சென்னையில் 6-ந் தேதி மோடி தலைமையில் பொதுக்கூட்டம்
சென்னையில் 6-ந் தேதி பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில், முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்பட கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கிறார்கள்.
பதிவு: பிப்ரவரி 28, 2019 05:26 AM மாற்றம்: பிப்ரவரி 28, 2019 13:23 PM
சென்னை, 

17-வது நாடாளுமன்றத்தை தேர்ந்தெடுப்பதற்காக நாடு முழுவதும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் பல்வேறு கட்டங்களாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. தேர்தல் தேதி இன்னும் ஒரு சில தினங்களில் அறிவிக்கப்பட இருக்கிறது.

தமிழகத்தில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் பா.ஜ.க., பா.ம.க. இடம்பெறுவது உறுதியாகியுள்ளது. அந்த கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகளின் எண்ணிக்கையும் அறிவிக்கப்பட்டுவிட்டது.

தே.மு.தி.க., தமிழ் மாநில காங்கிரஸ், புதிய தமிழகம், இந்திய ஜனநாயக கட்சி உள்பட ஒரு சில கட்சிகளுடன் இன்னும் கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தை பிரதமர் நரேந்திர மோடி நாட்டின் கடைக்கோடியான கன்னியாகுமரியில் நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறார். இந்த கூட்டத்தில், மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன் உள்பட பா.ஜ.க. தலைவர்கள் கலந்துகொள்ள இருக்கின்றனர்.

அதனைத் தொடர்ந்து, தமிழகத்துக்கு 2-வது முறையாக மார்ச் 6-ந் தேதி பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் வருகிறார். அன்றைய தினம் சென்னையில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெற இருக்கிறது. பொதுக்கூட்டத்துக்கான இடம் தேர்வு செய்யும் பணி தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இது ஒருபுறம் நடைபெற்றாலும் மற்றொரு புறம் இதர கட்சிகளுடன் கூட்டணியை இறுதி செய்வதற்கான பேச்சுவார்த்தையும் தீவிரமாக நடைபெற தொடங்கியுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி வருகையின்போது, கூட்டணியை இறுதி செய்து, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்பட அனைத்து கூட்டணி கட்சி தலைவர்களை அந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்க செய்ய பா.ஜ.க. விரும்புகிறது. அதனால், தே.மு.தி.க., த.மா.கா., புதிய தமிழகம், இந்திய ஜனநாயக கட்சி ஆகியவற்றுடன் கூட்டணி பேச்சுவார்த்தைக்கான வேகத்தை அதிகப்படுத்தியுள்ளது.

இந்த பொதுக்கூட்டத்தில், அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஆகியோரும் கலந்துகொண்டு பேச இருக்கின்றனர்.

தே.மு.தி.க. உள்ளிட்ட கட்சிகள் அதற்குள் கூட்டணியில் இணையும் பட்சத்தில், அந்த கட்சி தலைவர்களும் பொதுக் கூட்டத்தில் பங்கேற்பார்கள். அதற்குள் அ.தி.மு.க. கூட்டணியில் கட்சிகளுக்கு இடையே தொகுதிப்பங்கீடும் முடிவடை ந்தால், பொதுக்கூட்ட மேடையிலேயே யார்-யாருக்கு எந்தெந்த தொகுதிகள் என்பதும் அறிவிக்கப்படும் என தெரிகிறது. 
மேலும் செய்திகள்