சட்டமன்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற 9 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் நாளை பதவி ஏற்பு
நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலுடன் தமிழகத்தில் காலியாக இருந்த 22 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது.
பதிவு: மே 28, 2019 00:00 AM மாற்றம்: மே 28, 2019 03:14 AM
சென்னை,

நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலுடன் தமிழகத்தில் காலியாக இருந்த 22 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது. ஆட்சி கவிழுமா? என்ற குழப்பமான நிலையில் நடைபெற்ற இந்த இடைத்தேர்தலில் ஆட்சியை தக்கவைத்துக்கொள்வதற்கான 9 இடங்களை அ.தி.மு.க. கைப்பற்றியது.

அதாவது, சம்பத்குமார் (அரூர்), கோவிந்தசாமி (பாப்பிரெட்டிப்பட்டி), எஸ்.தேன்மொழி (நிலக்கோட்டை), எஸ்.நாகராஜன் (மானாமதுரை), எம்.எஸ்.ஆர்.ராஜவர்மன் (சாத்தூர்), என்.சதன்பிரபாகர் (பரமக்குடி), சம்பத் (சோளிங்கர்), பி.கந்தசாமி (சூலூர்), சின்னப்பன் (விளாத்திகுளம்) ஆகிய 9 அ.தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். தி.மு.க. 13 இடங்களை கைப்பற்றியும் அ.தி.மு.க. ஆட்சிக்கு நெருக்கடி கொடுக்க முடியவில்லை.

இந்த நிலையில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 9 பேரும் நாளை (புதன்கிழமை) சபாநாயகர் ப.தனபால் முன்னிலையில் சென்னை தலைமைச்செயலகத்தில் பதவியேற்க உள்ளனர். இந்த நிகழ்ச்சியில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் கலந்துகொள்ள இருக்கின்றனர்.

தற்போதைய நிலையில் தமிழக சட்டசபையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களின் பலம் 123 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் தி.மு.க.வின் எம்.எல்.ஏ.க்களின் பலமும் 110 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் செய்திகள்
தமிழகத்தில் பா.ஜ.க.வுக்கு பின்னடைவு: ‘கட்சி தலைமை என்னிடம் அறிக்கை கேட்கவில்லை’ டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி
தோல்விக்கான காரணத்தை கேட்டு கட்சி தலைமை என்னிடம் அறிக்கை எதையும் கேட்கவில்லை என்று டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
பதிவு: மே 28, 2019 00:00 AM மாற்றம்: மே 28, 2019 00:44 AM
சென்னை,

நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்து பா.ஜ.க. போட்டியிட்டது. இந்த கூட்டணி தேர்தலில் படுதோல்வி அடைந்தது. ஒரு இடத்தில் மட்டும் அ.தி.மு.க. வெற்றி பெற்றது. பா.ஜ.க. போட்டியிட்ட 5 இடங்களிலும் கடுமையான சரிவை கண்டது. இந்தியா முழுவதும் பா.ஜ.க. வெற்றி பெற்று வந்த நிலையில், தமிழகத்தில் ஒரு இடத்தில் கூட அக்கட்சி வெற்றி பெற முடியாமல் போனது. அக்கட்சி தொண்டர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

இந்தநிலையில், தோல்விக்கான காரணம் குறித்து மத்திய பா.ஜ.க. தலைமை, தமிழக பா.ஜ.க.விடம் விளக்கம் கேட்டு அறிக்கை அனுப்பியிருப்பதாக தகவல்கள் வெளியானது. இந்த தகவலை தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் மறுத்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:-

அகில இந்திய பா.ஜ.க. தலைமைக்கு தமிழகத்தின் நிலைமை நன்றாகவே தெரியும். தேர்தலை நாங்கள் கூட்டணி கட்சிகளுடன் இணைந்து வலிமையாகவே எதிர்கொண்டோம். இதுவும் கட்சியின் தலைமைக்கு தெரியும். கூட்டணி கட்சி தலைவர்கள் வெற்றிக்காக கடுமையாக உழைத்தார்கள்.

