தமிழ்நாட்டில் நாடாளுமன்ற, சட்டமன்ற இடைத்தேர்தல்களை பிரித்து பார்த்து ஓட்டு போட்ட வாக்காளர்கள் 20 தொகுதி புள்ளி விவரம் நிரூபணம்
நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்ற இடைத்தேர்தல் என்று பிரித்து பார்த்து இருவேறு மனநிலையில் தமிழக வாக்காளர்கள் ஓட்டு போட்டுள்ளனர். 20 தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் மூலம் அது நிரூபணமாகியுள்ளது.
பதிவு: மே 29, 2019 00:00 AM மாற்றம்: மே 29, 2019 05:44 AM
சென்னை,

நாடாளுமன்ற தேர்தலுடன் தமிழகத்தில் 22 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடைபெற்றது.

தமிழகத்தை பொறுத்தவரை இந்தத் தேர்தல் முடிவுகள் வித்தியாசமாக அமைந்திருந்தது. மத்தியில் பா.ஜ.க. ஆட்சியை பிடித்தாலும் தமிழகத்தில் ஒரு இடத்தைகூட பிடிக்க முடியவில்லை.

அதே நேரத்தில், மத்தியில் காங்கிரஸ் கூட்டணி படுதோல்வி அடைந்தாலும், தமிழகத்தில் தி.மு.க. தலைமையில் காங்கிரஸ் இடம்பெற்ற கூட்டணி 37 இடங்களை கைப்பற்றியது. இது தி.மு.க., காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

தமிழகத்தில் ஆளுங்கட்சியான அ.தி.மு.க., நாடாளுமன்ற தேர்தலில் ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றாலும், சட்டமன்ற இடைத்தேர்தலில் 9 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக்கொண்டது. அதாவது, தேர்தலில் தோல்வியே மிஞ்சினாலும் ஆட்சியை தக்கவைத்த மகிழ்ச்சியில் அ.தி.மு.க. நிம்மதி பெருமூச்சு விட்டது.

இப்படி தேர்தல் தமிழகத்தில் வித்தியாசமான முடிவுகளை தந்தாலும், இடைத்தேர்தல் நடந்த சட்டமன்ற தொகுதிகளின் வாக்குகளையும், அதே தொகுதிகள் உள்ளடங்கிய நாடாளுமன்ற தேர்தலில் சட்டமன்ற தொகுதிவாரி வாக்குகளையும் ஒப்பிடும்போது, 2 தேர்தல்களையும் மக்கள் பிரித்து பார்த்து தெளிவாக வாக்களித்திருப்பது தெரியவருகிறது.

தமிழகத்தில் வேலூர் தொகுதி நீங்கலாக மீதமுள்ள 38 தொகுதிகளுக்கும் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. அதேபோல், பெரியகுளம், ஆண்டிப்பட்டி, திருவாரூர், தஞ்சாவூர், ஓசூர், பெரம்பூர், ஓட்டப்பிடாரம், விளாத்திகுளம், மானாமதுரை, அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, சோளிங்கர், பூந்தமல்லி, திருப்போரூர், சூலூர், நிலக்கோட்டை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், சாத்தூர், பரமக்குடி, குடியாத்தம், ஆம்பூர் ஆகிய 22 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது.

அதாவது, இந்த 22 தொகுதிகளில் குடியாத்தம், ஆம்பூர் ஆகிய 2 தொகுதிகள் வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்குள் வருகிறது. எனவே, இந்த 2 தொகுதி வாக்காளர்கள் சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்குகளை மட்டுமே பதிவு செய்தனர்.

மீதமுள்ள 20 சட்டமன்ற தொகுதி வாக்காளர்கள், நாடாளுமன்ற தேர்தலுக்கும் சேர்த்து ஒரே நேரத்தில் 2 வாக்குகளை பதிவு செய்தனர்.

ஆனால், நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தல் என்று பிரித்து பார்த்தே 20 தொகுதி வாக்காளர்களும் ஓட்டுபோட்டுள்ளனர். உதாரணமாக, காஞ்சீபுரம் நாடாளுமன்ற தொகுதியில் உள்ள திருப்போரூர் சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க.வுக்கு இடைத்தேர்தலில் 82,335 வாக்குகள் கிடைத்துள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் 76,540 வாக்குகளாக அது குறைந்துள்ளது. அதாவது, தமிழகம் என்று வரும்போது அ.தி.மு.க.வுக்கு ஆதரவு அளித்த மக்கள்கூட, நாடாளுமன்ற தேர்தல் என்று வரும்போது அ.தி.மு.க.வை பா.ஜ.க.வின் கூட்டணி கட்சியாகவே பார்க்கின்றனர். அதனால், ஓட்டையும் மாற்றி போட்டு உள்ளனர்.

