தமிழக மக்களின் நலனுக்காக எடப்பாடி பழனிசாமி மேற்கொண்ட அரிய முயற்சிகளை அழிக்க முயற்சிக்கிறார் மு.க.ஸ்டாலின் மீது அமைச்சர் டி.ஜெயக்குமார் குற்றச்சாட்டு
தமிழக மக்களின் நலனுக்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மேற்கொண்ட அரிய முயற்சிகளை மு.க.ஸ்டாலின் அழிக்க முயற்சிக்கிறார் என்று அமைச்சர் டி.ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.
பதிவு: ஜூன் 19, 2019 00:00 AM மாற்றம்: ஜூன் 19, 2019 05:18 AM
சென்னை,

இதுகுறித்து மீன்வளம், பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழக முதல்-அமைச்சர் டெல்லி பயணத்தின்போது தமிழக நலனுக்காக முன்வைத்த உரிமைக்குரலை விமர்சிப்பது, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினின் குதர்க்க புத்தியையும், கோயபல்ஸ் முயற்சியையுமே காட்டுகிறது.

அங்கு நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொண்ட முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாட்டின் தேவைகளை பற்றியும், உடனடியாக தமிழ்நாட்டில் நிறைவேற்றப்பட வேண்டிய திட்டங்களுக்கு மத்திய அரசு உதவ வேண்டியதன் அவசியத்தை பற்றியும், விரிவாக தனக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தைவிட கூடுதல் நேரத்தில் உரையாற்றியுள்ளார்.

கூட்டம் நடப்பதற்கு முன்பு பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து தமிழகத்தின் உடனடி தேவைகளை தொகுத்து, கோரிக்கை மனு ஒன்றை யும் அளித்திருக்கிறார். அந்த கோரிக்கைகளின் தொகுப்பு ஆகியவற்றையெல்லாம் மு.க.ஸ்டாலின் தெரிந்து கொள்ளாமல், தனது கட்சிக்காரர்களின் அராஜகத்தை மூடி மறைக்கவும், தமிழக மக்களின் நலனுக்காக முதல்-அமைச்சர் மேற்கொண்ட அரிய முயற்சிகளை மக்கள் பார்வையில் இருந்து அழிக்க முயற்சிக்கும் வண்ணம், வீண் அவதூறு பரப்பும் அறிக்கை ஒன்றை மு.க.ஸ்டாலின் வெளியிட்டிருப்பது காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடு என்பதே உண்மை.

பிரதமரிடம் அளித்த கோரிக்கை மனுவில், கோதாவரி-காவிரி இணைப்புத் திட்டம், முல்லைப்பெரியாறு அணை பிரச்சினை, மேகதாதுவில் காவிரியின் குறுக்கே ஒருபோதும் அணை கட்டப்படக்கூடாது என்பதில் உறுதி, சென்னை பசுமை விமான நிலையம், சென்னை மெட்ரோ ரெயில் - கட்டம் 2, தமிழ்நாட்டிற்கான நிலுவை மானியங்கள் கோருதல், உள்ளாட்சி அமைப்புகளுக்கான மானியத்தை விடுவித்தல், சரக்கு மற்றும் சேவை வரி இழப்பீடு, நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு உள்ளிட்ட அனைத்து கோரிக்கைகளையும் பிரதமரிடம், முதல்- அமைச்சர் விளக்கிக் கூறியிருக்கிறார்.

