வாக்களிக்காததன் மூலம் பெரிய பாவம் செய்துவிட்டீர்கள் திக்விஜய் சிங் மீது பிரதமர் மோடி தாக்கு
வாக்களிக்காததன் மூலம் பெரிய பாவம் செய்துவிட்டீர்கள் என திக்விஜய் சிங்கை பிரதமர் மோடி தாக்கி பேசியுள்ளார்.
பதிவு: மே 13, 2019 20:28 PM மாற்றம்: மே 13, 2019 20:28 PM

மத்திய பிரதேச மாநிலம், போபால் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங், வழக்கமாக தனது சொந்த தொகுதியான ராஜ்காரில் ஓட்டு போடுவது வழக்கம். போபாலில் நேற்று அவர் வாக்குப்பதிவை பார்வையிட வேண்டி இருந்ததால், அங்கிருந்து 300 கி.மீ. தொலைவில் உள்ள ராஜ்காருக்கு ஓட்டு போட போகவில்லை. இதை அவரே ஒப்புக்கொண்டு, வருத்தம் தெரிவித்தார். அவர் ஓட்டு போடாதது புதிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
 
திக்விஜய் சிங் நேற்று நடைபெற்ற தேர்தலில் ஓட்டுபோடாதது தொடர்பாக பிரதமர் மோடி விமர்சனம் செய்தார். மத்திய பிரதேசத்தில் பிரசாரம் செய்த பிரதமர் மோடி,  திக்விஜய் சிங் ஜனநாயக திருவிழாவில் நீங்கள் பெரிய பாவம் செய்துவிட்டீர்கள். ஜனாதிபதி, துணை ஜனாதிபதி ஆகியோர் கூட வரிசையில் நின்று வாக்களித்தனர். ஆனால் நீங்கள் ஓட்டுபோடவில்லை. அவரது கர்வம் போபாலில் வெளிப்பட்டது. மக்கள் தங்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கும் பணியில் ஈடுபட்டனர். ஏன் நான் கூட ஆமதாபாத்தில் எனது கடமையை செய்தேன். திக்விஜய் சிங்குக்கு ஜனநாயகம் பற்றியும் கவலையில்லை, மக்களை பற்றியும் கவலையில்லை.

நீங்கள் உங்களை காப்பாற்றுவதற்காக மக்களை ஓட்டுபோட சொல்வதிலேயே தீவிரமாக இருந்தீர்கள். உங்கள் வேலையை செய்ய தவறும் அளவுக்கு அவ்வளவு பயம் ஏன்? நீங்கள் கடந்த வருடம் மேற்கொண்ட நர்மதா ஆன்மிக யாத்திரைகூட இந்த தேர்தலில் உங்களை காப்பாற்றாது எனக் கூறினார். 
மேலும் செய்திகள்