பதவியேற்பு விழாவுக்கு முன் காந்தி, வாஜ்பாய் நினைவிடங்களில் பிரதமர் மோடி மரியாதை
பிரதமராக பதவியேற்பதற்கு முன் மகாத்மா காந்தி, வாஜ்பாய் நினைவிடங்களில் மோடி மரியாதை செலுத்தினார்.
பதிவு: மே 31, 2019 00:00 AM மாற்றம்: மே 31, 2019 04:41 AM
புதுடெல்லி,

நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அபார வெற்றி பெற்றதை தொடர்ந்து நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக தேர்வு செய்யப்பட்டார். அவர் நேற்று மாலையில் ஜனாதிபதி மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில், நாட்டின் புதிய பிரதமராக பதவியேற்றுக்கொண்டார்.

முன்னதாக காலையில் அவர் தேசத்தந்தை காந்தியடிகள், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் போன்ற தலைவர்களுக்கு மரியாதை செலுத்தினார்.

இதற்காக முதலில் டெல்லி ராஜ்காட் சென்ற அவர் அங்கு காந்தியடிகளின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் வாஜ்பாயின் நினைவிடமான சதிவ் அடலுக்கு சென்று, அங்கும் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இதைத்தொடர்ந்து டெல்லி இந்தியா கேட் பகுதியில் உள்ள போர் நினைவுச்சின்னத்துக்கு சென்ற பிரதமர் மோடி, அங்கு மலர் வளையம் வைத்து, உயிர் நீத்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வுகளின் போது பா.ஜனதா தலைவர் அமித்ஷா மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் பிரதமர் மோடியுடன் உடனிருந்தனர்.

இந்த நிகழ்வுகள் தொடர்பாக பிரதமர் மோடி பின்னர் தனது தளத்தில் பல்வேறு கருத்துகளை பதிவிட்டார். அதில் அவர் கூறியிருந்ததாவது:-

இந்த ஆண்டு பாவுவின் (காந்தி) 150-வது பிறந்த நாளை கொண்டாடுகிறோம். காந்தியடிகளின் உன்னத கொள்கைகளை இந்த சிறப்பான தருணம் மேலும் பிரபலப்படுத்துவதுடன், ஏழைகள், அடித்தட்டு மக்கள் மற்றும் ஒடுக்கப்பட்டோரின் வாழ்வை உயர்த்த நமக்கு உத்வேகத்தையும் அளிக்கிறது.

மக்களுக்கு சேவை செய்வதற்கு பா.ஜனதாவுக்கு இதுபோன்ற ஒரு சிறப்பான வாய்ப்பு கிடைத்ததை வாஜ்பாய் பார்த்திருந்தால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்திருப்பார். அடல்ஜியின் வாழ்வு மற்றும் பணியின் உத்வேகத்தைக்கொண்டு நாங்கள் சிறந்த நிர்வாகத்தை வழங்கவும், மக்களின் வாழ்வை மாற்றுவதற்கும் போராடுவோம்.

பணியின் போது உயிர்நீத்த வீரர், வீராங்கனைகளின் துணிச்சலுக்காக இந்தியா பெருமைப்படுகிறது. இந்தியாவின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டை காக்கும் எந்த செயலையும் நாங்கள் மேற்கொள்ளாமல் விடமாட்டோம். நாட்டின் பாதுகாப்பே எங்களின் முன்னுரிமை ஆகும்.
இவ்வாறு பிரதமர் மோடி கூறியிருந்தார்.
மேலும் செய்திகள்
பா.ஜனதா புதிய தலைவர் யார்? ஜே.பி.நட்டா பெயர் அடிபடுகிறது
பாரதீய ஜனதா புதிய தலைவராக ஜே.பி.நட்டா நியமிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
பதிவு: மே 31, 2019 00:00 AM மாற்றம்: மே 31, 2019 05:41 AM
புதுடெல்லி,

பாரதீய ஜனதா தலைவராக இருந்து வரும் அமித்ஷா மத்திய மந்திரியாக நியமிக்கப்பட்டு உள்ளார். நேற்று அவர் மந்திரியாக பதவி ஏற்றுக் கொண்டார். பாரதீய ஜனதாவில் ஒருவருக்கு ஒரு பதவி என்ற கொள்கை கடைபிடிக்கப்படுகிறது. எனவே அமித்ஷா தலைவர் பதவியை ராஜினாமா செய்ய இருக்கிறார்.

இதனால் அடுத்த பாரதீய ஜனதா தலைவர் யார் என்ற கேள்வி எழுந்து உள்ளது.
தற்போது மூத்த தலைவர்களில் ஒருவராக விளங்கும் ஜே.பி.நட்டா பாரதீய ஜனதாவின் புதிய தலைவராக நியமிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

58 வயதான ஜே.பி.நட்டா இமாசலபிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர். மோடி அரசில் சுகாதார துறை மந்திரியாக இருந்துள்ளார்.

தற்போதைய துணைத் தலைவர் ஓ.பி.மாத்தூர், பொதுச்செயலாளர் புபேந்திர யாதவ் ஆகியோரின் பெயர்களும் தலைவர் பதவிக்கு அடிபடுகின்றன.
மேலும் செய்திகள்
மோடி மந்திரி சபையில் மீண்டும் வாய்ப்பு பெற்ற பெண் துறவி
உத்தரபிரதேசத்தை சேர்ந்த இவர் அங்குள்ள பதேபூர் நாடாளுமன்ற தொகுதியில் இருந்து சுமார் 70 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தார்.
பதிவு: மே 31, 2019 00:00 AM மாற்றம்: மே 31, 2019 04:28 AM
புதுடெல்லி,

பிரதமர் மோடி தலைமையிலான புதிய அரசில் இணை மந்திரியாக பதவியேற்று இருப்பவர் சாத்வி நிரஞ்சன் ஜோதி (வயது 52). உத்தரபிரதேசத்தை சேர்ந்த இவர் அங்குள்ள பதேபூர் நாடாளுமன்ற தொகுதியில் இருந்து சுமார் 70 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தார்.

கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலிலும் வெற்றி பெற்று இருந்த இவருக்கு மோடியின் முந்தைய மந்திரி சபையில் உணவு பதப்படுத்துதல் துறைக்கான இணை மந்திரி பதவி அளிக்கப்பட்டு இருந்தது. அதன் தொடர்ச்சியாக தற்போதைய மந்திரி சபையிலும் தனது இடத்தை அவர் உறுதி செய்துள்ளார்.

காவி உடை அணிந்து பெண் துறவியாக வலம் வரும் சாத்வி நிரஞ்சன் ஜோதி காடு வளர்த்தல், சமூக-கலாசார மதிப்பீடுகளை பாதுகாத்தல், பசு பாதுகாப்பு, ஏழை குழந்தைகள் மேம்பாடு மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மகளிருக்கு திருமண உதவி செய்தல் போன்ற நலத்திட்டங்களில் தன்னை ஈடுபடுத்தி வருகிறார்.

இரு ஒருபுறம் இருக்க, மதரீதியான கருத்துகளை கூறி சர்ச்சைகளிலும் இவர் சிக்கியுள்ளார். கடந்த 2014-ம் ஆண்டில் இவர் கூறிய சர்ச்சைக்குரிய கருத்துகளுக்காக நாடாளுமன்றத்தில் வருத்தம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்