புதிய எம்.பி.க்கள் பதவி பிரமாணம் தேர்தலுக்கு பின் முதல் கூட்டத்தொடர் நாடாளுமன்றம் ஜூன் 6-ந்தேதி கூடுகிறது ஜனாதிபதி உரை நிகழ்த்துகிறார்
தேர்தலுக்கு பின், நாடாளுமன்றம் முதன் முதலாக வருகிற ஜூன் 6-ந்தேதி கூடுகிறது. முதல் நாள் நடைபெறும் கூட்டு கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரை நிகழ்த்துகிறார். தற்காலிக சபாநாயகர், புதிய எம்.பி.க்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைப்பார்.
பதிவு: மே 28, 2019 00:00 AM மாற்றம்: மே 28, 2019 05:14 AM
புதுடெல்லி,

17-வது நாடாளுமன்றத்தை தேர்ந்தெடுக்க ஏப்ரல் 11-ந்தேதி தொடங்கி கடந்த 19-ந்தேதி முடிய 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது.

இந்த தேர்தலில் பாரதீய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வாக்குப்பதிவு நடந்த 542 தொகுதிகளில் 353 தொகுதிகளை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. இதில் பாரதீய ஜனதா மட்டும் 303 இடங்களில் வெற்றி பெற்று தனி பெரும்பான்மை பெற்றது.

என்றாலும் தோழமை கட்சிகளையும் சேர்த்துக்கொண்டு பாரதீய ஜனதா மீண்டும் கூட்டணி ஆட்சி அமைக்கிறது. புதிதாக தேர்ந்து எடுக்கப்பட்ட பாரதீய ஜனதா எம்.பி.க்கள் கூட்டத்தில் மோடி மீண்டும் பிரதமராக தேர்வு செய்யப்பட்டார்.

இதைத்தொடர்ந்து, ஜனாதிபதி விடுத்த அழைப்பை ஏற்று அவர் வருகிற 30-ந்தேதி தொடர்ந்து 2-வது முறையாக பிரதமராக பதவி ஏற்க இருக்கிறார். அவருடன் மந்திரிகளும் பதவி ஏற்பார்கள்.

காங்கிரஸ் அல்லாத ஒரு தலைவர் தொடர்ந்து இருமுறை பிரதமராக பதவி ஏற்பது இதுவே முதல் முறை ஆகும். இதற்கு முன் காங் கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜவகர்லால் நேரு, அவரது மகள் இந்திராக காந்தி, மன்மோகன் சிங் ஆகியோர் தொடர்ந்து இருமுறை பிரதமராக பதவி வகித்து உள்ளனர்.

இந்தநிலையில், புதிதாக தேர்ந்து எடுக்கப்பட்ட 17-வது நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத்தொடர் வருகிற ஜூன் மாதம் 6-ந்தேதி தொடங்குகிறது. ஜூன் 15-ந்தேதி வரை இந்த கூட்டத்தொடர் நடைபெறும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

முதல் நாள் கூட்டம், மக்களவைக்கு புதிதாக தேர்ந்து எடுக்கப்பட்ட எம்.பி.க்கள் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் கலந்துகொள்ளும் கூட்டு கூட்டமாக நடைபெறும். அந்த கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரை நிகழ்த்துவார்.

அன்றே நாடாளுமன்ற மூத்த உறுப்பினர் ஒருவர் தற்காலிக சபாநாயகராக தேர்வு செய்யப்படுவார் என்று தெரிகிறது. அவர் புதிதாக தேர்ந்து எடுக்கப்பட்ட உறுப்பினர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைப்பார்.
ஜூன் 10-ந்தேதிக்கு முன் சபாநாயகர் தேர்ந்து எடுக்கப்படுவார்.

அதன்பிறகு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும், ஜனாதிபதியின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெறும். பின்னர் அந்த விவாதத்துக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்து பேசுவார். அதன்பிறகு அந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்படும்.