அதேபோல், சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் உள்ள மானாமதுரை சட்டமன்ற தொகுதியில், அ.தி.மு.க.வுக்கு இடைத்தேர்தலில் 85,228 வாக்குகளும், நாடாளுமன்ற தேர்தலில் 60,059 வாக்குகளும் கிடைத்துள்ளது. இந்த நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள பா.ஜ.க. வேட்பாளர் போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி நாடாளுமன்ற தேர்தலையும், சட்டமன்ற இடைத்தேர்தலையும் மக்கள் பிரித்து பார்த்தே வாக்களித்துள்ளனர்.

20 சட்டமன்ற தொகுதிகளில் நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் விவரம் வருமாறு:-


மேலும் செய்திகள்
மாநிலங்களவையிலும் தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மை பெற வாய்ப்பு...!
2021- இல் மாநிலங்களவையிலும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைக்க வாய்ப்பு உள்ளது.
பதிவு: மே 28, 2019 00:00 AM மாற்றம்: மே 28, 2019 12:50 PM
புதுடெல்லி,

அண்மையில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 353 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மை பெற்றது. பாஜக மட்டும் தனித்து 303 இடங்களில் வென்றது.  இதற்கு அடுத்தப்படியாக 52 தொகுதிகளில் மட்டுமே காங்கிரஸ் வென்று மக்களவையில், எதிர்க்கட்சி தலைவர் அந்தஸ்து கூட பெற முடியாத நிலையில் உள்ளது.

கடந்த முறை, மோடி அரசு மக்களவையில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்த போதிலும், மாநிலங்களவையில் அக்கட்சிக்கு பெரும்பான்மை பலம் இல்லை. இதனால், முத்தலாக் மசோதா உள்பட பல முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற முடியாமல் மோடி அரசு  தவித்தது. இந்த சூழலில், விரைவில் மாநிலங்களவையிலும் தேசிய ஜனநாயக கூட்டணி தனிப்பெரும்பான்மை பெறும் என கூறப்படுகிறது. 

ராஜ்யசபாவில் மொத்தமாக 250 இடங்கள் உள்ளன. அதில் பாஜக தலைமையிலான கூட்டணிக்குத் தற்போது 102 இடங்கள் உள்ளன. எதிர்க்கட்சிக்கு 65 இடங்கள் உள்ளன. பெரும்பான்மை பெற 124 இடங்கள் தேவைப்படும்.  ராஜ்யசபாவில் இந்த ஆண்டு 10 இடங்கள் காலியாகும். அடுத்த ஆண்டு 72 இடங்கள் காலியாகும். 2020- ஆம் ஆண்டில் காலியாகும் 10 மாநிலங்களவை இடங்கள் உத்தர பிரதேசத்தைச் சேர்ந்தவையாகும். அங்கு பாஜக-வுக்குப் பெரும்பான்மை உள்ளது. இதனால் 10-ல் 9 இடங்களை பாஜக கைப்பற்ற வாய்ப்புள்ளது. 

உத்தர பிரதேசத்தை பொறுத்தவரை இந்த ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் மொத்தம் இருக்கும் 80 இடங்களில் பாஜக கூட்டணி 64-ஐ கைப்பற்றியது. சமாஜ்வாடி - பகுஜன் சமாஜ் 15 இடங்களைப் பிடித்தது. காங்கிரஸ் கட்சி ஒன்றில்தான் வெற்றி பெற்றது.  பாஜக தற்போது ஆட்சியில் இருக்கும் மாநிலங்களான மகாராஷ்டிரா, ஹரியானா, ஜார்கண்ட் உள்ளிட்டவைகளில் இந்த ஆண்டு முடிவில் சட்டமன்றத்தேர்தல் நடக்க உள்ளது. இந்த அனைத்து மாநிலங்களிலும் பாஜக மீண்டும் ஆட்சியை பிடித்தால், ராஜ்யசபாவில் அக்கட்சியால் பெரும்பான்மை பெற முடியும். எனவே,  2021-இல் மாநிலங்களவையில், தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மை பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது. 