அதோடு, மத்திய உள்துறை மந்திரி, மத்திய நிதித்துறை மந்திரி, தரைவழிப் போக்குவரத்துத்துறை மற்றும் நீர் மேலாண்மைத்துறை மந்திரி ஆகியோரையும் சந்தித்து, தமிழ்நாட்டிற்கு தேவையான திட்டங்களை விரைந்து நிறைவேற்ற உதவ வேண்டும் என்றும் முதல்-அமைச்சர் கேட்டுக்கொண்டார். முதல்- அமைச்சர் வலியுறுத்திய காரணத்தால், கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்ற ஆவண செய்வதாகவும் அவரிடம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த உண்மைகளையெல்லாம் மூடி மறைத்து, தனது தி.மு.க. கட்சியின் நிர்வாகிகள் நாகர்கோவிலில் நடத்திய அராஜகத்தையும், சட்டத்தை மீறிய செயல்களையும் மக்கள் பார்வையிலிருந்து மறைத்துவிடும் நோக்கத்திலும், சிங்கப்பூர் செல்லும் அவசரத்திலும் முழு உண்மையையும் தெரிந்துகொள்ளாமல் மு.க.ஸ்டாலின் அவதூறு பரப்பி அறிக்கை வெளியிட்டிருப்பது கண்டிக்கத்தக்கது.

ராகுல்காந்தி கர்நாடக தேர்தல் பிரசாரத்தின்போது, மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டப்படும் என்றும், தமிழ்நாட்டு மக்கள் நலனுக்காக 50 ஆண்டுகாலம் போராடி அண்மையில் அமைக்கப்பட்ட காவிரி மேலாண்மை ஆணையம் கலைக்கப்படும் என்றும் பேசியதை இதுநாள்வரை மு.க. ஸ்டாலின் கண்டுகொள்ளவில்லை.

அதைக் கண்டிக்காமலும் இருக்கும் அவர், தமிழ்நாட்டு மக்களுக்காக அயராது பாடுபடும் முதல்-அமைச்சரைப் பற்றி பேசுவதற்கு அறுகதை இல்லை. நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்-அமைச்சர் ஆற்றிய உரையையும், பிரதமரிடம் அளிக்கப்பட்ட கோரிக்கை ஆவணத்தையும் சிங்கப்பூரிலிருந்து திரும்பி வந்ததும் நிதானமாக மு.க.ஸ்டாலின் படித்துப்பார்த்து தெளிவு பெறவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
2019 நாடாளுமன்ற தேர்தலில் ரூ.60 ஆயிரம் கோடி செலவு - சிஎம்எஸ் ஆய்வு
நடந்து முடிந்த 2019 நாடாளுமன்ற தேர்தலுக்காக மொத்தமாக 60 ஆயிரம் கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ளதாக சிஎம்எஸ் என்ற தனியார் ஆய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.
பதிவு: ஜூன் 04, 2019 00:00 AM மாற்றம்: ஜூன் 04, 2019 11:44 AM
புதுடெல்லி

தேர்தலில் தான் கணக்கில் வராத பணம், கணக்கில் வந்த பணம், கருப்பு பணம்,  சட்டத்திற்கு உட்பட்ட பணம், சட்டவிரோதமான பணம் என பணம் வாரி இறைக்கப்படும். 

கடந்த 2014-ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் 30 ஆயிரம் கோடி செலவு செய்யப்பட்டதாக டெல்லியை சேர்ந்த ஆராய்ச்சி நிறுவனமான ஊடக ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

தேர்தலுக்கு உத்தேச மதிப்பீடு ரூ.7,000-8,000 கோடி மட்டுமே இருந்த போதிலும், மீதமுள்ள 27,000 கோடி ரூபாய் கணக்கில் வராத பணமாக இருப்பதாக ஆய்வு தெரிவித்து இருந்தது.

2014-ஆம் ஆண்டு தேர்தலில் 533 பெரிய பாராளுமன்ற தொகுதிகளுக்கு  வேட்பாளர் ஒருவர் ரூ.70 லட்சமும், சிறிய பாராளுமன்ற தொகுதிகளுக்கு ரூ.54 லட்சமும் செலவிடலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது.

