‘ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்துக்கு நிலம் கொடுத்ததே தி.மு.க. தான்’எடப்பாடி பழனிசாமி பேச்சு
ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்துக்கு நிலம் கொடுத்ததே தி.மு.க. தான் என்று முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
பதிவு: ஏப்ரல் 03, 2019 05:15 AM மாற்றம்: ஏப்ரல் 03, 2019 05:15 AM
தூத்துக்குடி,

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனை ஆதரித்து சங்கரப்பேரியில் நேற்று தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா பங்கேற்று பேசினார். தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு பேசியதாவது:-

மகத்தான வெற்றி

இந்தியா 130 கோடி மக்கள்தொகை கொண்ட மிகப்பெரிய ஜனநாயக நாடு. நாடுவளம் பெற, செழிக்க, திறமையான, உறுதியான, வலிமையான தலைமை வேண்டும். அந்த தலைமை பொறுப்புக்கு தகுதி வாய்ந்தவர் பிரதமர் நரேந்திரமோடி. நமது கூட்டணி பற்றி தி.மு.க. தலைவர் விமர்சனம் செய்கிறார். இந்த கூட்டணி மெகா கூட்டணி, வெற்றி கூட்டணி, மக்கள் நலன் சார்ந்த கூட்டணி, மக்களுக்கு சேவை செய்யும் கூட்டணி. 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும், 18 சட்டமன்ற தொகுதிகளிலும் இந்தக்கூட்டணி மகத்தான வெற்றி பெறும்.

இடைத்தேர்தல் வருவதற்கு சில துரோகிகள் செய்த சதிதான் காரணம். துரோகம் செய்த சதிகாரர்களையும், துரோகிகளையும் வீழ்த்த இந்த தேர்தலில் நாம் வெற்றிபெற வேண்டும். அதற்கு அனைவரும் முழுமூச்சுடன் பணியாற்ற வேண்டும் என கேட்டுக்கொள் கிறேன். ஏழை, எளிய மக்களுக்கு கிடைக்கின்ற திட்டங்களை தடுத்து நிறுத்தும் ஒரு கட்சி இந்தியாவில் உண்டென்றால், அது தி.மு.க. மட்டும் தான்.

ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கம்

தூத்துக்குடியில் நடைபெற்ற சம்பவத்தை வைத்து, தி.மு.க. வேட்பாளர் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்து வருகிறார். ஸ்டெர்லைட் ஆலை குறித்து விளக்கத்தை இந்த நேரத்தில் தெரிவிப்பது எனது கடமை எனக் கருதுகிறேன். ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கம் செய்வதற்கு 243 ஏக்கர் நிலம் கொடுத்தது தி.மு.க. தான். அந்த காலகட்டத்தில் தொழில் துறை அமைச்சராக இருந்தவரும் ஸ்டாலின் தான்.

இதுபோன்ற அனைத்திற்கும் அனுமதி அளித்துவிட்டு அந்த ஆலை செயல்படுவதற்கு உறுதுணையாக இருந்துவிட்டு, அ.தி.மு.க. அரசின் மீது பழிபோடுவது எந்த விதத்தில் நியாயம். சென்னை ஐகோர்ட்டில் ஒரு பொது நல வழக்கு தொடரப்பட்டது. அந்த நேரத்தில் தி.மு.க. ஆட்சி தான் நடைபெற்றது. அப்போது ஸ்டெர்லைட் நிறுவனத்துக்கு ஆதரவாக அப்போதைய அரசு தனது நிலைப்பாட்டை தெரிவித்திருந்தபோதிலும், ஸ்டெர்லைட் ஆலையை உடனே மூட வேண்டும் என்று 28-9-2010-ல் ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

மக்கள் நம்பமாட்டார்கள்

அப்போதே ஆலையை மூடுவதற்கான நடவடிக்கையை தி.மு.க. அரசு மேற்கொண்டிருந்தால் இன்றைக்கு பொதுமக்களுக்கு இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படாமல் தடுத்திருக்கலாம். தீர்ப்பை எதிர்த்து ஸ்டெர்லைட் நிர்வாகம் 1-10-2010 அன்று சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்கிறது. 1-10-2010 அன்றே ஐகோர்ட்டின் மூடுதல் ஆணையை நிறுத்திவைத்து, ஆலையை திறப்பதற்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது.

நிலைமை இவ்வாறு இருக்க தேர்தல் நேரத்தில் வாக்குகளை பெறுவதற்காக உண்மைக்கு மாறான தகவல்களை சொல்லி வந்தாலும். இங்குள்ள மக்கள் இதனை நம்பமாட்டார்கள். அ.தி.மு.க. அரசு தான் ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளது என்பதை இப்பகுதி மக்கள் நன்கு தெரிந்திருப்பார்கள்.

தகுதியான வேட்பாளர்

முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் மகள் கனிமொழி தி.மு.க. வேட்பாளராக இங்கு போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து போட்டியிட்டு வெற்றிபெற வேண்டும் என்பதற்கு, தகுதியான வேட்பாளராக கருதி பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு தாமரை சின்னத்தில் வாக்களித்து மகத்தான வெற்றி பெறச்செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

தூத்துக்குடி மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 31 பணிகள் ரூ.1075 கோடி மதிப்பில் எடுத்துக்கொள்ளப்பட்டு, 18 பணிகள் ரூ.435 கோடி மதிப்பில் நடைபெற்றுள்ளது. இதரப்பணிகள் நடைபெற்று வருகிறது. பிரதம மந்திரி பயிர்காப்பீட்டு திட்டத்தின் மூலமாக ரூ.322 கோடி இழப்பீடாக பெறப்பட்டு 1,33,729 விவசாயிகள் பயன்பெற்றுள்ளனர். மதுரை-தூத்துக்குடி சாலை நான்கு வழிச்சாலையாகவும், கிழக்கு கடற்கரைச் சாலை தூத்துக்குடி-திருச்செந்தூர் நான்கு வழிச்சாலையாகவும் அகலப்படுத்தப்பட்டுள்ளது.

டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம்

கயத்தாறு கிராமத்தில் ரூ.2 கோடி செலவில் கட்டபொம்மன் மணி மண்டபம் அமைக்கப்பட்டு ஜெயலலிதாவால் திறந்து வைக்கப்பட்டது. தருவை குளத்தில் ரூ.16.25 கோடி மதிப்பில் மீன் இறங்கு தளம் அமைக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது. திருச்செந்தூர் வீரபாண்டியன் பட்டணத்தில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு ரூ.1.25 கோடி செலவில் மணிமண்டபம் அமைக்க என்னால் அடிக்கல் நாட்டப்பட்டு, தற்போது பணிகள் நடைபெற்று வருகிறது.

தாமிரபரணி-கருமேனி- நம்பியாறு இணைப்புத் திட்டப்பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன. 29-1-2018 அன்று உடன்குடி மிக உய்ய அனல் மின்நிலையம் நிலை ஒன்றுக்கு என்னால் அடிக்கல் நாட்டப்பட்டது. இதன் மூலம் தலா 660 மெகாவாட் திறனுடைய 2 அலகு கொண்ட இத்திட்டம், 2020-2021-ம் ஆண்டு செயல்பாட்டுக்கு வரும் என தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.
மேலும் செய்திகள்