தி.மு.க.விடம் இருந்து ஒரு மேல்-சபை பதவியை வாங்க காங்கிரஸ் முடிவு: தமிழகத்தில் இருந்து எம்.பி. ஆகிறார், மன்மோகன் சிங்
தமிழகத்தில் இருந்து முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் டெல்லி மேல்-சபை எம்.பி. ஆக இருக்கிறார். இதற்காக, தி.மு.க.விடம் இருந்து ஒரு இடத்தை வாங்க காங்கிரஸ் முடிவு செய்திருப்பதாக தெரிகிறது.
பதிவு: மே 28, 2019 00:00 AM மாற்றம்: மே 28, 2019 01:35 AM
சென்னை,

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான மன்மோகன்சிங் அசாம் மாநிலத்தில் இருந்து மேல்-சபை(மாநிலங்களவை) எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டிருந்தார். அவரது பதவி காலம் ஜூன் 14-ந் தேதி நிறைவடைகிறது. மீண்டும் அங்கிருந்து அவர் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பு இல்லை.

காரணம், அசாம் சட்டமன்றத்தில் மொத்தம் உள்ள 126 இடங்களில் காங்கிரஸ் கட்சிக்கு 25 எம்.எல்.ஏ.க்களே உள்ளனர். காங்கிரஸ் கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்கள் 13 பேர் உள்ளனர். ஆனால், ஒரு மேல்-சபை எம்.பி.யை தேர்ந்தெடுக்க 43 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை. அதை வைத்து பார்க்கும்போது, காங்கிரஸ் கட்சிக்கு மேலும் 5 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவையாக இருக்கிறது.

எனவே, அசாம் மாநிலத்தில் இருந்து காங்கிரஸ் கட்சிக்கு ஒரு மேல்-சபை இடம் கூட கிடைக்க முடியாத நிலை இருக்கிறது. ஆனால், 1991-ம் ஆண்டு முதல் அங்கிருந்து தான் மேல்-சபை உறுப்பினராக மன்மோகன்சிங் இருந்து வருகிறார். கவுகாத்தியில் வாடகை வீட்டில் தங்கியுள்ள அவருக்கு ஓட்டும் அங்கு தான் இருக்கிறது. கடந்த ஏப்ரல் மாதம் 23-ந் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றபோது அவருக்கு ஓட்டு கவுகாத்தியில் தான் இருந்தது.

தற்போதைய நிலையில், கர்நாடகா, மத்திய பிரதேசம், சத்தீஷ்கர், ராஜஸ்தான், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மேல்- சபை உறுப்பினர்களின் பதவி எதுவும் காலியாகவில்லை. இதனால், மன்மோகன்சிங் மீண்டும் மேல்-சபைக்கு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்படுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

அதே நேரத்தில், தமிழகத்தில் தான் 6 மேல்-சபை எம்.பி.க்களின் பதவி காலம் ஜூலை 24-ந் தேதியுடன் முடிவடைகிறது. அதாவது, அ.தி.மு.க.வை சேர்ந்த வி.மைத்ரேயன், கே.ஆர்.அர்ஜூனன், டி.ரத்னவேல், ஆர்.லட்சுமணன், தி.மு.க.வை சேர்ந்த கனிமொழி, இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த டி.ராஜா ஆகியோரது பதவி காலம் முடிகிறது.

தற்போது நடைபெற்ற இடைத்தேர்தலில் தி.மு.க. 13 இடங்களை கைப்பற்றியதால், கூடுதலாக ஒரு மேல்-சபை எம்.பி. பதவி அக்கட்சிக்கு கிடைக்கிறது. அந்தப் பதவியை காங்கிரஸ் கட்சி கேட்டுப்பெற முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக, அகில இந்திய காங்கிரஸ் தலைவர்கள், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுடன் கலந்து பேசுவார்கள் என்று தெரிகிறது.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சம்மதம் தெரிவிக்கும் பட்சத்தில், தமிழகத்தில் இருந்து தி.மு.க. சார்பில் மன்மோகன்சிங் மேல்-சபை எம்.பி.யாக இருக்கிறார்.
மேலும் செய்திகள்
சட்டமன்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற 9 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் நாளை பதவி ஏற்பு
நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலுடன் தமிழகத்தில் காலியாக இருந்த 22 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது.
பதிவு: மே 28, 2019 00:00 AM மாற்றம்: மே 28, 2019 03:14 AM
சென்னை,

நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலுடன் தமிழகத்தில் காலியாக இருந்த 22 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது. ஆட்சி கவிழுமா? என்ற குழப்பமான நிலையில் நடைபெற்ற இந்த இடைத்தேர்தலில் ஆட்சியை தக்கவைத்துக்கொள்வதற்கான 9 இடங்களை அ.தி.மு.க. கைப்பற்றியது.

