பிரதமர் மோடிக்கு பதிலடி கொடுத்த மாயாவதி மீது அருண் ஜெட்லி காட்டம்
மாயாவதி பொதுவாழ்க்கைக்கு பொருந்தாதவர் என மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி காட்டமாக கூறியுள்ளார்.
பதிவு: மே 13, 2019 14:53 PM மாற்றம்: மே 13, 2019 14:53 PM
ராஜஸ்தான் மாநிலம் அல்வாரில் தலித் பெண் ஒருவர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இவ்விவகாரத்தில் காங்கிரஸ் அரசை விமர்சனம் செய்ததுடன் மாயாவதிக்கும் கேள்வியை பிரதமர் மோடி எழுப்பினார். 

உ.பி.யில் பிரசாரத்தின் போது பிரதமர் மோடி பேசுகையில், அல்வாரில் பட்டியல் இன பெண் ஒருவர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். ஆனால், அந்த பெண்ணுக்காக முதலைக் கண்ணீர் வடிக்கிறார் மாயாவதி. அவருக்கு உண்மையிலேயே அக்கறை இருந்தால், ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் அரசுக்கு கொடுத்து வரும் ஆதரவை வாபஸ் பெறத் தயாரா? அந்த மாநில காங்கிரஸ் அரசும், இந்த சம்பவத்தை மறைக்க நினைக்கிறது என்றார். 

இதற்கு பதிலடி கொடுத்துள்ள மாயாவதி, பாலியல் பலாத்கார சம்பவத்தில் மோசமான அரசியலை பிரதமர் மோடி செய்கிறார் என சாடினார். சட்ட நடவடிக்கை தவிர்க்கப்படும் போது பகுஜன் சமாஜ் கட்சி சரியான முடிவை மேற்கொள்ளும். பிரதமர் மோடி ஆட்சி காலங்களில் பல்வேறு தாக்குதல் சிறுபான்மையினர் மீது நடத்தப்பட்டது. அதற்கு பொறுப்பு ஏற்று அவர் பதவி விலக தயாரா? என பதில் கேள்வியை எழுப்பினார். 

செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், “அல்வாரில் பாலியல் பலாத்கார சம்பவம் நடந்த போது பிரதமர் மோடி அமைதியாக இருந்தார். இப்போது மோசமான அரசியலை மேற்கொள்ள முயற்சி செய்கிறார். தேர்தலில் லாபம் அடைய இதனை செய்கிறார். இது மிகவும் வெட்கக்கரமானது. அரசியல் லாபத்திற்காக சொந்த மனைவியையே கைவிட்டவரால் மற்றவர்களுடைய சகோதரிகள் மற்றும் மனைவிகளுக்கு எப்படி மதிப்பளிக்க முடியும்?” என கேள்வியை எழுப்பினார். இப்போது திருமணம் ஆன பெண்கள் அனைவரும் தங்களுடைய கணவர் பிரதமர் மோடியின் அருகே சென்றுவிடக் கூடாது என பார்க்கிறார்கள், ஏனென்றால் தங்களுடைய கணவரும் பிரதமர் மோடியை போன்று மனைவியை கைவிட்டுவிடக்கூடாது" என காட்டமாகவும் மாயாவதி கூறினார். 

இந்நிலையில் பிரதமர் மோடியின் மீது தனிப்பட்ட விமர்சனத்தை மாயாவதி வைக்கிறார் என அருண் ஜெட்லி கண்டனம் தெரிவித்துள்ளார்.  “மாயாவதி பிரதமராக வேண்டும் என்பதில் மிகவும் ஸ்திரமாக உள்ளார். அவரது ஆளுமை, நெறிமுறைகள் மற்றும் பேச்சுக்கள் அனைத்தும் மிகவும் தரக்குறைவாக உள்ளது. இன்று பிரதமர் மீதான அவருடைய தனிப்பட்ட தாக்குதலானது அவர் பொதுவாழ்விற்கு தகுதியற்றவர் என்பதை காட்டியுள்ளது” என அருண் ஜெட்லி டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார். 
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
தூத்துக்குடியில் பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளார்.
உ.பி.யில் மகா கூட்டணி வியூகத்தை முறியடித்து பா.ஜனதா 60 தொகுதிகளில் முன்னிலைப் பெற்றுள்ளது.
மேற்குவங்காள மாநிலத்தில் வன்முறை நடந்த தொகுதிகளில் மறுதேர்தல் நடத்த வேண்டும் என்று தேர்தல் கமி‌ஷனிடம் பா.ஜனதா மனு கொடுத்துள்ளது.
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு தொடர்பாக ஆலோசிக்க அகிலேஷ் யாதவை மாயாவதி சந்தித்து பேசியுள்ளார்.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி, காங். தலைவர் ராகுல் காந்தியை இன்று மயாவதி சந்தித்து பேச திட்டமிட்டு இருந்தார்.