ராகுல் காந்தி சிறந்த தலைவர்: தேர்தல் முடிவுக்கு பின்னர் ஒருமித்த கருத்துடன் பிரதமரை தேர்வு செய்வோம் - சந்திரபாபு நாயுடு பேட்டி
ராகுல் காந்தி சிறந்த தலைவர் என்றும், தேர்தல் முடிவுக்கு பின்னர் ஒருமித்த கருத்துடன் பிரதமரை தேர்வு செய்வோம் என்றும் சந்திரபாபு நாயுடு கூறினார்.
பதிவு: மே 15, 2019 04:45 AM மாற்றம்: மே 15, 2019 04:45 AM
ஹால்டியா,

மேற்குவங்காள மாநிலம் ஹால்டியாவில் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து தெலுங்குதேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

பிரதமர் மோடி சிறப்பாக செயல்பட முயன்றார். ஆனால் அவர் எந்த சாதனையையும் செய்யவில்லை. அதனாலேயே அவர் புல்வாமா தாக்குதல் பற்றியும், பாலகோட் வான் தாக்குதல் பற்றியும் பேச ஆரம்பித்தார். ஒவ்வொரு கூட்டத்திலும் அவர் எதிர்க்கட்சி தலைவர்களை திட்டியும், குற்றம்சாட்டியும் பேசி வருகிறார்.

நீங்கள் மோடியின் பிரசார கூட்டங்களுக்கு சென்று கவனித்தால், அவர் வலுவிழந்து இருப்பதையும், நம்பிக்கையற்ற நிலையில் இருப்பதையும் காணலாம். முன்பும் அவர் வலுவிழந்தவராகத்தான் இருந்தார். ஆனால் ஊடகங்களை அவர் தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டார். அனைத்து அரசியல்வாதிகளையும் அவர் மிரட்டினார். அதனால் யாரும் அவரைப் பற்றி பேசுவதில்லை.

பிராந்திய கட்சிகள் இணைந்து அரசு அமைப்பதில் கட்சிகளிடையே எந்த கட்டுப்பாடும் விதிக்கக்கூடாது. கட்டுப்பாடுகள் ஒற்றுமையை குலைத்துவிடும். அரசு அமைப்பதற்கான பெரும்பான்மை இடங்கள் 272 வேண்டும். தேர்தல் முடிவுக்கு பின்னர் நாங்கள் அனைவரும் இணைந்து நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிப்பதில் (பிரதமர் பதவி) ஒருமித்த கருத்தை எடுப்போம்.

ராகுல் காந்தி சிறந்த தலைவர். மோடி போல் இல்லாமல் அவருக்கு நாட்டின் நலனில் அக்கறை இருக்கிறது. மோடி யார் சொல்வதையும் கேட்பதில்லை, மற்றவர்களை மிரட்டியே ஆட்சி செய்ய நினைக்கிறார்.

1996-ம் ஆண்டு காங்கிரஸ் இல்லாமல் ஒரு கூட்டணி ஆட்சி அமைக்க முயற்சி செய்தோம். ஆனால் அது தோல்வியில் முடிந்தது. காங்கிரஸ் கட்சியை வெளியில் வைத்ததால் பின்னர் அக்கட்சி ஆதரவை விலக்கிக்கொண்டது. எனவே மிகவும் நிலையான ஒரு அரசை அமைக்க நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து முயற்சிப்போம்.

பிரதமர் குறித்து இப்போது எதுவும் கூறமுடியாது. தேர்தல் முடிவில் ஒவ்வொரு கட்சிக்கும் எத்தனை இடங்கள் கிடைக்கிறது என்று பார்க்க வேண்டும். அதன்பின்னரே நாங்கள் அமர்ந்து பேசி ஒரு முடிவு எடுப்போம். நான் புதிய மாநிலத்தில் முதல்-மந்திரியாக இருக்கிறேன். அந்த மாநிலத்தை மேம்படுத்த வேண்டும். அடுத்ததாக ஆந்திராவில் 35 தொகுதிகள் மட்டுமே உள்ளன. இது மிகவும் குறைவு. எனவே நான் பிரதமர் போட்டியில் இல்லை, மற்றவர்களுக்கு ஆதரவு தெரிவிப்பேன்.

சிலர் (சந்திரசேகர ராவ்) ஒரு கட்சி (காங்கிரஸ்) வெளியில் இருந்து ஆதரவு தரும் என்று கருதி சில முயற்சியில் இறங்கி உள்ளனர். ஆனால் யாரும் ஆதரவை நீட்டிக்க விரும்பாவிட்டால் என்ன ஆகும்? கூட்டணி ஆட்சியையும் பார்த்துவிட்டோம், மோடி தலைமையில் பெரும்பான்மை ஆட்சியையும் பார்த்துவிட்டோம். இவ்வாறு சந்திரபாபு நாயுடு கூறினார்.

இந்நிலையில் ஆந்திரா திரும்பிய சந்திரபாபு நாயுடுவை நேற்று அமராவதியில் தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் சந்தித்து பேசினார். இது அவரது தனிப்பட்ட சந்திப்பு என்று தெலுங்குதேசம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. சந்திப்புக்கு பின்னர் துரைமுருகன் பத்திரிகையாளர்களிடம் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.

மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
கட்சியை மறுசீரமைக்க ராகுல் காந்திக்கு அதிகாரம் வழங்கி செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி நீடிப்பார் என காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
ராணுவம் நாட்டுக்கு சொந்தமானது, தனி ஒருவருக்கு சொந்தமானது இல்லை என்று ராகுல்காந்தி விமர்சித்தார். #RahulGandhi
காவலாளி ஒரு திருடன் என கோஷம் எழுப்புங்கள் என தொடர்ந்து கூட்டத்தினரிடம் கூறிய ராகுல் காந்தி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. #RahulGandhi
ராகுல் காந்தியின் குடியுரிமை, கல்வி தகுதி பற்றி தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் சுயேச்சைகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.