மோடி மந்திரி சபையில் மீண்டும் வாய்ப்பு பெற்ற பெண் துறவி
உத்தரபிரதேசத்தை சேர்ந்த இவர் அங்குள்ள பதேபூர் நாடாளுமன்ற தொகுதியில் இருந்து சுமார் 70 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தார்.
பதிவு: மே 31, 2019 00:00 AM மாற்றம்: மே 31, 2019 04:28 AM
புதுடெல்லி,

பிரதமர் மோடி தலைமையிலான புதிய அரசில் இணை மந்திரியாக பதவியேற்று இருப்பவர் சாத்வி நிரஞ்சன் ஜோதி (வயது 52). உத்தரபிரதேசத்தை சேர்ந்த இவர் அங்குள்ள பதேபூர் நாடாளுமன்ற தொகுதியில் இருந்து சுமார் 70 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தார்.

கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலிலும் வெற்றி பெற்று இருந்த இவருக்கு மோடியின் முந்தைய மந்திரி சபையில் உணவு பதப்படுத்துதல் துறைக்கான இணை மந்திரி பதவி அளிக்கப்பட்டு இருந்தது. அதன் தொடர்ச்சியாக தற்போதைய மந்திரி சபையிலும் தனது இடத்தை அவர் உறுதி செய்துள்ளார்.

காவி உடை அணிந்து பெண் துறவியாக வலம் வரும் சாத்வி நிரஞ்சன் ஜோதி காடு வளர்த்தல், சமூக-கலாசார மதிப்பீடுகளை பாதுகாத்தல், பசு பாதுகாப்பு, ஏழை குழந்தைகள் மேம்பாடு மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மகளிருக்கு திருமண உதவி செய்தல் போன்ற நலத்திட்டங்களில் தன்னை ஈடுபடுத்தி வருகிறார்.

இரு ஒருபுறம் இருக்க, மதரீதியான கருத்துகளை கூறி சர்ச்சைகளிலும் இவர் சிக்கியுள்ளார். கடந்த 2014-ம் ஆண்டில் இவர் கூறிய சர்ச்சைக்குரிய கருத்துகளுக்காக நாடாளுமன்றத்தில் வருத்தம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்
மணிப்பூரில் 12 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கட்சி பதவியை துறந்தனர் பா.ஜனதாவில் இணைய முடிவா?
மணிப்பூரில் பிரேன்சிங் தலைமையிலான பா.ஜனதா கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. அங்கு காங்கிரஸ் கட்சிக்கு 21 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.
பதிவு: மே 31, 2019 00:00 AM மாற்றம்: மே 31, 2019 04:08 AM
இம்பால்,

நாடாளுமன்ற தேர்தலில் மணிப்பூரில் உள்ள 2 தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்தது. இந்நிலையில், மணிப்பூர் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 12 பேர், தங்களது கட்சி பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். மாநில காங்கிரஸ் தலைவர் கெய்காங்கத்திடம் தங்களது ராஜினாமா கடிதங்களை சமர்ப்பித்தனர். ராஜினாமாவை ஏற்பது பற்றி ராகுல் காந்தி முடிவு எடுப்பார் என்று கெய்காங்கம் தெரிவித்தார்.

12 எம்.எல்.ஏ.க்களும் பா.ஜனதாவில் இணைவார்கள் என்று கருதப்பட்டது. ஆனால், கட்சியை விட்டு விலகும் எண்ணம் இல்லை என்றும், கட்சியை அடிமட்டத்தில் பலப்படுத்தவே கட்சி பதவியை விட்டு விலகி உள்ளோம் என்றும் அவர்கள் கூறினர்.
மேலும் செய்திகள்
ராகுல் காந்தியுடன் குமாரசாமி சந்திப்பு கர்நாடக கூட்டணி அரசு சுமுகமாக நடைபெறும் என அறிவிப்பு
கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமி நேற்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்தார். கர்நாடக கூட்டணி அரசு சுமுகமாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பதிவு: மே 31, 2019 00:00 AM மாற்றம்: மே 31, 2019 03:25 AM
புதுடெல்லி,

கர்நாடக மாநிலத்தில் ஜனதா தளம் (எஸ்), காங்கிரஸ் கூட்டணி அரசு நடைபெற்று வருகிறது. மாநில அரசுக்கும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுக்கும் இடையே அவ்வப்போது கருத்து வேறுபாடுகள் ஏற்படுவதால் மாநில அரசு தொடர்ந்து நெருக்கடியில் இருந்து வருகிறது.

சமீபத்தில் அதிருப்தியில் உள்ள 2 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ரமேஷ் ஜார்கிஹோலி, சுதாகர் ஆகியோர் பா.ஜனதா தலைவர் எஸ்.எம்.கிருஷ்ணாவை அவரது இல்லத்தில் சந்தித்து பேசியது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் அவர்கள் இது அரசியல்ரீதியான சந்திப்பு அல்ல என்று தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில் கர்நாடக மாநில முதல்-மந்திரி குமாரசாமி நேற்று டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து பேசினார். அப்போது சோனியா காந்தியும் அங்கு இருந்தார். அப்போது குமாரசாமி கர்நாடக மாநிலத்தில் உள்ள அரசியல் சூழ்நிலை குறித்து ராகுல் காந்தியிடம் விளக்கினார்.

இந்த சந்திப்பு குறித்து ஒரு அறிக்கையும் வெளியிடப்பட்டது. அதில், “கர்நாடக முதல்-மந்திரி மாநில அரசியல் சூழ்நிலை குறித்து ராகுல் காந்தியிடம் விளக்கினார். இரு கட்சிகளின் ஒத்துழைப்புடனும், நல்லுறவுடனும் மாநில அரசு சுமுகமாக நடைபெற்று வருகிறது. ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்யக்கூடாது என்றும், அவரது சேவை நாட்டுக்கு தேவை என்றும் குமாரசாமி வலியுறுத்தினார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்