வேட்பாளர்கள் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்துள்ள வாக்குமூலத்தின் படி சராசரியாக ஒரு வேட்பாளர் ரூ.25 லட்சம் மட்டுமே செலவு செய்ததாக கூறி உள்ளார். ஆணையம் குறிப்பிட்ட தொகையை விட இது குறைவாக உள்ளது. 2014 தேர்தல்களில் வேட்பாளர்களின் செலவினம், தேர்தல் ஆணையம் நிர்ணயித்திருந்த தொகுப்பில் 58 சதவீதமாக இருந்தது.

அறிவிக்கப்பட்ட தொகையை விட 10 எம்.பி.க்கள் அதிகமாக செலவு செய்ததாக குறிப்பிட்டு உள்ளனர். பாரதீய ஜனதாவில் 4 எம்பிக்களும், திரிணாமுல் காங்கிரசில் 2 எம்பிக்களும், காங்கிரஸ், இந்திய தேசியவாத காங்கிரஸ், யூனியன் முஸ்லீம் லீக், அதிமுக ஆகிய கட்சிகளில் தலா ஒரு எம்.பி.யும் அதிகமாக செலவு செய்ததாக குறிப்பிட்டு இருந்தனர்.

நடந்து முடிந்த 2019 நாடாளுமன்ற தேர்தலுக்காக மொத்தமாக 60 ஆயிரம் கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ளதாக சிஎம்எஸ்  தனியார் ஆய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் 7 கட்டங்களாக 17வது மக்களவைக்கான தேர்தல்கள் நடத்தப்பட்டது. ஏப்ரல் 11ம் தேதி துவங்கி மே 19ம் தேதி வரையில் 542 தொகுதிகளில் தேர்தல் நடத்தப்பட்டு அதன் முடிவுகள் மே மாதம் 23ந் தேதி வெளியிடப்பட்டது.

மே 30ம் தேதி மீண்டும் பிரதமராக பதவி ஏற்றுக் கொண்டார் பிரதமர் நரேந்திர மோடி. அவரோடு 57 அமைச்சர்களும் பதவி ஏற்றுக் கொண்டனர். அவர்களுக்கான பொறுப்புகள் மே 31ம் தேதி ஒதுக்கப்பட்டது.

இந்நிலையில் நடந்து முடிந்த தேர்தல் செலவுகள் குறித்த புள்ளி விவரங்களை சிஎம்எஸ் (Centre for Media Studies )  தனியார் ஆய்வு அமைப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி சராசரியாக ஓட்டுக்கு ரூ.700 வீதம் செலவிடப்பட்டுள்ளதாகவும், ஒரு மக்களவை தொகுதிக்கு ரூ.100 கோடி வரை செலவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. 2014ம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு 30 ஆயிரம் கோடி ரூபாய் செலவாகிய நிலையில் 2019ல் 60 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. உலக அளவில் இந்திய தேர்தலே அதிக செலவில் நடத்தப்பட்டுள்ளதாக சிஎம்எஸ் தெரிவித்துள்ளது.

மொத்தமாக, தேர்தலுக்காக 60 ஆயிரம் ரூபாய் செலவிடப்பட்டதாகவும் இதில் தேர்தல் ஆணையம் மட்டும் 10 முதல் 12 ஆயிரம் கோடி ரூபாய் வரை செலவிட்டதாகவும் சிஎம்எஸ் அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் மொத்த செலவில் பாஜகவின் பங்கு மட்டும் 45% என்றும் சிஎம்எஸ் கூறியுள்ளது.

தேர்தலில் மிகப்பெரிய தொகை செலவிடப்பட்டுள்ளது ஜனநாயகத்திற்கான அச்சுறுத்தல் என்றும் செலவுகளை குறைக்கும் வழிவகைகள் ஆராயப்பட வேண்டும் என்றும் அந்த அமைப்பு கூறியுள்ளது

இந்த விகிதத்தில், அடுத்த 2024 பொதுத் தேர்தலில் செலவினம் ரூ.1 லட்சம் கோடி ரூபாயை தாண்டலாம் என  சி.எம்.எஸ்.சின் தலைவர் என். பாஸ்கரா ராவ் தெரிவித்தார்.

