இவ்வளவு நாளாக என்ன செய்தீர்கள்? மோடிக்கு மம்தா கேள்வி
மேற்கு வங்காள மாநிலத்தில் வெள்ளம் நேரிட்டபோது என்ன செய்தீர்கள்? என பிரதமர் மோடிக்கு மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார்.
பதிவு: மே 07, 2019 15:20 PM மாற்றம்: மே 07, 2019 15:20 PM
‘பானி’ புயல் பாதிப்பு குறித்து மம்தா பானர்ஜி பேச முன்வரவில்லை என்று பிரதமர் மோடி தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. இதற்கிடையே கலைக்குண்டா என்ற இடத்தில் இருவரின் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதையும் மம்தா நிராகரித்தார். இதனையடுத்து மம்தா பானர்ஜி பேசுகையில், தேர்தல் நேரமாக இருப்பதால் காலாவதி பிரதமரை சந்திக்க மாட்டேன் என்றார். 

‘பானி’ புயல் பாதிப்புக்கென பிரத்யேகமாக ஒரு சந்திப்பை ஏற்பாடு  செய்திருந்தால், அதில் பங்கேற்பது பற்றி பரிசீலனை செய்திருப்பேன். ஆனால், மோடி தேர்தல் பிரசாரத்துக்காக இங்கு வந்துள்ளார். எனவே, ‘காலாவதி’ பிரதமருடன் ஒரே மேடையில் பங்கேற்க மாட்டேன். நிவாரண பணிகளை மேற்கொள்ளவும், இழப்பீடு அளிக்கவும் எனது அரசுக்கு திறன் உள்ளது. மத்திய அரசின் உதவி தேவையில்லை.

தேவைப்பட்டால், புதிதாக பதவி ஏற்கும் பிரதமரிடம் பேசிக்கொள்வோம். இதற்கு முன்பு, மோடியை 2 தடவை சந்தித்து நிதி கேட்டேன். ஆனால், மோடி அரசு எதுவுமே செய்யவில்லை. நான் கடந்த 48 மணி நேரமாக காரக்பூரில் இருந்தேன். ஆனால், டெல்லியில் இருந்து கொல்கத்தாவுக்குதான் போன் செய்துள்ளனர். மேலும், கூட்டாட்சி முறையை புறக்கணிக்கும் வகையில், என்னுடன் ஆலோசிக்காமல், நேரடியாக தலைமை செயலாளர் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகளிடம் பேசி உள்ளனர். முதல்–மந்திரியின் கீழ்தான் தலைமை செயலாளர் இயங்குவது தெரியாதா? என கேள்வி எழுப்பினார். 

கொல்கத்தாவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டம் தொடர்பாக பேசுகையில், அவர் டீ குடிக்க வருவார், அவர் அருகே நான் இருக்க வேண்டும். பின்னர் புகைப்படம் எடுப்பார்கள், அதற்கு நான் ஏன் செல்ல வேண்டும்? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார் மம்தா பானர்ஜி. மோடி பானி புயலை அரசியலாக்க வேண்டும் என்று நினைத்தால் எனக்கு அரசியல் தெரியும் என்பதை அவர் புரிந்துக்கொள்ள வேண்டும் என கூறியுள்ள மம்தா பானர்ஜி, இவ்வளவு நாட்களாக அவர் என்ன செய்தார்? என கேள்வியையும் எழுப்பியுள்ளார். 

2015, 2016 மற்றும் 2017-ம் ஆண்டுகளில் மேற்கு வங்காளத்தில் வெள்ளம் நேரிட்டது. அப்போது மத்திய அரசிடம் பலமுறை உதவி கேட்கப்பட்டது. எங்களுடைய கோரிக்கைகள் அனைத்தையும் மோடி அரசு நிராகரித்தது என மம்தா பானர்ஜி குறிப்பிட்டார்.
மேலும் செய்திகள்