ராஜ்யசபாவில் பெரும்பான்மை பெறுவதன் மூலம் பாஜக, மசோதாக்களுக்கு சுலபமாக ஒப்புதல் பெற முடியும். குறிப்பாக முத்தலாக் மசோதா, குடியுரிமை மசோதா போன்ற மசோதாக்களை பாஜக அரசு நிறைவேற்ற முடியும். 
மேலும் செய்திகள்
ராஜினாமா முடிவில் ராகுல் காந்தி பிடிவாதம் : மீண்டும் காரிய கமிட்டி கூடுமா?
ராஜினாமா முடிவில் ராகுல் காந்தி பிடிவாதமாக இருப்பதால் மூத்த தலைவர்கள் மீண்டும் கூடி ஆலோசனை நடத்த உள்ளனர்.
பதிவு: மே 28, 2019 00:00 AM மாற்றம்: மே 28, 2019 11:23 AM
புதுடெல்லி,

நாடாளுமன்ற தேர்தலில் ஏற்பட்ட தோல்வி குறித்து விவாதிக்க கடந்த 25-ந் தேதி காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாகவும், தனது குடும்பத்தை சேராத ஒருவரை தலைவராக நியமிக்க வேண்டும் என்றும் கூறினார்.

இதனை கட்சியின் நிர்வாகிகள் ஏற்க மறுத்தனர். கட்சியின் மூத்த நிர்வாகிகள் தங்கள் மகன்களுக்கு ‘சீட்’ கேட்டு தன்னை தொந்தரவு செய்ததாகவும் ராகுல் காந்தி கூறியதாக தகவல்கள் வெளியாகின. 

இந்நிலையில் கர்நாடகா மற்றும் ராஜஸ்தானில் உள்ள காங்கிரஸ் மாநில அரசுகளும் நெருக்கடியை சந்தித்து வருகின்றன. இந்த தகவலும் காங்கிரஸ் தலைவர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

இதற்கிடையே சில மாநில காங்கிரஸ் தலைவர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்ய தொடங்கி உள்ளனர். பஞ்சாப் மாநில தலைவர் சுனில் ஜாகர், ஜார்கண்ட் அஜய்குமார், அசாம் ரிபுன் போரா, ராஜஸ்தான் அசோக் கெலாட், உத்தரபிரதேசம் ராஜ்பாப்பர், மராட்டியம் அசோக் சவாண் ஆகியோர் தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.

காரிய கமிட்டி கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக கூறிய ராகுல் காந்தி தனது முடிவில் உறுதியாக இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. கட்சி நிர்வாகிகள் யாரையும் சந்திக்காமல் ராகுல் காந்தி  தொடர்ந்து தவிர்த்து வருகிறார் என கூறப்படுகிறது. இந்த நிலையில் தமிழக காங்கிரஸ் எம்.பி.க்கள் தலைநகர் டெல்லியில் முகாமிட்டு ராகுல் காந்தியை சந்திக்க காத்திருக்கின்றனர். மேலும் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி ராகுல் காந்தியை சந்திக்க நேரம் ஒதுக்க தொடர்ந்து இரண்டு நாட்களாக டெல்லியில் தங்கி முயற்சித்து வருகிறார். ஆனால் ராகுல் காந்தி இன்னும் நேரம் ஒதுக்காமல் இருக்கிறார். தமிழக எம்.பி.க்கள் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தியையும் சந்திக்க முயற்சி செய்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கட்சியின் தூதுவர்களாக மூத்த தலைவர்கள் அகமது பட்டேல், கே.சி. வேணுகோபால் ஆகிய இருவர் மட்டும் நேற்று காலை ராகுல் காந்தியை சந்தித்து பேசினார்கள். அவர்கள் சமாதானத்தை ஏற்க மறுத்த ராகுல் காந்தி, தனது முடிவில் உறுதியாக இருப்பதாக கூறியுள்ளனர்.

காங்கிரஸ் தலைவர்கள் இது குறித்து  விவாதிக்க, இந்த வாரம் மீண்டும் காரிய குழு கூட்டத்தை கூட்டப்போவதாக் தகவல் தெரிவித்தனர். ஆனால் இதை காங்கிரஸ் மறுத்து உள்ளது.
மேலும் செய்திகள்