தேர்தல் செலவு அனைத்து ஊழல்களுக்கும்  மூலமாக  உள்ளது. இதை நாம் தீர்க்க முடியாது என்றால்   இந்தியாவில் ஊழலை ஒழிக்க முடியாது என என். பாஸ்கரா ராவ் தெரிவித்தார்.

எண்செலவுசதவீதம்செலவு கோடியில்
1வாக்காளர்கள் நேரடிச் செலவு20-2512000-15000
2பிரச்சாரம்/ விளம்பரங்கள்30-3520000-25000
3உபகரண செலவு8-105000-6000
4முறையான / தேர்தல் ஆணைய செலவு15-2010000-12000
5இதர செலவுகள்
மொத்தம் 55000-60000
மேலும் செய்திகள்
தமிழக அரசு அரசாணை வெளியிட்டது உள்ளாட்சி அமைப்புகளில் வார்டுகள் ஒதுக்கீடு சென்னையில் 105 வார்டுகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டன
உள்ளாட்சி அமைப்புகளில் வார்டுகளை ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. சென்னை மாநகராட்சியில் 105 வார்டுகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டு உள்ளன.
பதிவு: ஜூன் 03, 2019 00:00 AM மாற்றம்: ஜூன் 03, 2019 04:30 AM
சென்னை,

தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு நீண்ட காலமாக தேர்தல் நடத்தப்படவில்லை. இந்த நிலையில், உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த 2016-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 17 மற்றும் 19-ந் தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. ஆனால், இந்த அறிவிப்பில் எஸ்.டி. பிரிவினருக்கு உரிய இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை என்று கூறி தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு நீதிபதிகள் உள்ளாட்சி தேர்தலை ரத்து செய்து உத்தரவிட்டார்கள். இதனால், உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் வரை உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க தனி அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். ஆனால், உள்ளாட்சி தேர்தல் தள்ளிக்கொண்டே போனதால், தனி அதிகாரிகளின் பதவிக்காலம் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டுக்கொண்டே இருந்தது. இதுவரை 5 முறை அவர்களின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டு உள்ளது.

இதற்கிடையே, உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான ஆயத்த பணிகளில் மாநில தேர்தல் ஆணையம் ஈடுபடத்தொடங்கியது. கடந்த மாதம் (மே) உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான மாநில தேர்தல் அலுவலர், மாவட்ட தேர்தல் அலுவலர் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். வாக்காளர் பட்டியலை தயார் செய்வதற்காக பகுதி மேம்பாட்டு அதிகாரிகள் (பி.டி.ஓ.), வாக்காளர் பட்டியல் பதிவு அலுவலர்களாக நியமனம் செய்யப்பட்டனர்.

அதன்பின்னர், வாக்காளர் பட்டியலை எவ்வாறு தயார் செய்ய வேண்டும்? என்பதற்கான வழிமுறைகளை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டது. இதேபோல், வாக்காளர்களின் எண்ணிக்கை அடிப்படையில் வாக்குச்சாவடிகளை அமைப்பது குறித்தும் வழிமுறைகளை வகுத்து கொடுத்தது.

உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணி நிறைவடைந்து அடுத்த மாதம் (ஜூலை) 2-வது வாரம் வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்றும், உள்ளாட்சி தேர்தல் தேதி ஆகஸ்டு மாதம் இறுதியில் வெளியிடப்பட வாய்ப்பு இருப்பதாகவும் மாநில தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்து வந்தன.

