96-வது பிறந்த நாள்: கருணாநிதி சிலைக்கு நாளை மு.க.ஸ்டாலின் மாலை அணிவிக்கிறார்
சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கருணாநிதி சிலைக்கு காலை 7 மணியளவில் தி.மு.க. பொதுச் செயலாளர் க.அன்பழகன் முன்னிலையில் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.
பதிவு: ஜூன் 02, 2019 00:00 AM மாற்றம்: ஜூன் 02, 2019 05:31 AM
சென்னை,

சென்னை மாவட்ட தி.மு.க. சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தமிழக வரலாற்றில் தமக்கென்று சில பக்கங்களை ஒதுக்கிக்கொண்ட தலைவர் கருணாநிதியின் 96-வது பிறந்த நாளான 3-6-2019 அன்று (நாளை) சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள அவரது சிலைக்கு காலை 7 மணியளவில் தி.மு.க. பொதுச் செயலாளர் க.அன்பழகன் முன்னிலையில் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.

அப்போது, தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் - இன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைக் கழகச் செயலாளர்கள், தலைமை செயற்குழு - பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட, பகுதி, வட்டக் கழக நிர்வாகிகள், மாநகராட்சி மன்ற முன்னாள் உறுப்பினர்கள் மற்றும் இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, இலக்கிய அணி, தொழிலாளர் அணி, வழக்கறிஞர் அணி, தொண்டர் அணி, மீனவர் அணி, ஆதிதிராவிடர் நலக்குழு, கலை - இலக்கிய பகுத்தறிவு பேரவை, மருத்துவர் அணி, பொறியாளர் அணி, சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவு, வர்த்தகர் அணி, தகவல் தொழில்நுட்ப அணி ஆகிய அனைத்து அணியினரும் மற்றும் கட்சித் தொண்டர் களும் தவறாது கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இடையே கருத்து வேறுபாடா? அமைச்சர் காமராஜ் பதில்
எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இடையே கருத்து வேறுபாடு உள்ளதா? என்ற கேள்விக்கு அமைச்சர் காமராஜ் பதில் அளித்துள்ளார்.
பதிவு: ஜூன் 02, 2019 00:00 AM மாற்றம்: ஜூன் 02, 2019 03:05 AM
திருவாரூர்,

தமிழக உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் நன்னிலத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்தின்போது ஊர், ஊராக சென்று ராகுல்காந்தி பிரதமர் ஆவார், உடனடியாக அ.தி.மு.க. ஆட்சி அகற்றப்படும் என்றார். இந்த இரண்டிலும் அவர் தோற்று விட்டார். அ.தி.மு.க. ஆட்சியை அகற்ற முடியாது. அவர் பொய்யான வாக்குறுதிகளை கொடுத்தார்.

தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி தொடர்கிறது. இந்தியாவில் மோடி தலைமையிலான ஆட்சி தொடர்கிறது. எடப்பாடி பழனிசாமி வலியான முதல்-அமைச்சர் என்பதை விரைவில் நிருபிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இடையே கருத்து வேறுபாடு உள்ளதாக கூறப்படுகிறதே? என கேட்டதற்கு, “எந்த கருத்து வேறுபாடும் கிடையாது. இரண்டு பேரும் இணைந்து செயல்படுகின்றனர்” என்றார். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் செய்திகள்
தமிழக உரிமைகளுக்காக நாடாளுமன்றத்தில் தி.மு.க. குரல் கொடுக்கும் கனிமொழி எம்.பி. பேட்டி
தமிழக உரிமைகளுக்காக நாடாளுமன்றத்தில் தி.மு.க. குரல் கொடுக்கும் என்று கனிமொழி எம்.பி. தெரிவித்தார்.
பதிவு: ஜூன் 02, 2019 00:00 AM மாற்றம்: ஜூன் 02, 2019 02:21 AM
ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் தி.மு.க. எம்.பி. கனிமொழி நிருபர்களிடம் கூறியதாவது:-

எந்த காலத்திலும் எந்த மொழிக்கும் எதிரான கொள்கை கொண்டு இருக்காவிட்டாலும் நிச்சயமாக மொழி திணிப்பை தி.மு.க. எதிர்க்கும். இந்தி உள்பட எந்த மொழியாக இருந்தாலும் அந்த மொழி திணிக்கப்பட்டால் நாடாளுமன்றத்திலும் தி.மு.க. எதிர்க்கும்.

நாடாளுமன்றத்தில் எத்தனை எம்.பி.க்கள் இருந்தாலும் ஒரு எம்.பி.யாக இருந்தாலும் தமிழக மக்களின் உரிமைக்காக குரல் கொடுத்தோம். அதேபோல் தற்போது தமிழ்நாட்டுக்காகவும், இந்த நாட்டிற்காகவும், மக்களின் உரிமைக்காகவும் குரல் கொடுப்போம்.

மத்திய மந்திரிசபையில் தமிழகத்திற்கு பிரதிநிதித்துவம் வழங்கப்படாதது பற்றி அ.தி.மு.க., பா.ஜ.க.விடம் தான் கேட்க வேண்டும். அ.தி.மு.க.வே ஒரு பாதிப்பு தான்.

அ.தி.மு.க.வில் உட்கட்சி பிரச்சினை இருப்பது அனைவருக்கும் தெரிந்ததே. ஆட்சிக்காக 2 தரப்பும் இணைந்து செயல்படுவது போன்ற வெளிப்புற தோற்றம் இருக்கிறதே தவிர உள்ளே இருக்கிற பிரச்சினைகள் அனைவருக்கும் தெரியும். இவ்வாறு கனிமொழி எம்.பி. தெரிவித்தார்.
மேலும் செய்திகள்