மண்டியாவில் சுயேச்சையாக போட்டியிட்ட நடிகை சுமலதா அபார வெற்றி
மண்டியா நாடாளுமன்ற தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்ட நடிகை சுமலதா, முதல்–மந்திரி குமாரசாமியின் மகனை ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றார்.
பதிவு: மே 23, 2019 17:44 PM மாற்றம்: மே 23, 2019 19:20 PM
பெங்களூரு,

நாடாளுமன்ற தேர்தலில் கர்நாடகத்தில் காங்கிரசும், ஜனதா தளம் (எஸ்) கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. ஜனதா தளம் (எஸ்) கட்சி சார்பில் மண்டியா தொகுதியில் முன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் பேரனும், முதல்–மந்திரி குமாரசாமியின் மகனுமான நிகில் குமாரசாமி போட்டியிட்டார்.

அவரை எதிர்த்து மறைந்த முன்னாள் மத்திய–மாநில மந்திரியும், நடிகருமான அம்பரீசின் மனைவியும், நடிகையுமான சுமலதா அம்பரீஷ் சுயேச்சையாக போட்டியிட்டார். தேர்தலுக்கு முன்னதாக மண்டியா தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட சுமலதா அம்பரீஷ் முயற்சித்து வந்தார். அதற்காக அவர் முன்னாள் முதல்–மந்திரியும், காங்கிரஸ்–ஜனதா தளம்(எஸ்) கூட்டணியின் ஒருங்கிணைப்பு குழு தலைவருமான சித்தராமையா மற்றும் காங்கிரஸ் தலைவர்களை சந்தித்து டிக்கெட் கேட்டு வந்தார்.

காங்கிரஸ்–ஜனதா தளம்(எஸ்) கூட்டணியில் தொகுதி பங்கீட்டின்போது மண்டியா தொகுதி ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. இதனால் காங்கிரஸ் சார்பில் போட்டியிட சுமலதாவுக்கு டிக்கெட் கிடைக்கவில்லை. அதனால் சுமலதா மண்டியா தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டார்.

இதனால் மண்டியா தொகுதி நட்சத்திர தொகுதியானது. அத்தொகுதியில் ஜனதா தளம்(எஸ்) வேட்பாளர் நிகில் குமாரசாமிக்கும், சுயேச்சை வேட்பாளர் சுமலதாவுக்கும் நேரடி போட்டி ஏற்பட்டது. இருவரும் தனித்தனியாக சூறாவளி பிரசாரம் மேற்கொண்டனர்.

ஏற்கனவே சட்டமன்ற தேர்தலில் மண்டியா மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து தொகுதிகளையும் ஜனதா தளம்(எஸ்) கைப்பற்றி இருந்ததாலும், முதல்–மந்திரியின் மகன் என்பதாலும் நிகில் குமாரசாமி எளிதில் வெற்றிபெற்று விடுவார் என்று கணக்கிடப்பட்டது. ஆனால் நாடாளுமன்ற தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியவுடன் சுமலதாவுக்கு ஆதரவு பெருகியது. பா.ஜனதா பகிரங்கமாக சுமலதாவுக்கு ஆதரவு அளித்தது. அதோடு மண்டியா தொகுதியில் பா.ஜனதா வேட்பாளரையும் நிறுத்தவில்லை.

இதற்கிடையே மண்டியா தொகுதியை ஜனதா தளம்(எஸ்) கட்சி கைப்பற்றியதால் அங்குள்ள காங்கிரசார் அதிருப்தி அடைந்தனர். அவர்களும் மறைமுகமாக சுமலதாவை ஆதரித்தனர். அதுமட்டுமல்லாமல் மண்டியா மாவட்ட காங்கிரசாரை முதல்–மந்திரி குமாரசாமி பங்கிரங்கமாகவே குற்றம்சாட்டி கடுமையாக விமர்சித்து பேசினார். இதனால் சுமலதா அம்பரீசுக்கு காங்கிரசாரின் ஆதரவு அதிகரித்தது.

இதுபற்றி அறிந்த முதல்–மந்திரி குமாரசாமி மண்டியாவிலேயே முகாமிட்டு தனது மகனுக்காக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். தேவேகவுடாவும் மண்டியாவில் சூறாவளி பிரசாரம் செய்தார். இது ஒருபுறம் இருக்க சுமலதா அம்பரீசுக்கு ஆதரவாக நடிகர்கள் தர்‌ஷன், யஷ் உள்ளிட்டோர் களம் இறங்கினர். இவற்றுக்கெல்லாம் மேலாக மைசூருவில் பிரசாரம் மேற்கொள்ள வந்த பிரதமர் நரேந்திர மோடி மண்டியா தொகுதியில் சுமலதாவை வெற்றிபெற வைத்து எனது கரத்தை பலப்படுத்துங்கள் என்று பகிரங்கமாக பேசினார். பிரதமர் மோடியின் ஆதரவு சுமலதாவுக்கு மேலும் பலத்தை கூட்டியது.

இப்படி பல்வேறு அதிரடி திருப்பங்களுக்கு இடையே மண்டியாவில் தேர்தல் பரபரப்பாக நடந்து முடிந்தது. தேர்தல் ஓட்டு எண்ணிக்கை நேற்று மண்டியாவில் நடந்தது.

இதில் முதல் 4, 5 சுற்றுகளில் நிகில் குமாரசாமியும், சுமலதாவும் மாறி, மாறி முன்னிலை பெற்று வந்தனர். இருவருக்குமிடையே 3 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசம் இருந்து வந்தது. அதையடுத்து சுமலதா அம்பரீஷ் திடீரென எழுச்சி பெற்றார். அவர் நிகில் குமாரசாமியைவிட படிப்படியாக ஆயிரக்கணக்கான  வாக்குகள் முன்னிலை பெற்று அமோக வெற்றிபெற்றார்.

மதியம் 4.30 மணி நிலவரப்படி சுமலதா அம்பரீஷ், தன்னை எதிர்த்து போட்டியிட்ட நிகில் குமாரசாமியைவிட ஒரு லட்சத்து 15 ஆயிரம்   வாக்குகள் முன்னிலை பெற்றிருந்தார். இதில் சுமலதா அம்பரீஷ் 5 லட்சத்து 78 ஆயிரத்து 956 வாக்குகளும், நிகில் குமாரசாமி 4 லட்சத்து 63ஆயிரத்து 956 வாக்குகளும் பெற்றிருந்தனர்.
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
நடந்து முடிந்த 2019 நாடாளுமன்ற தேர்தலுக்காக மொத்தமாக 60 ஆயிரம் கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ளதாக சிஎம்எஸ் என்ற தனியார் ஆய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.
ராஜினாமா முடிவில் ராகுல் காந்தி பிடிவாதமாக இருப்பதால் மூத்த தலைவர்கள் மீண்டும் கூடி ஆலோசனை நடத்த உள்ளனர்.
நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற எம்.பி.க்களில் 43 சதவீதம் பேர் மீது குற்ற வழக்குகள் இருப்பதாக ஜனநாயக சீர்திருத்த சங்கம் என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.
கரூர் தொகுதியில் ஜோதிமணி முன்னிலை பெற்றுள்ளார். 10 சுற்றுகள் விவரம் வெளியாகி உள்ளது.
காங்கிரஸ் ஆளும் மாநிலங்களிலும் வெற்றி பெற்று தனது வலிமையை பா.ஜ.க. காட்டியுள்ளது.