தே.மு.தி.க. சார்பில் நோன்பு திறப்பு நிகழ்ச்சி விஜயகாந்த், அமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்பு
தே.மு.தி.க. சார்பில் நோன்பு திறப்பு நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடந்தது. இதில் விஜயகாந்த், அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பதிவு: ஜூன் 03, 2019 00:00 AM மாற்றம்: ஜூன் 03, 2019 02:11 AM
சென்னை,

தே.மு.தி.க. சார்பில் நோன்பு திறப்பு நிகழ்ச்சி சென்னை கோயம்பேட்டில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது.

இதில் கட்சியின் தலைவர் விஜயகாந்த், பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், துணை செயலாளர் எல்.கே.சுதீஷ், அமைச்சர் டி.ஜெயக்குமார், வக்பு வாரிய தலைவர் அன்வர் ராஜா எம்.பி., த.மா.கா. துணைத் தலைவர் கோவை தங்கம், பா.ம.க. அமைப்பு செயலாளர் மு.ஜெயராமன், தமிழ் மாநில முஸ்லிம் லீக் தலைவர் ஷேக் தாவூத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் அமைச்சர் ஜெயக்குமார் பேசுகையில், “முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இதில் பங்கு பெறுவதாக இருந்தது. ஆனால் அவருக்கு வேறு நிகழ்ச்சியில் இருந்ததால் என்னை அனுப்பி வைத்திருக்கிறார். தமிழ்நாட்டில் எத்தனை கட்சிகள் இருந்தாலும் இஸ்லாமியர்களை கவுரவப்படுத்துவது அ.தி.மு.க.வும், தே.மு.தி.மு.க. வும் தான். சட்டசபையில் நாங்கள் ஒற்றுமையாக இருந்ததை பார்த்து கண் திருஷ்டி பட்டுவிட்டதோ, என்னவோ?. நம்முடைய கட்சியிலும் ‘ஸ்லீப்பர் செல்கள்’ இருந்திருக்கிறார்கள்” என்றார்.

விஜயகாந்த் பேசும்போது, “அனைவருக்கும் ரம்ஜான் வாழ்த்துகள்” என்றார்.
மேலும் செய்திகள்
இல்லாத இந்தி திணிப்பை காரணமாக காட்டி சுயலாப போராட்டங்கள் நடத்த சிலர் ஆயத்தமாகி வருகிறார்கள் தமிழிசை சவுந்தரராஜன் கண்டனம்
இல்லாத இந்தி திணிப்பை காரணமாக காட்டி சுயலாப போராட்டங்கள் நடத்த சிலர் ஆயத்தமாகி வருகிறார்கள் என்று டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பதிவு: ஜூன் 03, 2019 00:00 AM மாற்றம்: ஜூன் 03, 2019 02:06 AM
சென்னை,

தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இந்தியாவில் புதிய கல்வி கொள்கையை அமல்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட கஸ்தூரிரங்கன் குழு மத்திய அரசுக்கு ஓர் பரிந்துரை அனுப்பியுள்ளது. அந்த பரிந்துரையில் மும்மொழிக்கொள்கை பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. அது மத்திய அரசால் இன்னும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. முடிவும் செய்யப்படவில்லை. ஆனால் அதற்கு முன்பே ஏதோ இந்தி திணித்து விடுவதைப்போல மு.க.ஸ்டாலின், வைகோ, ப.சிதம்பரம், ரா.முத்தரசன் போன்றவர்கள் கடுமையான கண்டனத்தை இல்லாத இந்தி திணிப்பை நோக்கி செலுத்தியிருக்கிறார்கள்.

எங்கேயாவது போராட்டம் நடத்த வழி கிடைக்காதா? என தேடித்திரிபவர்கள், இல்லாத இந்தி திணிப்பை காரணமாக கொண்டு சுயலாப போராட்டங்கள் நடத்தலாம் என சிலர் ஆயத்தமாகி வருகிறார்கள். முன்னாள் மத்திய மனித வள மேம்பாட்டு துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் எந்த மொழியும் எந்த மாநிலத்திலும் திணிக்கப்படாது என்றும், மத்திய மனித வள மேம்பாட்டு துறை மந்திரி ரமேஷ் போக்ரியால் நிஷாங் இந்தி திணிக்கும் எண்ணமில்லை என்றும் கூறியிருக்கின்றனர். இதே கருத்தை பிரதமர் அலுவலகமும் தெரிவித்து இருக்கிறது.

மும்மொழிக்கொள்கை என்பது பரிந்துரை மட்டுமே செய்யப்பட்டிருக்கிறது. கொள்கை முடிவு அல்ல என்பதை தெளிவாகச் சொன்ன பிறகும் ஏதோ இந்தி திணிக்கப்பட்டதை போல கருத்துகளை தெரிவிப்பது சரியல்ல. கஸ்தூரிரங்கன் குழு எப்படி இப்படி ஒரு அறிக்கை தரலாம் என மு.க.ஸ்டாலின் கேட்கிறார். அறிக்கை கொடுக்கலாம் அதை ஏற்றுக்கொண்டால்தானே கொள்கை முடிவு. மு.க.ஸ்டாலின் மீத்தேன் ஆராய்ச்சிக்கு ஏன் கையெழுத்திட்டார்? முதலிலேயே முடியாது என்று சொல்லவில்லையே.

