மூத்த தலைவர்கள் ஒதுங்கிக் கொண்டனர் மோடிக்கு எதிராக ராகுல் காந்தி தனியாக போராடினார் பிரியங்கா ஆவேசம்
மூத்த தலைவர்கள் ஒதுங்கிக் கொண்டதால், மோடிக்கு எதிராக ராகுல் காந்தி தனியாக போராடினார் என்று காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் பிரியங்கா பேசினார்.
பதிவு: மே 27, 2019 00:00 AM மாற்றம்: மே 27, 2019 03:14 AM
புதுடெல்லி,

நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்தது. தோல்வி பற்றி ஆராய காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம், நேற்று முன்தினம் நடைபெற்றது. அதில், 4 மணி நேரமாக காரசார விவாதம் நடந்துள்ளது.

அதுபற்றி காங்கிரஸ் வட்டாரங்கள் கூறியதாவது:-

காரிய கமிட்டி கூட்டத்தில், காங்கிரசின் தோல்விக்கு தார்மீக பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்ய ராகுல் காந்தி முன்வந்தார். தனது குடும்பத்தை சேர்ந்த வேறு யாரும் அந்த பதவிக்கு வருவதை, தான் விரும்பவில்லை என்றும் அவர் கூறினார். வேறு யாராவது காங்கிரஸ் தலைவராக இருக்க முடியாதா? என்றும் அவர் கேட்டார்.

ராஜினாமா முடிவை திரும்பப் பெறுமாறு அவரை சில மூத்த தலைவர்கள் வற்புறுத்தினர். அப்போது, வேதனை கலந்த முகத்துடன் காட்சி அளித்த பிரியங்கா குறுக்கிட்டு ஆவேசமாக பேசினார். “பிரதமர் மோடிக்கு எதிராக என் சகோதரரை தனியாக போராட விட்டுவிட்டு, ஒதுங்கிக்கொண்டீர்கள். நீங்கள் எல்லாம் அப்போது எங்கே இருந்தீர்கள்? மோடிக்கு எதிராக ரபேல் விவகாரத்தையும், ‘காவலாளி ஒரு திருடன்’ என்ற கோஷத்தையும் என் சகோதரர் எழுப்பியபோது, அவரை யாரும் ஆதரிக்க முன்வரவில்லை. காங்கிரசின் தோல்விக்கு காரணமான அனைவரும் இந்த அறையில் இருக்கிறார்கள்” என்று பிரியங்கா கூறினார்.

மேலும், “ராஜினாமா செய்வது, பா.ஜனதாவின் வலையில் விழுந்ததுபோல் ஆகிவிடும்” என்று கூறி, ராஜினாமா செய்ய வேண்டாம் என்று ராகுலிடம் அவர் வலியுறுத்தினார்.

ஒரு கட்டத்தில், ஜோதிர் ஆதித்ய சிந்தியா எழுந்து, “கட்சியின் மாநில தலைமைகளை வலுப்படுத்த வேண்டும்” என்று யோசனை தெரிவித்தார். அப்போது, கூட்டத்தில் இருந்த முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தை பார்த்த ராகுல் காந்தி, “தனது மகனுக்கு சீட் கொடுக்காவிட்டால், ராஜினாமா செய்து விடுவேன் என்று ப.சிதம்பரம் மிரட்டினார்” என்று குற்றம் சாட்டினார்.

அவர் தொடர்ந்து பேசுகையில், “ப.சிதம்பரம், மத்தியபிரதேச முதல்-மந்திரி கமல்நாத், ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக் கெலாட் ஆகியோர் கட்சி நலன்களை புறந்தள்ளிவிட்டு, தங்கள் மகன்களை முன்னிறுத்துவதில் அக்கறை காட்டினர்.

தனது மகனுக்கு சீட் வாங்க முடியாவிட்டால், தான் எப்படி முதல்-மந்திரியாக இருக்க முடியும்? என்று கமல்நாத் கேட்டார். அசோக் கெலாட், தனது மகன் போட்டியிட்ட ஜோத்பூரில் 7 நாட்கள் பிரசாரம் செய்தார். மற்ற தொகுதிகளுக்கு அவர் செல்லவில்லை.

ரபேல் பற்றிய எனது பிரசாரத்தை கட்சியில் யாரும் ஆதரிக்கவில்லை. மோடி மீது நான் ஊழல் குற்றச்சாட்டு கூறியதை இங்கு இருக்கும் எத்தனைபேர் ஆதரித்தீர்கள்?” என்று கேட்டார்.

