டெல்லியில் பிரதமர் மோடியுடன் ஜெகன் மோகன் ரெட்டி சந்திப்பு
டெல்லியில் பிரதமர் மோடியை ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி சந்தித்து வாழ்த்து பெற்றார்.
பதிவு: மே 26, 2019 00:00 AM மாற்றம்: மே 26, 2019 13:22 PM
புதுடெல்லி,

நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடந்து முடிந்தது.  இந்த தேர்தலுடன் சேர்ந்து நடைபெற்ற ஆந்திர சட்டப்பேரவை தேர்தலில், தெலுங்கு தேச கட்சியின் தலைவரான முதல் மந்திரி சந்திரபாபு நாயுடுவை வீழ்த்தி, ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர்.  காங்கிரஸ் அபார வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது.  அக்கட்சி மொத்தமுள்ள 175 தொகுதிகளில் 151 இடங்களை கைப்பற்றியது.

இதையடுத்து, ஆந்திர முதலமைச்சராக ஜெகன் மோகன் ரெட்டி பதவியேற்க உள்ளார்.  அவரை ஆளுநர் நரசிம்மன் முறைப்படி ஆட்சி அமைக்க வரும்படி அழைப்பு விடுத்துள்ளார்.  இதற்கான விழா விஜயவாடாவில் வரும் 30ந்தேதி நடைபெறுகிறது. 

இந்நிலையில் ஜெகன் மோகன் ரெட்டி இன்று டெல்லிக்கு சென்று பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றார்.  இதையடுத்து, 30ஆம் தேதி நடைபெறும் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள வருமாறு பிரதமர் மோடிக்கு ஜெகன் மோகன் ரெட்டி அழைப்பு விடுத்தார்.  இந்த சந்திப்பில் ஜெகன் மோகனுடன் விஜய சாய் ரெட்டி மற்றும் அக்கட்சியின் பிற தலைவர்களும் உடனிருந்தனர்.
மேலும் செய்திகள்
குடியரசு தலைவரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார் நரேந்திர மோடி
குடியரசு தலைவரை சந்தித்து ஆட்சியமைக்க நரேந்திர மோடி உரிமை கோரினார்.
பதிவு: மே 25, 2019 00:00 AM மாற்றம்: மே 25, 2019 21:37 PM
புதுடெல்லி,

சமீபத்தில் நடந்து முடிந்த 17வது மக்களவை தேர்தலில் பா.ஜ.க. 303 இடங்களில் வென்று தனிப்பெரும்பான்மையுடன் உள்ளது.  பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 350க்கும் அதிகமாக இடங்களை கைப்பற்றி இருக்கிறது.

இதனை தொடர்ந்து டெல்லியில் நடந்த பா.ஜ.க. கூட்டணி கட்சி எம்.பி.க்கள் கூட்டத்தில் பா.ஜ.க. நாடாளுமன்ற குழு தலைவராக பிரதமர் மோடி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.  இதன்பின்னர் பா.ஜ.க.வின் தேசிய தலைவர் அமித் ஷா தலைமையில், பிரகாஷ் சிங் பாதல், ராஜ்நாத் சிங், நிதீஷ் குமார், ராம்விலாஸ் பஸ்வான், சுஷ்மா சுவராஜ், உத்தவ் தாக்கரே, நிதீன் கட்காரி, கே. பழனிசாமி, கன்ராட் சங்மா மற்றும் நெய்பியூ ரியோ உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினர் அடங்கிய குழு ஒன்று டெல்லி சென்றது.  அங்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்துடன் அமித் ஷா சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்பில், பா.ஜ.க.வின் நாடாளுமன்ற கட்சி தலைவராக நரேந்திர மோடி தேர்வு செய்யப்பட்டு உள்ளார் என்ற தகவல் அடங்கிய கடிதத்தினை ராம்நாத்திடம் அமித்ஷா வழங்கினார்.  

தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினரின் ஆதரவு கடிதங்களும் அவரிடம் வழங்கப்பட்டன.  இதனை அடுத்து குடியரசு தலைவரை சந்தித்து ஆட்சியமைக்க நரேந்திர மோடி உரிமை கோரினார்.  அவரை ஆட்சியமைக்க குடியரசு தலைவர் அழைப்பு விடுத்துள்ளார்.  இதன்படி, வருகிற 30ந்தேதி பிரதமராக மோடி பதவியேற்க கூடும் என்று தகவல் தெரிவிக்கின்றது.
மேலும் செய்திகள்
தி.மு.க. மக்களவை குழு தலைவராக டி.ஆர். பாலு தேர்வு
தி.மு.க. மக்களவை குழு தலைவராக டி.ஆர். பாலு தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.
பதிவு: மே 25, 2019 00:00 AM மாற்றம்: மே 25, 2019 18:43 PM
சென்னை,

தமிழகத்தில் வேலூர் தவிர்த்து நடந்து முடிந்த 38 நாடாளுமன்ற தொகுதிகளில் தேனி தவிர மற்ற அனைத்து தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றது.  தி.மு.க. கூட்டணி கட்சிகள் (விடுதலை சிறுத்தை கட்சி போட்டியிட்ட சிதம்பரம் தொகுதியை தவிர), அ.தி.மு.க. கூட்டணி கட்சிகளை அதிக ஓட்டு வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளன.

இந்த நிலையில், தி.மு.க. நாடாளுமன்ற குழு தலைவர், துணைத்தலைவர் பொறுப்புகளில் யார் யாரை நியமிப்பது என்பது பற்றி அக்கட்சியின் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.  இதற்காக டி.ஆர்.பாலு, ஜெகத்ரட்சகன், தயாநிதி மாறன், ராசா உள்ளிட்ட புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தி.மு.க. எம்.பி.க்கள் அண்ணா அறிவாலயத்திற்கு வந்தனர்.  இதனை தொடர்ந்து தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம் நடந்தது.

இந்த கூட்டத்தின் முடிவில், தி.மு.க. மக்களவை குழு தலைவராக டி.ஆர். பாலு தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.  தி.மு.க. மக்களவை குழு துணை தலைவராக கனிமொழி, பொருளாளராக எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.  இதேபோன்று தி.மு.க. மக்களவை கொறடாவாக முன்னாள் மத்திய மந்திரி ஆ. ராசா,
மாநிலங்களவை தி.மு.க. குழு தலைவராக திருச்சி சிவா, மாநிலங்களவை தி.மு.க. கொறடாவாக டி.கே.எஸ். இளங்கோவன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

இந்த கூட்டத்தில், மக்களே எஜமானர்கள்.  மக்களே மகேசர்கள் என்பதை மறவாமல் நாள்தோறும் மக்கள் பணியாற்ற வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் செய்திகள்