ற தேர்தலில் அதே கட்சியை சேர்ந்த ஜெயராமன் வெற்றி வாகை சூடினார். 1957&ல் நடைபெற்ற தேர்தலில் சண்முகம் (சுயேச்சை), 1962-ல் வெங்கடசுப்பு ரெட்டியார் (காங்கிரஸ்), 1967&ல் டி.டி.ஆர். நாயுடு (தி.மு.க.), 1971 மற்றும் 1977-ம் ஆண்டுகளில் லட்சுமிநாராயணன் (காங்கிரஸ்), 1980 மற்றும் 1984-ம் ஆண்டுகளில் எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சி (காங்கிரஸ்), 1989-ல் எஸ்.எஸ்.ஆர்.ராமதாஸ் (காங்கிரஸ்), 1991-ல் திண்டிவனம் கே.ராமமூர்த்தி (காங்கிரஸ்) ஆகியோர் வெற்றி பெற்றனர். தொடர்ந்து 7 முறை வென்று காங்கிரசின் அசைக்க முடியாத கோட்டையாக திண்டிவனம் தொகுதி இருந்தது.
அதனை தொடர்ந்து 1996-ல் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட டி.ஜி.வெங்கட்ராமன் வெற்றி பெற்றார். 1998 மற்றும் 1999&ல் செஞ்சி என்.ராமச்சந்திரன் (ம.தி.மு.க.), 2004-ல் கோ.தன்ராஜ் (பா.ம.க.) ஆகியோர் வெற்றி பெற்றனர்.
தொகுதி மறுசீரமைப்புக்கு பின்னர் திண்டிவனம் தொகுதியில் இடம் பெற்றிருந்த கண்டமங்கலம், திருநாவலூர், முகையூர் ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகள் நீக்கம் செய்யப்பட்டு புதிதாக உருவாக்கப்பட்ட விக்கிரவாண்டி, திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதிகளும், கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் இடம் பெற்றிருந்த உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதியும் சேர்த்து விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதி (தனி) உருவாக்கப்பட்டது.
தற்போது விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியில் விழுப்புரம், வானூர் (தனி), திண்டிவனம் (தனி), விக்கிரவாண்டி, உளுந்தூர்பேட்டை, திருக்கோவிலூர் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் இடம் பெற்றுள்ளன.தொகுதி மறுசீரமைப்புக்கு பிறகு கடந்த 2009-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட எம்.ஆனந்தன் வெற்றி பெற்றார்.
கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட எஸ்.ராஜேந்திரன் 4 லட்சத்து 82 ஆயிரத்து 704 வாக்குகள் பெற்று தன்னை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் கோ.முத்தையனை விட 1 லட்சத்து 93 ஆயிரத்து 367 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அந்த தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் டாக்டர் முத்தையன் 2 லட்சத்து 89 ஆயிரத்து 337 வாக்குகளும், தே.மு.தி.க. வேட்பாளர் உமாசங்கர் 2 லட்சத்து 9 ஆயிரத்து 663 வாக்குகளும் பெற்றனர்.
தொடரும் பிரச்சினைகள்
விழுப்புரம் தொகுதியை பொறுத்தவரை ஏழை, எளிய மக்கள் அதிகம் வசிக்கும் மிகவும் பின்தங்கிய பகுதியாகும். இங்கு வேலை வாய்ப்பு வழங்கக்கூடிய அளவில் ஒரு சிறு தொழிற்சாலை கூட இல்லை. மேலும் விழுப்புரம் மாவட்ட விவசாயத்திற்கு முக்கிய நீர்ஆதாரமாக விளங்கும் நந்தன் கால்வாய் திட்டம் இன்னும் நிறைவேறாத நீண்டகால கனவாகவே இருந்து வருகிறது.
தென்பெண்ணை ஆற்றில் தடுப்பணை, திருச்சி& சென்னை தேசிய நெடுஞ்சாலையில் விபத்துகளை தடுக்க முண்டியம்பாக்கம், எல்லீஸ்சத்திரம் பகுதியில் மேம்பாலம் அமைத்து கொடுப்பது, விழுப்புரம் மாவட்டத்தில் மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளியை கொண்டு வருவேன் என பல்வேறு வாக்குறுதிகளை கடந்த தேர்தலின்போது அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட ராஜேந்திரன் கொடுத்தார். இவற்றில் கேந்திரிய வித்யாலயா பள்ளியை விக்கிரவாண்டியில் அமைக்க அதற்கான நிலம் தேர்வு செய்யும் பணிகள் மட்டும் தொடங்கியுள்ளது.