ஆக இனித்தால் படிக்கலாம் திணித்தல் இல்லையென்றும், விருப்பம் இருந்தால் படிக்கலாம் வெறுப்பு இருந்தால் வேண்டாம் என்றும், தேவையென்றால் படிக்கலாம் தேவை இல்லையென்றால் விட்டுவிடலாம் இது வெறும் வரைவு அறிக்கைதான் என்றும் சொல்லியாகிவிட்டது. ஆக ஏதாவது காரணம் கிடைக்காதா? போராட்டம் நடத்தலாம் என காத்துக்கொண்டிருக்கும் எதிர்க்கட்சிகள் ஏமாந்துதான் போவார்கள்.

இதைவிட வேடிக்கை என்னவென்றால் காங்கிரஸ் முதல்-அமைச்சர் பக்தவச்சலம் ஆட்சி காலத்தில்தான் இந்தி திணிப்பும், எதிர்ப்பாளர்கள் மீது துப்பாக்கி சூடும் நடந்தது. அதை எல்லாம் மறந்துவிட்டு இன்றைய காங்கிரஸ்காரர்கள் தி.மு.க.வுடன் சேர்ந்து இந்தியை எதிர்ப்பதாக சொல்வதுதான் நாடகம். இந்தியை மத்திய அரசின் அலுவல்களில் பயன்பாட்டை அதிகரிக்க அமைக்கப்பட்ட குழுவின் தலைவராக செயல்பட்ட ப.சிதம்பரம் இந்தி பயன்பாட்டை கண்டிப்பது வேடிக்கையாக இருக்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மேலும் செய்திகள்
நாடாளுமன்ற தேர்தலில் ‘எதிர்க்கட்சியின் பொய் பிரசாரத்தால் தோல்வி அடைந்தோம்’ அமைச்சர் தங்கமணி பேட்டி
நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சியின் பொய் பிரசாரத்தால் தோல்வி அடைந்தோம் என்று அமைச்சர் தங்கமணி கூறினார்.
பதிவு: ஜூன் 03, 2019 00:00 AM மாற்றம்: ஜூன் 03, 2019 01:55 AM
ஈரோடு,

ஈரோட்டில் அமைச்சர் பி.தங்கமணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் கடுமையான மின்வெட்டு இருப்பதாக ஒரு பத்திரிகையில் தவறான செய்தியை வெளியிட்டு இருக்கிறார்கள். முதல்-அமைச்சராக ஜெயலலிதா இருந்தபோது 2015-ம் ஆண்டு மின்வெட்டு இல்லாத நிலையை உருவாக்கினார். அதில் இருந்து மின்வெட்டு இல்லாத மாநிலமாக, ஏன் மின்மிகை மாநிலமாக தமிழகத்தை வைத்திருக்கிறோம்.

தொழிற்சாலைகளில் மாலை 4 மணியில் இருந்து இரவு 8 மணி வரை மின்சாரத்தை பயன்படுத்தாமல், ஜெனரேட்டர் பயன்படுத்துமாறு அறிவுறுத்தியதாக தவறான செய்தியை பரப்பி வருகிறார்கள்.

கடந்த மாதம் 27-ந் தேதி காற்றாலை மின் உற்பத்தி 3 ஆயிரம் மெகாவாட்டில் இருந்து 100 மெகாவாட்டாக திடீரென குறைந்துவிட்டது. அதனால் தொழிற்சாலைகளில் அன்று மட்டும் 4 மணி நேரம் ஜெனரேட்டரை பயன்படுத்துமாறு கூறி இருந்தோம். அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி தொடங்கிய பிறகு தடையில்லா மின்சாரம் வழங்கி வருகிறோம்.

மழை பெய்யும்போதும், காற்று வீசும்போதும் மட்டும் பாதிப்புகள் இருந்தால் மின்தடை ஏற்படுகிறது. அப்போதும், மின்வாரிய ஊழியர்கள் அங்கு சென்று பராமரிப்பு பணிகளை மேற்கொள்கிறார்கள்.

இந்த ஆண்டுக்கு தேவையான மின்சாரம் இருக்கிறது. கூடங்குளம் அணுமின் நிலையத்தில் ஒரு ஆண்டாக ஒரு யூனிட் நிறுத்தப்பட்டு இருந்தது. கடந்த 10 நாட்களாக அங்கு மின்உற்பத்தி செய்யப்படுகிறது. அதில் இருந்து 800 மெகாவாட் மின்சாரம் கிடைத்து கொண்டிருக்கிறது. தேவைக்கு அதிகமாக மின்சாரம் இருப்பதால் அனல் மின்நிலையத்தை பராமரிப்பு பணிக்காக தற்போது நிறுத்தி வைத்திருக்கிறோம். மின்சாரம் பற்றாக்குறை என்று பொதுமக்களிடையே பீதியை கிளப்ப எதிர்க்கட்சிகள் முயற்சி செய்கிறார்கள்.

எதிர்க்கட்சியின் பொய் பிரசாரம் காரணமாக நாடாளுமன்ற தேர்தலில் தோல்வி ஏற்பட்டது. கல்வி கடனை ரத்து செய்வோம் உள்ளிட்ட பொய்யான வாக்குறுதிகளை எதிர்க்கட்சியினர் முன்வைத்தனர். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தலைமையிலான ஆட்சி நீடிக்க வேண்டுமென்பதால்தான் சட்டமன்ற இடைத்தேர்தலில் மக்கள் அ.தி.மு.க.வுக்கு வாக்களித்தனர். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் செய்திகள்