இன்னும் சொல்லப்போனால், இந்தியா முழுவதும் பா.ஜ.க. வெற்றி கோஷம் ஒலித்து கொண்டிருந்த நேரத்தில், பின்னடைவு சந்தித்து கொண்டிருந்த மாநிலங்களில் கட்சி தலைமை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, கவலைப்படாதீர்கள், தொண்டர்களை உற்சாகமாக இருக்க சொல்லுங்கள் என்று தெரிவித்தார்கள்.

ஆனால் சிலர் வேண்டுமென்றே இதுபோன்று பரப்புகிறார்கள். கட்சி தலைமை எங்களிடம் தோல்விக்கான விளக்க அறிக்கை எதையும் கேட்கவில்லை. இது முற்றிலும் தவறானது. 2 ஜி ஊழல் வழக்கில் சிக்கிய, பண பலத்துடன் தேர்தலை சந்தித்த கனிமொழியை எதிர்கொண்ட என்னை கட்சி தலைமை பாராட்டத்தான் செய்தது.

பிரதமர் பதவியேற்பு விழாவுக்கு நான் தான் கூட்டணி கட்சி தலைவர்களை அழைத்து செல்ல இருக்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மேலும் செய்திகள்
நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற எம்.பி.க்களில் 43 சதவீதம் பேர் மீது குற்ற வழக்குகள்
நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற எம்.பி.க்களில் 43 சதவீதம் பேர் மீது குற்ற வழக்குகள் இருப்பதாக ஜனநாயக சீர்திருத்த சங்கம் என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.
பதிவு: மே 27, 2019 00:00 AM மாற்றம்: மே 27, 2019 11:43 AM
புதுடெல்லி,

வெற்றி பெற்ற 539 எம்.பி.க்களை ஆய்வு செய்ததில், 233 எம்.பி.க்கள் மீது குற்ற வழக்குகள் இருப்பது தெரிய வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது 2014 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 26 சதவீதம் அதிகம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பாஜக எம்.பி.க்கள் 116 பேர் மீதும், காங்கிரஸ் கட்சியின் எம்.பி.க்கள் 29 பேர் மீதும், ஐக்கிய ஜனதா தளம் கட்சியை சேர்ந்த 13 எம்.பி.க்கள் மீதும் குற்ற வழக்குகள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. திமுகவின் 10 எம்.பி.க்கள், திரிணாமுல் காங்கிரசை சேர்ந்த 9 எம்.பி.க்கள் மீதும் குற்ற வழக்குகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்ந்து எடுக்கப்பட்ட 542 எம்.பி.க்களில்  25 முதல் 40 வயதிற்குட்பட்டோர் 12 சதவீதமாகவும்,  41 முதல் 55 வயதிற்குட்பட்டோர் 41 சதவீதமாகவும், 56 முதல் 70 வயதிற்குட்பட்டோர் 42 சதவீதமாகவும், 70 வயதிற்கு மேற்பட்டோர் 6 சதவீதமாகவும் உள்ளனர்.

தேர்ந்து எடுக்கப்பட்ட எம்.பி.க்களின்  கல்வியறிவை பொருத்தவரை  உயர்கல்வி 27 சதவீதம் பேரும்,  பட்டப்படிப்பு 43 சதவீதம் பேரும்,  பட்ட மேற்படிப்பு 25 சதவீதம் பேரும், டாக்டரேட் 4 சதவீதம் பேரும் படித்து உள்ளனர்.

சமூக சேவையில் 39 சதவீதம் எம்.பி.க்களும்,  வணிகத்தில் 23 சதவீத எம்.பி.க்களும் , விவசாயத்தில் 38 சதவீத எம்.பி.க்களும்,  வக்கீலாக 4 சதவீத எம்.பி.க்களும், டாக்டராக 4 சதவீத எம்.பி.க்களும், கலைஞர்களாக 3 சதவீத எம்.பி.க்களும் , ஆசிரியர்களாக 2 சதவீத எம்.பி.க்களும் பணியாற்றி வருவதாக குறிப்பிட்டு உள்ளனர். 
மேலும் செய்திகள்