நரேந்திர மோடி 2-வது முறையாக இந்தியாவின் பிரதமராக பதவியேற்றார்
ஜனாதிபதி மாளிகையில் நடைபெறும் விழாவில் நரேந்திர மோடி 2-வது முறையாக இந்தியாவின் பிரதமராக பதவியேற்றுக்கொண்டார்.
பதிவு: மே 30, 2019 00:00 AM மாற்றம்: மே 30, 2019 19:08 PM
17-வது நாடாளுமன்றத்தை தேர்ந்தெடுக்க நடைபெற்ற தேர்தலில் பாரதீய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 353 இடங்களை கைப்பற்றி மகத்தான வெற்றி பெற்றது. பாரதீய ஜனதா மட்டும் தனித்து ஆட்சி அமைக்கக்கூடிய அளவுக்கு 303 இடங்களை கைப்பற்றியது. என்றாலும் கடந்த 2014-ம் ஆண்டு தனித்து ஆட்சியை பிடித்த போது கூட்டணி கட்சிகளையும் மந்திரிசபையில் சேர்த்துக் கொண்டதை போல், இந்த முறையும் பாரதீய ஜனதா கூட்டணி அரசு அமைக்கிறது.

நாடாளுமன்ற பாரதீய ஜனதா கட்சியின் தலைவராக (பிரதமர்) தேர்ந்து எடுக்கப்பட்ட மோடிக்கு, புதிய பிரதமராக பதவி ஏற்குமாறு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அழைப்பு விடுத்தார். அதை பிரதமர் மோடி ஏற்றார். பதவி ஏற்பு விழா ஜனாதிபதி மாளிகையில் உள்ள முற்றத்தில் இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.  ‘பிம்ஸ்டெக்’ அமைப்பில் இடம் பெற்றுள்ள நாடுகளுக்கு பதவியேற்பு விழாவில் கலந்துக்கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டது.  

வழக்கமாக புதிய அரசு பதவி ஏற்பு விழா ஜனாதிபதி மாளிகையில் உள்ள தர்பார் மண்டபத்தில் நடைபெறும். ஆனால் அந்த மண்டபத்தில் சுமார் 500 பேர் மட்டுமே அமர முடியும். ஆனால் இந்த முறை மோடி அரசு பதவி ஏற்பு விழாவில் வெளிநாட்டு தலைவர்கள் உள்பட சுமார் 8,000 பேர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.  இதனால் இடவசதியை கருத்தில் கொண்டு ஜனாதிபதி மாளிகை முற்றத்தில் பதவி ஏற்பு விழாவை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.  இந்திய வரலாற்றில் பிரதமர் பதவி ஏற்பு விழா ஜனாதிபதி மாளிகையின் முற்றத்தில் நடைபெறுவது இது 6-வது முறை ஆகும்.

ஜனாதிபதி மாளிகையில் நடைபெறும் விழாவில் பிரதமர் மோடி பிரதமராக பதவியேற்றுக்கொண்டார். விழாவில் மோடிக்கு, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பிரதமராக பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். இதன்மூலம் அவர் தொடர்ந்து 2-வது முறையாக பிரதமர் ஆனார். அவரை தொடர்ந்து பிற அமைச்சர்கள் பதவியேற்று வருகிறார்கள். பாரதீய ஜனதாவைச் சேர்ந்தவர்களுடன் சிவசேனா, நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளைச் சேர்ந்தவர்களும் மந்திரிகளாக பதவி ஏற்கிறார்கள். 

பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ளுமாறு மாநில கவர்னர்கள், முதல்-மந்திரிகள், எதிர்க்கட்சி தலைவர்கள், முன்னாள் ஜனாதிபதிகள், பிரதமர்ககள் கலந்துக்கொண்டுள்ளன் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. அழைப்பை ஏற்று ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியாகாந்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டுள்ளனர். 

