கட்சி: விடுதலை சிறுத்தைகள் கட்சி
கடைசி மனிதர்களுக்கான அரசியல் கட்சியே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியாகும். காலமெல்லாம் காடு கழனிகளில் உழைப்பதற்காகவும் தேர்தல் காலத்தில் வரிசையில் காத்திருந்து வாக்களிப்பதற்காகவும் மட்டுமே பிறந்தவர்கள் என நெடுங்காலமாய் வஞ்சிக்கப்பட்ட மக்களை அமைப்பாக்கவும், அரசியல் சக்தியாகவும் வளர்த்தெடுக்க வேண்டும் என்கிற அடிப்படையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இயங்கி வருகிறது. கடந்த 1999 ம் ஆண்டு நடைப்பெற்ற நாடாளுமன்ற பொதுத் தேர்தலின் போது, முதன் முதலாய் விடுதலைச் சிறுத்தைகள் அரசியல் களத்தில் அடியயடுத்து வைத்தது. 1990 முதல் 1999 வரையில் தேர்தல் புறக்கணிப்பை கடைப்பிடித்து வந்தது. 1999 ல் தேர்தல் அரசியலில் ஈடுபட்டாலும் கடந்த 2-3-2006 அன்றுதான் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இந்திய தேர்தல் ஆணையத்தில் அரசியல் கட்சியாய் பதிவுப் பெற்றது. அதற்கு முன்னதாக விடுதலைச் சிறுத்தைகள் என்னும் பெயரிலேயே சமூக அரசியல் தளங்களில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக செயலாற்றி வந்தது.1982-ஆம் ஆண்டு மதுரை தமுக்கம் மைதானத்தில் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் துணைவியார் சவீதா அம்மையார் அவர்கள் தலைமையில் பாரதிய தலீத் பாந்தர் இயக்கம் தொடங்கப்பட்டது. அவ்விழாவில் அவ்வியக்கத்தின் இந்திய பொதுச்செயலாளர் திரு.இராம்தாசு அத்வாலே கலந்துக் கொண்டார். வழக்குரைஞர் அ.மலைச்சாமி அவர்கள் அவ்வியக்கத்தின் தமிழ்நாடு மாநில அமைப்பாளராக பொறுப்பேற்று செயல்பட்டு வந்தார். திடிரென்று 1989-ஆம் ஆண்டு செப்டம்பர் 14 அன்று அமைப்பாளர் திரு.அ.மலைச்சாமி அவர்கள் காலமாகிவிட்டார். அவருடைய மறைவையயாட்டி முன்னணி தோழர்கள் சிலரைக் கொண்டு 1989-ம் ஆண்டு திசம்பரின் இறுதியில் வீரவணக்க அஞ்சலி ஒருங்கிணைக்கப்பட்டது. நிகழ்ச்சியில் பங்கேற்ற பாரதிய தலீத் பாந்தர் இயக்கத்தின் முன்னணி தோழர்கள் இன்றைய தலைவர் தொல்.திருமாவளவன் அவர்களை அவ்வியக்கத்தை தலைமை ஏற்று நடத்தும்படிகேட்டுக் கொண்டார்கள். அவ்வேண்டுகோளை முதலில் ஏற்க தயங்கினாலும் பின்னர் 1990 சனவரி 21 அன்று கூடிய பாரதிய தலீத் பாந்தர் இயக்க நிர்வாகிகள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொள்ள முன் வந்தார். அவ்வியக்கத்தின் அமைப்பாளர் பொறுப்பை ஏற்றுக் கொண்ட திருமாவளவன் பாரதிய தலீத் பாந்தர் இயக்கம் என்று அழைக்கப்பட்டு வந்ததை மாற்றி இந்திய ஒடுக்கப்பட்ட சிறுத்தைகள் என்று அழைத்தார். 1990-ம் ஆண்டு ஏப்ரல் 14-ம் நாள் இயக்த்தின் முதல் கொடியை மதுரை கோ.புதூர் பேருந்து நிலையம் அருகில் ஏற்றி வைத்தார். இன்று எமது இயக்கக் கொடி நாளை நமது தேசியக் கொடி என்ற முழக்கத்தோடு இயக்கக் கொடியை அறிமுகம் செய்தார். பின்னர் 1991-ம் ஆண்டு முதல் இந்திய ஓடுக்கப்பட்டோர் சிறுத்தைகள் என்னும் பெயரை விடுதலைச் சிறுத்தைகள் என்று மாற்றி அறிவித்தார் இணையதளம் : vck.in
போட்டி: 2
வெற்றி: 2