அப்போது, சில தலைவர்கள் கையை உயர்த்தினர். தாங்கள், ‘ரபேல்’ விவகாரம் பற்றி பேசியதாக அவர்கள் கூறினர். ஆனால் அதை ராகுல் காந்தி நிராகரித்தார். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த கூட்டத்தில் பிரியங்கா கடைசிவரை பங்கேற்றார். ராகுல் காந்தி, பாதியில் வெளியேறினார்.
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி, காங். தலைவர் ராகுல் காந்தியை இன்று மயாவதி சந்தித்து பேச திட்டமிட்டு இருந்தார்.
பிரதமர் மோடி என்னுடைய குடும்பத்தை அவமதிக்கிறார், ஆனால் நான் அவரை அவமதிக்க மாட்டேன் என ராகுல் காந்தி கூறியுள்ளார்.
குத்துச்சண்டை களத்தில் இறங்கிய பாக்சர் மோடியின் முதல் குத்து மூத்த தலைவரான அத்வானிக்குதான் என ராகுல்காந்தி விமர்சனம் செய்தார்.
அமேதி தொகுதியில் போட்டியிடும் ராகுல் காந்தியின் வேட்பு மனு ஏற்றுக்கொள்ளப்பட்டது.
பிற்படுத்தப்பட்டவன் என்பதால் ராகுல் காந்தி எப்போதும் என்னை கிண்டல் அடிக்கிறார் என பிரதமர் மோடி கவலை தெரிவித்துள்ளார்.
பாடகர், நடிகர், கிரிக்கெட் வீரர் என நாடாளுமன்றத்தில் 300-க்கும் மேற்பட்ட புதுமுகங்கள்
ஒவ்வொரு தேர்தலிலும் ஏராளமான புதுமுகங்களை நாடாளுமன்றம் பெற்று வருகிறது.
பதிவு: மே 27, 2019 00:00 AM மாற்றம்: மே 27, 2019 03:14 AM
புதுடெல்லி,

அந்த வகையில் சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலிலும் பல்வேறு துறைகளை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட புதுமுகங்கள் வெற்றி பெற்று நாடாளுமன்றம் செல்ல உள்ளனர்.

இவர்களில் மாலேகான் குண்டுவெடிப்பில் கைது செய்யப்பட்டவரும், பெண் சாமியாருமான பிரக்யா தாகூர், சூபி பாடகர் ஹன்ஸ்ராஜ் ஹன்ஸ், முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர், நடிகர் சன்னி தியோல் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர்.

இவர்களை தவிர, பா.ஜனதாவின் மகத்தான வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக இருந்த கட்சியின் தலைவர் அமித்ஷா மக்களவைக்கு புதுமுகம் ஆவார். இதுவரை மாநிலங்களவை உறுப்பினராக இருந்து எதிர்க்கட்சிகளுக்கு பதிலடி கொடுத்து வந்த இவர், இனிமேல் மக்களவையில் பா.ஜனதாவுக்கு பெரும் பலமாக திகழ்வார் என கருதப்படுகிறது.

இதைப்போல மத்திய மந்திரியாக இருந்த ஸ்மிரிதி இரானி முதல் முறையாக மக்களவையில் அடியெடுத்து வைக்கிறார். அமேதி தொகுதியில் ராகுல் காந்தியையே வீழ்த்திய அவருக்கு கட்சியினர் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது. இவரைப்போல மாநிலங்களவை உறுப்பினராக இருந்து மந்திரி பதவியை வகித்து வந்த ரவிசங்கர் பிரசாத்தும் மக்களவைக்கு முதல் முறை உறுப்பினர் ஆகிறார்.

இத்தகைய புதுமுகங்கள் ஒருபுறம் இருக்க மறுபுறம் ஏராளமான மூத்த தலைவர்களை இந்த நாடாளுமன்றம் இழந்து இருக்கிறது. அந்தவகையில் பா.ஜனதா மூத்த தலைவர்கள் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, முன்னாள் சபாநாயகர் சுமித்ரா மகாஜன் ஆகியோர் மீண்டும் போட்டியிடாதது பா.ஜனதாவுக்கு மிகப்பெரும் இழப்பாக கருதப்படுகிறது.

மேலும் முந்தைய மக்களவையில் காங்கிரஸ் கட்சித்தலைவராக பொறுப்பு வகித்த மல்லிகார்ஜூன கார்கே, ஜோதிராதித்ய சிந்தியா போன்றவர்களையும் நாடாளுமன்றம் இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்
டெல்லியில் பிரதமர் மோடியுடன் ஜெகன் மோகன் ரெட்டி சந்திப்பு
டெல்லியில் பிரதமர் மோடியை ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி சந்தித்து வாழ்த்து பெற்றார்.
பதிவு: மே 26, 2019 00:00 AM மாற்றம்: மே 26, 2019 13:22 PM
புதுடெல்லி,

நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடந்து முடிந்தது.  இந்த தேர்தலுடன் சேர்ந்து நடைபெற்ற ஆந்திர சட்டப்பேரவை தேர்தலில், தெலுங்கு தேச கட்சியின் தலைவரான முதல் மந்திரி சந்திரபாபு நாயுடுவை வீழ்த்தி, ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர்.  காங்கிரஸ் அபார வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது.  அக்கட்சி மொத்தமுள்ள 175 தொகுதிகளில் 151 இடங்களை கைப்பற்றியது.

இதையடுத்து, ஆந்திர முதலமைச்சராக ஜெகன் மோகன் ரெட்டி பதவியேற்க உள்ளார்.  அவரை ஆளுநர் நரசிம்மன் முறைப்படி ஆட்சி அமைக்க வரும்படி அழைப்பு விடுத்துள்ளார்.  இதற்கான விழா விஜயவாடாவில் வரும் 30ந்தேதி நடைபெறுகிறது. 

இந்நிலையில் ஜெகன் மோகன் ரெட்டி இன்று டெல்லிக்கு சென்று பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றார்.  இதையடுத்து, 30ஆம் தேதி நடைபெறும் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள வருமாறு பிரதமர் மோடிக்கு ஜெகன் மோகன் ரெட்டி அழைப்பு விடுத்தார்.  இந்த சந்திப்பில் ஜெகன் மோகனுடன் விஜய சாய் ரெட்டி மற்றும் அக்கட்சியின் பிற தலைவர்களும் உடனிருந்தனர்.
மேலும் செய்திகள்