மோடியின் அழைப்பை ஏற்று ‘பிம்ஸ்டெக்’ அமைப்பில் இடம் பெற்றுள்ள நாடுகளான வங்காளதேசத்தின் ஜனாதிபதி முகமது அப்துல் ஹமீது, இலங்கை அதிபர் சிறிசேனா, நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒளி, மியான்மர் அதிபர் யூ வின் மையின்ட், பூடான் பிரதமர் லோட்டே ஷெரிங் ஆகியோரும் மற்றும் மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் குமார் ஜக்நாத், கிர்கிஸ்தான் அதிபர் சூரோன்பே ஜீன்பிகோவ் ஆகியோரும், தாய்லாந்து நாட்டின் பிரதிநிதியும் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொண்டுள்ளனர். விழா தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
மேலும் செய்திகள்
முன்னாள் வெளியுறவுத்துறை செயலாளர் ஜெய்சங்கர் அமைச்சரவையில் இடம்பெறுகிறார் என தகவல்
முன்னாள் வெளியுறவுத்துறை செயலாளர் ஜெய்சங்கர், பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெறுகிறார் என தகவல் வெளியாகியுள்ளது.
பதிவு: மே 30, 2019 00:00 AM மாற்றம்: மே 30, 2019 18:07 PM

நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அபார வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் நரேந்திர மோடி தொடர்ந்து 2-வது முறையாக பிரதமராக பதவியேற்கிறார். இந்த பதவியேற்பு விழா இன்று நடக்கிறது. பிரதமர் மோடியின் அமைச்சரவையில் இடம்பெறுபவர்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகி வருகிறது. இந்திய முன்னாள் வெளியுறவுத்துறை செயலாளர் ஜெய்சங்கர் அமைச்சரவையில் இடம்பெறுகிறார் என தகவல்  வெளியாகியுள்ளது.

புதிய அமைச்சரவையில் இடம்பெறுமாறு பிரதமர் மோடி அவரிடம் கேட்டுக்கொண்டதாகவும், பேசியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

சீனாவுடனான பிரச்சனையை தீர்ப்பதில் மிகவும் முக்கியப் பங்காற்றியவர். வெளியுறவுத்துறை செயலாளராக பணியாற்றிய போது சிறப்பாக செயல்பட்டவர், பிரதமர் மோடியிடம் நன்மதிப்பை பெற்றவர்களில் ஜெய்சங்கரும் ஒருவராவார். 
மேலும் செய்திகள்
எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் அரசை கலைக்க பா.ஜனதா முயற்சி செய்கிறது - காங்கிரஸ் குற்றச்சாட்டு
எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் அரசை கலைக்க பா.ஜனதா முயற்சி செய்கிறது என காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
பதிவு: மே 30, 2019 00:00 AM மாற்றம்: மே 30, 2019 17:12 PM
பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜனதா அரசு மீண்டும் மத்தியில் அமைய உள்ளது.  மோடி அரசு இன்று மாலை பதவியேற்க உள்ள நிலையில் ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் முதல்வர் அசோக் கெலாட் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார். 

பா.ஜனதா மத்தியில் மீண்டும் ஆட்சியமைக்கும் முன்னதாகவே எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் அரசுக்கு தொல்லை கொடுக்கிறது, அரசை கலைக்க முயற்சி செய்கிறது என குற்றம் சாட்டியுள்ளார். 

பிரதமர் மோடியின் தலைமையிலான புதிய அரசுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள அசோக் கெலாட், புதிய அரசை அமைப்பதற்கு முன்னதாகவே வெற்றி பெற்ற பா.ஜனதா, மேற்கு வங்காளம், கர்நாடகம், மத்திய பிரதேசம் உள்பட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு தொந்தரவை கொடுக்கவும், கலைக்கவும் முயற்சிகளை மேற்கொள்கிறது எனக் கூறியுள்ளார். மத்திய பிரதேசத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று காங்கிரஸ் அரசை பா.ஜனதா வலியுறுத்துகிறது. 
மேலும் செய்திகள்