திமுக தலைவர் மு.க ஸ்டாலினை இன்று சந்திக்கிறார் சந்திரசேகர் ராவ்
திமுக தலைவர் மு.க ஸ்டாலினை, தெலுங்கானா முதல் மந்திரி சந்திரசேகர் ராவ் இன்று மாலை 4 மணிக்கு சந்திக்கிறார்
பதிவு: மே 13, 2019 08:12 AM மாற்றம்: மே 13, 2019 08:14 AM
ஐதராபாத்,

பாராளுமன்ற தேர்தலுக்கான  6- கட்ட  வாக்குப்பதிவுகள் முடிந்துள்ள நிலையில், 7-வது மற்றும் இறுதி கட்ட வாக்குப்பதிவு வரும் 19 ஆம் தேதி நடைபெறுகிறது.  இதையடுத்து, வரும் 23 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன. இதனால், அரசியல் களம் உச்ச கட்ட பரபரப்பை எட்டியுள்ளது. 

மத்தியில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில், பாஜக, காங்கிரஸ் இல்லாத மூன்றாவது அணியை அமைக்கும் முயற்சியில் தெலுங்கானா முதல் மந்திரியும் ராஷ்டிர சமிதி கட்சியின் தலைவருமான சந்திரசேகர் ராவ் ஈடுபட்டுள்ளார். 

இதற்காக, முக்கிய அரசியல் கட்சித்தலைவர்களை சமீப காலமாக சந்திக்கும் முயற்சியில் சந்திரசேகர் ராவ் ஈடுபட்டு வருகிறார். கடந்த வாரம் சந்திரசேகராவ், கேரள முதல்வர் பினராய் விஜயனை சந்தித்தார். அந்த சந்திப்பு மிக முக்கியமான ஒன்று என்றும் கூறினார். 

இந்த நிலையில், திமுக தலைவர் மு.க ஸ்டாலினை இன்று மாலை 4 மணிக்கு  சந்திரசேகர் ராவ் சந்திக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள  ஸ்டாலின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெறுகிறது. 
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
சந்திரசேகர ராவ் 3-வது அணியை உருவாக்க வரவில்லை என்று திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தெரிவித்தார்.