கண்டமங்கலத்தில் ரெயில்வே உயர்மட்ட மேம்பாலம் அமைக்க டெண்டர் விடப்பட்டுள்ள நிலையில் விரைவில் அதற்கான பணிகள் தொடங்க உள்ளது. பெரும்பாலான முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றிக்கொடுக்காததால் தொகுதி மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.குறிப்பாக திண்டிவனம் நகர மக்களின் பல ஆண்டுகால கோரிக்கையான புதிய பஸ் நிலைய பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை.
விழுப்புரத்தில் பாதாள சாக்கடை திட்டம் கொண்டு வந்தும் கழிவுநீர் செல்ல வழியின்றி ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. விழுப்புரம் நகரில் தீர்க்கப்படாத போக்குவரத்து நெரிசல் பிரச்சினை, விக்கிரவாண்டி வடக்கு புறவழிச்சாலையில் விபத்துகளை தடுக்க மேம்பாலம் அமைத்துக் கொடுக்காதது, உளுந்தூர்பேட்டையில் 2-ம் உலகப்போரின்போது பயன்படுத்தப்பட்ட விமான ஓடுதளத்தை மறுசீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வரவில்லை. தற்போது அது ஆக்கிரமிப்பில் உள்ளது. திருக்கோவிலூர் வழியாக செல்லும் அனைத்து எக்ஸ்பிரஸ் ரெயில்களும் திருக்கோவிலூர் ரெயில் நிலையத்தில் நின்றுசெல்ல நடவடிக்கை எடுக்கவில்லை, திருக்கோவிலூர் மேம்பாலத்தில் இருந்து நகருக்குள் வருவதற்கு வசதியாக அணுகுசாலை அமைக்கப்படவில்லை.
இதை விட முக்கியமாக இந்த தொகுதியில் பிரதானமாக இருப்பது கரும்பு விவசாயம். இங்குள்ள சர்க்கரை ஆலைகளுக்கு அனுப்பிய கரும்புகளுக்கு உடனுக்குடன் பணம் வழங்காமல் பல மாதங்களாக நிலுவை வைத்துள்ளனர். மத்திய அரசின் ஆதரவு விலையையும் ஆலை நிர்வாகத்தினர் கொடுக்க மறுக்கின்றனர். இவற்றை வழங்கக்கோரி கரும்பு விவசாயிகள் பல்வேறு கட்ட தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறபோதிலும் இவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படாமல் கிடப்பிலேயே உள்ளது. இவ்வாறு குறைகளுக்கு பஞ்சமில்லாமல் அடுக்கிக்கொண்டே போகலாம்.
விழுப்புரம் தொகுதியில் வன்னியர்கள், ஆதிதிராவிடர்கள் அதிகமாக வசிக்கின்றனர். ஆனால் இந்த தொகுதி தனித்தொகுதியாக இருப்பதால் எந்த சமூகமும் ஒரே கட்சியை சார்ந்து இருக்கவில்லை. கட்சிகளுக்காக வாக்குகள் சிதறி விடுமே தவிர சாதிக்காக வாக்குகள் கிடைப்பது அரிது என்பதே பொதுவான கருத்தாக இருக்கிறது.
2016 சட்டமன்ற தேர்தல் முடிவுகள்
2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலின்போது விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியில் இடம் பெற்றிருக்கும் 6 சட்டசபை தொகுதிகளில் கட்சிகளுக்கு கிடைத்த ஓட்டுகள் விவரம் வருமாறு:-
விழுப்புரம் (அ.தி.மு.க. வெற்றி)
சி.வி.சண்முகம் (அ.தி.மு.க.).......................69,421
எஸ்.அமீர்அப்பாஸ் (இ.யூ.மு.லீக்)....................47,130
பழனிவேல் (பா.ம.க.)...............................36,456
எல்.வெங்கடேசன் (தே.மு.தி.க.).....................24,907
விக்கிரவாண்டி (தி.மு.க. வெற்றி)
கு.ராதாமணி (தி.மு.க.)...............................63,757
ஆர்.வேலு (அ.தி.மு.க.)...............................56,845
சி.அன்புமணி (பா.ம.க.)..............................41,428
ஆர்.ராமமூர்த்தி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி)......9,981
உளுந்தூர்பேட்டை (அ.தி.மு.க. வெற்றி)
இரா.குமரகுரு (அ.தி.மு.க.).................81,973
ஜி.ஆர்.வசந்தவேல் (தி.மு.க.)...............77,809
விஜயகாந்த் (தே.மு.தி.க.)...................34,447
கே.பாலு (பா.ம.க.)..........................20,233
திருக்கோவிலூர் (தி.மு.க. வெற்றி)
க.பொன்முடி (தி.மு.க.).....................93,837
ஜி.கோதண்டராமன் (அ.தி.மு.க.)...........52,780
பாலசக்தி (பா.ம.க.)........................18,822
டி.ஜி.கணேஷ் (த.மா.கா)...................15,045
திண்டிவனம் (தி.மு.க. வெற்றி)
சீத்தாபதிசொக்கலிங்கம் (தி.மு.க.).........61,879
எஸ்.பி.ராஜேந்திரன் (அ.தி.மு.க.)..........61,778
ஏ.காளிதாஸ் (பா.ம.க.)....................29,848
எம்.உதயகுமார் (தே.மு.தி.க.).............14,928
வானூர் (அ.தி.மு.க. வெற்றி)
எம்.சக்கரபாணி (அ.தி.மு.க.)....................64,167
ஆர்.மைதிலி ராஜேந்திரன் (தி.மு.க.).............53,944
பி.சங்கர் (பா.ம.க.)..............................27,240
டி.ரவிக்குமார் (விடுதலை சிறுத்தைகள் கட்சி).....23,873
வெற்றி யார் கையில்?
