இந்துக்கள் குறித்து பேசியதற்கு கமல் வருத்தம் தெரிவித்தால் நானும் எனது கருத்தை வாபஸ் பெறுவேன்- ராஜேந்திர பாலாஜி
இந்துக்கள் குறித்து பேசியதற்கு கமல் வருத்தம் தெரிவித்தால் நானும் எனது கருத்தை வாபஸ் பெறுவேன் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறினார்.
பதிவு: மே 14, 2019 15:24 PM மாற்றம்: மே 14, 2019 15:24 PM
தூத்துக்குடி

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியில் இடைத்தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன்  நேற்று முன் தினம் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது கூட்டத்தில் பேசிய அவர், முஸ்லிம்கள் அதிகம் இருக்கும் இடம் என்பதால் இதனைச் சொல்லவில்லை. காந்தியார் சிலைக்கு முன்பு நின்று கொண்டு இதனைச் சொல்கிறேன். சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே என்று கூறினார்.  கமல்ஹாசனின் இந்தக் கருத்து பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ள நிலையில், அவருக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

கமல்ஹாசனின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி,  இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்று சொல்லியதற்காக கமலின் நாக்கை வெட்ட வேண்டும். தீவிரவாதிகளுக்கு இந்து, முஸ்லிம், கிறிஸ்தவம் என எந்த மதமும் கிடையாது. கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்ய கட்சிக்கு தடை விதிக்க வேண்டும்” என்று கூறியதாக தகவல் வெளியானது. 

இந்த நிலையில், ராஜேந்திர பாலாஜியின் கருத்துக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், பதவிப்பிரமாணத்தின் போது எடுத்த  உறுதிமொழியை ராஜேந்திர பாலாஜி மீறியுள்ளார். ராஜேந்திர பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும்” என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் ஐ.எஸ்.அமைப்பிடம் கமல்ஹாசன் பணம் வாங்கி விட்டாரா என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார். 

இது குறித்து  தூத்துக்குடியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர்  ராஜேந்திர பாலாஜி கூறியதாவது:-

சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து எனக் கூறியதற்கு கமல் மன்னிப்பு கேட்க வேண்டும். அதன்பின் என் கருத்தை திரும்பப் பெறுகிறேன். ஐ.எஸ்.அமைப்பிடம் கமல்ஹாசன் பணம் வாங்கிவிட்டாரா..? 

கமல்ஹாசனின் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பதை விசாரிக்க வேண்டும். தீவிரவாதத்தை தூண்டி விடும் வகையில் கமல் பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். தீவிரவாதத்திற்கு மதம் கிடையாது. எனவே ஒரு மதத்தை குறிப்பிட்டு கமல் பேசியது தவறு. 

என்ன வேண்டுமானாலும் சொல்வற்கு கமல்ஹாசன் என்ன ஜனாதிபதியா அல்லது கவர்னரா..? அரசியலில் வருபவருக்கு தனி மனித ஒழுக்கம் வேண்டும்; கமலுக்கு அந்த அருகதை கிடையாது. இந்துக்கள் குறித்து பேசியதற்கு கமல் வருத்தம் தெரிவித்தால் நானும் எனது கருத்தை வாபஸ் பெறுவேன்.  கமலை கண்டித்தால் நான் உறுதிமொழியை மீறியதாக அர்த்தமா?.  அமைச்சர் என்றாலும் நானும் மனிதன் தானே? மக்களின் எண்ணத்தையே நான் பிரதிபலித்தேன் என கூறினார்.
மேலும் செய்திகள்