பிரதமர் மோடி தலைமையிலான புதிய மந்திரிசபை கூட்டம் 31-ந்தேதி நடைபெறுகிறது. நாடாளுமன்றம் கூடும் தேதியும், எத்தனை நாட்கள் கூட்டத்தொடரை நடத்துவது என்பது பற்றியும் அதில் இறுதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் செய்திகள்
தேர்தல்களின் போது ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுப்பது ஒரு சவால் தலைமை தேர்தல் அதிகாரி கருத்து
தேர்தல்களின் போது ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுப்பது ஒரு சவால் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறினார்.
பதிவு: மே 28, 2019 00:00 AM மாற்றம்: மே 28, 2019 04:59 AM
சென்னை,

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல்கள் முடிவடைந்த நிலையில், இந்த தேர்தல் பணிகள் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு, சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்த தேர்தலை சிறப்பாக நடத்தியதற்கு, தேர்தல் பணியாற்றிய அதிகாரிகளுக்கும், அலுவலர்களுக்கும் அளித்த பயிற்சி ஒரு காரணமாக இருந்தது. நாங்கள் அளித்த பயிற்சி, கீழ்நிலை பணியாளர்கள் வரை சென்று, தேர்தலை நல்லபடியாக நடத்த உதவியது. பயிற்சிக்கு மேல் பயிற்சி அளித்தால் எந்தத் தவறும் இல்லாமல் தேர்தலை நடத்திவிட முடியும் என்பதுதான் நான் கண்ட உண்மை.

அரசியல் வட்டாரத்தில் இருந்து குற்றச்சாட்டுகள் வந்தாலும் அதில் உண்மை இருக்கிறதா? என்று பார்ப்பேன். குற்றச்சாட்டுகளை சாதகமாக எடுத்துக்கொண்டேன். இந்த தேர்தல் மூலம் பல விஷயங்களை புதிதாக படித்தேன். பத்திரிகையாளர்களின் அறிவுரைகளும் கிடைத்தன.

சமூக வலைதளங்களில் என் மீது வரும் விமர்சனங்களைப் படிப்பதற்கு எனக்கு நேரம் கிடைக்கவில்லை. 12 மணி நேரம் வேலையில் ஈடுபட வேண்டியிருந்தது. எனவே விமர்சனங்களை எல்லாம் ஒரு பிரச்சினையாக பார்க்கவில்லை.

தேர்தல்களின்போது ஓட்டுக்கு பணப்பட்டுவாடாவை தடுப்பது எங்களுக்கு ஒரு சவால்தான். சமுதாயத்தை நான் ஒருவரே திருத்திவிட முடியாது. சமுதாயத்தில் இருந்து எழும் பிரச்சினைகளுக்கு அந்த சமுதாயமே தீர்வு காணவேண்டும். பணப்பட்டுவாடாவை தவிர்க்க புதிய முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும். பல்கலைக்கழகங்கள், பத்திரிகைகள் போன்றவை விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

என்னிடம் தரப்பட்ட புகார்களை விசாரிக்க நான் காலம் தாழ்த்தவில்லை. உடனடி நடவடிக்கைக்கு நாங்கள் ஏற்பாடு செய்தோம். எல்லா நிகழ்வையும் நாங்கள் உன்னிப்பாக கவனித்தோம். எதையும் இலகுவாக விட்டுவிடவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்
நடத்தை விதிகள் முடிவுக்கு வந்தது எடப்பாடி பழனிசாமி பணிகளை தொடங்கினார் தலைமை செயலகத்தில் அமைச்சர்களுடன் ஆலோசனை
நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த மார்ச் 10-ந்தேதி அறிவிக்கப்பட்டது. எனவே அன்று முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன.
பதிவு: மே 28, 2019 00:00 AM மாற்றம்: மே 28, 2019 02:42 AM
சென்னை,

முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்கள் அரசு பணியில் முழு அளவில் ஈடுபடவில்லை. எனவே தலைமை செயலகத்துக்கு அவர்கள் வராமல் அரசியல் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இந்தநிலையில், 26-ந்தேதி (நேற்று முன்தினம்) மாலையில் இருந்து தேர்தல் நடத்தை விதிகள் தளர்த்தப்படுவதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதைத்தொடர்ந்து நேற்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் செங்கோட்டையன், ஜெயக்குமார், வேலுமணி, தங்கமணி, சி.வி.சண்முகம் மற்றும் பல அமைச்சர்கள் வந்து அரசு பணிகளைத் தொடங்கினர்.

எடப்பாடி பழனிசாமியை அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, செங்கோட்டையன் ஆகியோர் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
மேலும் செய்திகள்