இந்த நிலையில், உள்ளாட்சி தேர்தல் தொடர்பான இடஒதுக்கீடு பட்டியலை தமிழக அரசு வெளியிட்டு அரசாணை பிறப்பித்து உள்ளது. அதாவது, உள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்பட்டு உள்ளது. தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் பழங்குடியினருக்கு, அவர்களின் மக்கள்தொகை அடிப்படையில் இடஒதுக்கீடு கொடுக் கப்பட்டு இருக்கிறது. இந்த ஒதுக்கீடானது, 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் மாற்றப்பட வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 14 மாநகராட்சிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வார்டு கவுன்சிலர் பதவிகள் உள்ளன. இதில் 14 மேயர் பதவிகளும் அடங்கும். இதேபோல், 122 நகராட்சிகளில் 3500-க்கும் மேற்பட்ட வார்டு கவுன்சிலர் பதவிகளும், 122 தலைவர் பதவிகளும் உள்ளன.

மேலும், 528 பேரூராட்சிகளில் 8,288 வார்டு கவுன்சிலர் பதிவுகளும், 528 தலைவர் பதவிகளும் இருக்கின்றன. 31 மாவட்ட ஊராட்சிகளில் 655 வார்டு கவுன்சிலர் பதவிகள் உள்ளன. 388 ஊராட்சி ஒன்றியங்களில் 6,471 கவுன்சிலர் பதவிகளும், 388 தலைவர் பதவிகளும் இருக்கின்றன. 12,524 ஊராட்சிகளில் 99,324 கவுன்சிலர் பதவிகளும், 12,524 தலைவர் பதவிகளும் உள்ளன.

சென்னை மாநகராட்சியை பொறுத்தவரை, மொத்தம் உள்ள 200 வார்டுகளில் ஆண்களுக்கு 95 வார்டுகளும், பெண்களுக்கு 105 வார்டுகளும் ஒதுக் கப்பட்டு உள்ளன.

இதில் பொதுப்பிரிவினர், பொதுப்பிரிவு பெண்கள், தாழ்த்தப்பட்டவர்கள், அந்த பிரிவைச் சேர்ந்த பெண்கள் என பிரித்து வார்டுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது. பழங்குடியினருக்கு என்று வார்டுகள் எதுவும் ஒதுக்கப்படவில்லை. (வார்டுகள் ஒதுக்கீடு விவரம் 5-ம் பக்கம்)

பதவிகள் அடிப்படையில், தாழ்த்தப்பட்டவர்கள் (பொது), தாழ்த்தப்பட்டவர்கள் (பெண்கள்), பழங்குடியினர் (பொது), பழங்குடியினர் (பெண்கள்), பெண்கள், பொது என்ற 6 வகையாக பிரித்து இடஒதுக்கீடு வழங்க வேண்டும். இதன்படி எந்தெந்த வார்டுகளில் யார்-யார் போட்டியிடலாம் என்பது தொடர்பான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டு உள்ளது.

திருச்சி மாநகராட்சியில் 65 வார்டுகள் உள்ளன. இதில் பெண்களுக்கு 33 வார்டுகள் ஒதுக்கப்பட்டு உள்ளன.

இதேபோல் சேலம் மாநகராட்சியில் மொத்தம் உள்ள 60 வார்டுகளில் 30 வார்டுகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டு இருக்கின்றன.

கடந்த 2016-ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அறிவிப்பு ஆணையில் இடஒதுக்கீடு முறையாக பின்பற்றப்படவில்லை என்று கூறி தேர்தலை ரத்து செய்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்ட நிலையில், தற்போது புதிதாக வார்டு வரையறை செய்யப்பட்டு, அதன் அடிப்படையில் இடஒதுக்கீடு பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனால், 3 ஆண்டுகளாக தமிழகத்தில் நடைபெறாமல் இருந்து வந்த உள்ளாட்சி தேர்தல், விரைவில் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தெரியத் தொடங்கி உள்ளன. அரசியல் கட்சிகளும் அதை எதிர்கொள்ள ஆரம்ப கட்ட பணிகளை துரிதப்படுத்தி இருக்கின்றன.
மேலும் செய்திகள்