வேலூர் மக்களவை தேர்தல் : அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் 11220 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை
வேலூர் மக்களவை தேர்தல் : அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் 11220 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை
பதிவு: ஆகஸ்ட் 09, 2019 00:00 AM மாற்றம்: ஆகஸ்ட் 09, 2019 11:12 AM
வேலூர், 

வேலூர் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் கடந்த 5-ந் தேதி நடைபெற்றது. இதில் அ.தி.மு.க. சார்பில் ஏ.சி.சண்முகமும், தி.மு.க. சார்பில் கதிர்ஆனந்தும், நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமியும் இவர்கள் உள்பட 28 பேர் போட்டியிட்டனர். 

ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.  காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணும் பணி நடைபெற்றது. தபால் வாக்குகள் எண்ணிக்கையில் அதிமுக வேட்பாளர் ஏ.சி சண்முகம் முன்னிலை பெற்று இருந்தார்.  முதல் சுற்று நிலவரத்தில், அதிமுகவை திமுக பின்னுக்கு தள்ளியது. திமுக வேட்பாளர் 34,052 வாக்குகளும் அதிமுக கூட்டணி வேட்பாளர் 31,194 வாக்குகளும் பெற்று இருந்தார்.  

தொடர்ந்து வாக்குகள் முன்னிலை விவரம் மாறிக்கொண்டே இருப்பதால், வேலூரில் அதிமுக திமுக இடையே கடும் போட்டி நிலவுகிறது.

தற்போதைய நிலவரப்படி  ஏசி சண்முகம் 178138  வாக்குகளும், கதிர் ஆனந்த  166918  வாக்குகளும்  நாம் தமிழர் கட்சி தீப லட்சுமி 8969  வாக்குகளும் பெற்று உள்ளனர். 

திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தை விட, அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் 11220 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
மேலும் செய்திகள்
சட்டம்-ஒழுங்கு பற்றி பேச மு.க.ஸ்டாலினுக்கு தகுதி இல்லை: வேலூர் பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு
நெல்லை முன்னாள் மேயரை கொன்றவர் தி.மு.க.வை சேர்ந்தவர் என்றும், எனவே சட்டம்-ஒழுங்கு பற்றி பேச மு.க.ஸ்டாலினுக்கு தகுதி இல்லை என்றும் வேலூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
பதிவு: ஆகஸ்ட் 03, 2019 00:00 AM மாற்றம்: ஆகஸ்ட் 03, 2019 04:44 AM
வேலூர்,

வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளராக ஏ.சி.சண்முகம் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி வேலூர் மாவட்டம் அணைக்கட்டில் நேற்று நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

எங்கே பார்த்தாலும் ஊழல், ஊழல் என்று மு.க.ஸ்டாலின் சொல்கிறார். ஆனால் ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே ஆட்சி, தி.மு.க. ஆட்சிதான். தி.மு.க. ஆட்சி அதிகாரத்தில் இருக்கும்பொழுது, நீங்கள் ஊழல் செய்யவில்லையென்றால், வேலூரில் எப்படி கட்டுக்கட்டாக ரூ.10 கோடி பணம் வரும்? எப்படி உங்களுக்கு வேண்டியவர் வீட்டிலிருந்து பணம் எடுக்க முடியும்?

எல்லா கட்சியிலும் அந்தந்த கட்சியின் தலைவர்கள், மகன்கள் இருப்பது வாடிக்கை. அவர்கள் கட்சியில் பொறுப்பிற்கு வருவது தவறல்ல, கட்சி தலைவராக வருவதைத் தான் வாரிசு அரசியல் என்று சொல்கிறோம். கருணாநிதி இருந்தார், அவருக்குப் பிறகு மு.க.ஸ்டாலின், அதற்குப் பிறகு உதயநிதி வந்திருக்கின்றார். வாரிசு அரசியல் தான் இருக்கக்கூடாது என்கின்றோமே தவிர அவருடைய மகன் தேர்தலில் நிற்பதையோ மற்றவர்கள் தேர்தலில் நிற்பதையோ நாங்கள் பொருட்படுத்தவில்லை.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சட்டம்-ஒழுங்கைப் பற்றியும், பெண்கள் பாதுகாப்பு பற்றியும் பேசி வருகிறார். நெல்லை முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி, அவரது கணவர், பணிப்பெண் ஆகியோர் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு அஞ்சலி செலுத்த சென்ற மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சரியில்லை என கூறுகிறார்.

ஆனால் உமா மகேஸ்வரி உள்பட 3 பேரை கொலை செய்தவர்கள் தி.மு.க பிரமுகர் சீனியம்மாள் மகன் கார்த்திகேயன் என்பதை இரண்டே நாட்களில் கண்டறியப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். எனவே சட்டம்-ஒழுங்கைப் பற்றி பேச மு.க.ஸ்டாலினுக்கு எந்த தகுதியும் இல்லை.