அதாவது, சம்பத்குமார் (அரூர்), கோவிந்தசாமி (பாப்பிரெட்டிப்பட்டி), எஸ்.தேன்மொழி (நிலக்கோட்டை), எஸ்.நாகராஜன் (மானாமதுரை), எம்.எஸ்.ஆர்.ராஜவர்மன் (சாத்தூர்), என்.சதன்பிரபாகர் (பரமக்குடி), சம்பத் (சோளிங்கர்), பி.கந்தசாமி (சூலூர்), சின்னப்பன் (விளாத்திகுளம்) ஆகிய 9 அ.தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். தி.மு.க. 13 இடங்களை கைப்பற்றியும் அ.தி.மு.க. ஆட்சிக்கு நெருக்கடி கொடுக்க முடியவில்லை.

இந்த நிலையில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 9 பேரும் நாளை (புதன்கிழமை) சபாநாயகர் ப.தனபால் முன்னிலையில் சென்னை தலைமைச்செயலகத்தில் பதவியேற்க உள்ளனர். இந்த நிகழ்ச்சியில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் கலந்துகொள்ள இருக்கின்றனர்.

தற்போதைய நிலையில் தமிழக சட்டசபையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களின் பலம் 123 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் தி.மு.க.வின் எம்.எல்.ஏ.க்களின் பலமும் 110 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் செய்திகள்
தமிழகத்தில் பா.ஜ.க.வுக்கு பின்னடைவு: ‘கட்சி தலைமை என்னிடம் அறிக்கை கேட்கவில்லை’ டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி
தோல்விக்கான காரணத்தை கேட்டு கட்சி தலைமை என்னிடம் அறிக்கை எதையும் கேட்கவில்லை என்று டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
பதிவு: மே 28, 2019 00:00 AM மாற்றம்: மே 28, 2019 00:44 AM
சென்னை,

நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்து பா.ஜ.க. போட்டியிட்டது. இந்த கூட்டணி தேர்தலில் படுதோல்வி அடைந்தது. ஒரு இடத்தில் மட்டும் அ.தி.மு.க. வெற்றி பெற்றது. பா.ஜ.க. போட்டியிட்ட 5 இடங்களிலும் கடுமையான சரிவை கண்டது. இந்தியா முழுவதும் பா.ஜ.க. வெற்றி பெற்று வந்த நிலையில், தமிழகத்தில் ஒரு இடத்தில் கூட அக்கட்சி வெற்றி பெற முடியாமல் போனது. அக்கட்சி தொண்டர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

இந்தநிலையில், தோல்விக்கான காரணம் குறித்து மத்திய பா.ஜ.க. தலைமை, தமிழக பா.ஜ.க.விடம் விளக்கம் கேட்டு அறிக்கை அனுப்பியிருப்பதாக தகவல்கள் வெளியானது. இந்த தகவலை தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் மறுத்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:-

அகில இந்திய பா.ஜ.க. தலைமைக்கு தமிழகத்தின் நிலைமை நன்றாகவே தெரியும். தேர்தலை நாங்கள் கூட்டணி கட்சிகளுடன் இணைந்து வலிமையாகவே எதிர்கொண்டோம். இதுவும் கட்சியின் தலைமைக்கு தெரியும். கூட்டணி கட்சி தலைவர்கள் வெற்றிக்காக கடுமையாக உழைத்தார்கள்.

இன்னும் சொல்லப்போனால், இந்தியா முழுவதும் பா.ஜ.க. வெற்றி கோஷம் ஒலித்து கொண்டிருந்த நேரத்தில், பின்னடைவு சந்தித்து கொண்டிருந்த மாநிலங்களில் கட்சி தலைமை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, கவலைப்படாதீர்கள், தொண்டர்களை உற்சாகமாக இருக்க சொல்லுங்கள் என்று தெரிவித்தார்கள்.

ஆனால் சிலர் வேண்டுமென்றே இதுபோன்று பரப்புகிறார்கள். கட்சி தலைமை எங்களிடம் தோல்விக்கான விளக்க அறிக்கை எதையும் கேட்கவில்லை. இது முற்றிலும் தவறானது. 2 ஜி ஊழல் வழக்கில் சிக்கிய, பண பலத்துடன் தேர்தலை சந்தித்த கனிமொழியை எதிர்கொண்ட என்னை கட்சி தலைமை பாராட்டத்தான் செய்தது.

பிரதமர் பதவியேற்பு விழாவுக்கு நான் தான் கூட்டணி கட்சி தலைவர்களை அழைத்து செல்ல இருக்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மேலும் செய்திகள்