திண்டிவனம் நாடாளுமன்ற தொகுதியாக இருந்தபோது காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக திகழ்ந்த இந்த தொகுதி, தற்போது தொகுதி மறுசீரமைப்பிற்கு பிறகு கடந்த 2009 மற்றும் 2014-ம் ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் அ.தி.மு.க. வெற்றி பெற்று அசத்தியுள்ளது. அதேநேரத்தில் கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் விழுப்புரம், உளுந்தூர்பேட்டை, வானூர் ஆகிய தொகுதிகளில் அ.தி.மு.க.வும், விக்கிரவாண்டி, திருக்கோவிலூர், திண்டிவனம் ஆகிய தொகுதிகளில் தி.மு.க.வும் வெற்றி பெற்று சம பலத்துடன் இருந்தன.
தற்போது இந்த தொகுதியில் பிரதான கட்சிகளான அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. வேட்பாளராக வடிவேல் ராவணனும், தி.மு.க. கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளராக துரை.ரவிக்குமாரும், அ.ம.மு.க. சார்பில் கணபதியும் அறிவிக்கப்பட்டுள்ளனர். மிகக்கடுமையான போட்டியை சந்தித்துள்ள இந்த தொகுதியை கைப்பற்ற வேட்பாளர்கள் கடுமையாக போராட வேண்டும்.
கடந்த 5 ஆண்டுகளில் விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியில் 59 ஆயிரத்து 539 வாக்காளர்கள் அதிகரித்துள்ளனர். எனவே இளம் வாக்காளர்கள் அளிக்கப்போகும் முதல் வாக்கு வெற்றியை தீர்மானிக்கும் முக்கிய சக்தியாக இருக்கலாம். விழுப்புரம் தொகுதி எம்.பி.யாக இருந்த ராஜேந்திரன் சமீபத்தில் திண்டிவனத்தில் நடந்த கார் விபத்தில் மரணம் அடைந்துவிட்ட நிலையில் அவரது 5 ஆண்டுகால செயல்பாடு குறித்து பொதுமக்களிடம் கேட்டபோது, தொகுதி பக்கமே வந்ததில்லை. எப்போதாவது நடைபெறும் அரசு விழா, கட்சி விழாக்களில் மட்டும் அவரை பார்க்க முடிந்தது. அவரது சொந்த ஊருக்கு அருகில் உள்ள திருவக்கரை கிராமத்தை தத்தெடுத்து அங்கு மட்டும் சில வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்றியுள்ளார். ஆனால் அவர் உறுதியளித்த பெரும்பாலான திட்டங்களை தொகுதிக்கு நிறைவேற்றித் தரவில்லை என்றனர்.
2014-ம் ஆண்டு தேர்தல் முடிவு எப்படி?
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் விழுப்புரம் (தனி) தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட எஸ்.ராஜேந்திரன் வெற்றி பெற்றார். முதல் 5 இடங்களை பிடித்தவர்கள் விவரம் வருமாறு:-
எஸ்.ராஜேந்திரன் (அ.தி.மு.க.).....................4,82,704
கோ.முத்தையன் (தி.மு.க.).........................2,89,337
கு.உமாசங்கர் (தே.மு.தி.க.)........................2,09,663
கே.ராணி (காங்கிரஸ்)...............................21,461
கோ.ஆனந்தன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி).....17,408