தி.மு.க.வை சேர்ந்தவர்கள் பிரியாணி கடைக்குச் சென்று உணவு அருந்திவிட்டு பணம் கேட்டால், அவர்களை அடித்து உதைப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளார்கள். ஆனால், தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் அந்த பிரியாணி கடைக்குச் சென்று மு.க.ஸ்டாலின் கட்டப்பஞ்சாயத்து செய்கிறார். இவர் கட்சித்தலைவரா அல்லது கட்டப்பஞ்சாயத்து தலைவரா என்பதை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்.

இந்த ஆட்சியை கலைக்க தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பல முறை முயன்றும், அவரால் முடியவில்லை. எவ்வளவோ முயற்சிகள் எடுத்தாலும், அ.தி.மு.க. ஆட்சியை கலைக்க முடியாது. எங்களது சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எவ்வளவோ ஆசை வார்த்தைகள் கூறினாலும், மு.க.ஸ்டாலினால் ஒன்றும் செய்ய முடியாது.

எங்கள் கட்சியைச் சேர்ந்த 18 சட்டமன்ற உறுப்பினர்கள் சிலரது ஆசை வார்த்தைகளை நம்பி, எங்கள் இயக்கத்தை விட்டு வெளியேறியதன் காரணமாக, இன்றைக்கு ஆதரவற்ற நிலையில் இருக்கிறார்கள். உண்மை தான் வெல்லும். நிஜம் தான் ஜெயிக்கும், நீதி தான் வெல்லும்.

எனது தலைமையிலான அரசு பொறுப்பேற்ற கடந்த இரண்டரை ஆண்டுகளில் தி.மு.க.வின் தூண்டுதலின் பேரில் எண்ணற்றப் போராட்டங்கள் பல்வேறு அமைப்புகள் மூலம் நடத்தப்பட்டன. போராட்டம் செய்த அமைப்புகளை அழைத்து சமாதானம் பேசி, போராட்டத்தை கைவிடச் செய்து வெற்றி கண்ட அரசு அம்மாவின் அரசு.

இஸ்லாமிய சமுதாய மக்களுக்கு என்றும் பாதுகாப்பு அரணாக இருப்பது அ.தி.மு.க தான். இஸ்லாமிய சமுதாய மக்கள் எவ்வித அச்சுறுத்தலும் இன்றி நிம்மதியாக வாழ உகந்த மாநிலமாக தமிழ்நாடு திகழ்ந்து வருகிறது.

இந்த அணைக்கட்டுத் தொகுதிக்குட்பட்ட மேல் அரசம்பட்டு கிராமத்தில் ஒரு அணை கட்ட வேண்டும் எனவும், வேலூர் மாவட்டம் மிகப்பெரிய மாவட்டமாக இருப்பதால் அதனை பிரிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வரப்பேற்றுள்ளது. இந்த கோரிக்கைகள் அரசின் பரிசீலனையில் உள்ளன என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
மேலும் செய்திகள்
அமர்நாத் யாத்திரையை முடித்த பக்தர்கள் காஷ்மீரை விட்டு உடனடியாக வெளியேற உத்தரவு
அமர்நாத் யாத்திரையை முடித்த பக்தர்கள் காஷ்மீரை விட்டு உடனடியாக வெளியேறுமாறு அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
பதிவு: ஆகஸ்ட் 02, 2019 00:00 AM மாற்றம்: ஆகஸ்ட் 02, 2019 18:52 PM
ஜம்மு காஷ்மீரில் உள்ள அமர்நாத் யாத்திரை பயணிகள், சுற்றுலாப் பயணிகள் உடனடியாக மாநிலத்தை விட்டு வெளியேறும்படி அம்மாநில அரசு  கேட்டுக்கொண்டுள்ளது. அம்மாநில உளவுத்துறை வெளியிட்டுள்ள அறிவுரையில், பயங்கரவாத அச்சுறுத்தல் இருப்பதாகவும், அதனால் பக்தர்கள் தரிசனம் முடிந்ததும் உடனடியாக வெளியேறுமாறும் அறிவுரை வழங்கியுள்ளது.

“அமர்நாத் யாத்திரையை குறிவைத்து பயங்கரவாத அச்சுறுத்தல்கள் உள்ளது என்பதை சமீபத்திய உளவுத்துறை உள்ளீடுகள் காட்டுகிறது. காஷ்மீர் பள்ளத்தாக்கில் நிலவும் பாதுகாப்பு நிலைமையை கருத்தில் கொண்டு சுற்றுலாப் பயணிகள் மற்றும் அமர்நாத் யாத்திரை பக்தர்களின் பாதுகாப்பு கருதி பள்ளத்தாக்கில் அவர்கள் தங்குவதை உடனடியாகக் குறைத்து, விரைவில் சொந்த ஊர் திரும்புவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறது,” என ஜம்மு காஷ்மீர் மாநில அரசு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமர்நாத் யாத்திரை பக்தர்களை குறிவைத்து வெடிகுண்டு தாக்குதலை மேற்கொள்ளுமாறு மாநிலத்தில் உள்ள பயங்கரவாதிகளுக்கு  உத்தரவிடப்பட்டுள்ளது என்ற உளவுத்துறை தகவல்கள் குறித்து ராணுவம் மற்றும் மாநில காவல்துறை அதிகாரிகள் பேசிய சில நிமிடங்களிலேயே உள்துறையின் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.
மேலும் செய்திகள்