வாக்காளர்கள் | : | | 1249420 |
ஆண் | : | | 614822 |
பெண் | : | | 634598 |
திருநங்கை | : | | 0 |
‘ கடவுளின் தேசம்’ என்று அழைக்கப்படும் கேரள மாநிலத்தில் உள்ள வயநாடு மாவட்டம் வயல்வெளிகள் நிறைந்த மலைகள் சூழ்ந்த இயற்கை எழில் கொஞ்சும் மாவட்டம் ஆகும்.
இந்த மாவட்டம் கேரளாவின் வட பகுதியில் தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்தையும், கர்நாடகத்தின் குடகு, மைசூர், சாம்ராஜ்நகர் மாவட்டங்களையும் யொட்டி அமைந்துள்ளது.
2009-ல் உருவான தொகுதி
கோழிக்கோடு, கண்ணூர் ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளை பிரித்து, 1980-ம் ஆண்டு கேரளாவின் 12-வது மாவட்டமாக வயநாடு உருவாக்கப்பட்டது. 886.92 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இந்த மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் 700 முதல் 2,100 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இங்கு பழங்குடியினர் கணிசமாக வசித்து வருகிறார்கள்.
வயநாடு நாடாளுமன்ற தொகுதியில் மனந்தவாடி, கல்பெடா, சுல்தான் பதேரி, திருவம்பாடி, நிலாம்பூர், வந்தூர், எரநாடு ஆகிய 7 சட்டசபை தொகுதிகள் அடங்கி உள்ளன. வயநாடு நாடாளுமன்ற தொகுதி வயநாடு, கோழிக்கோடு, மலப்புரம் ஆகிய 3 மாவட்டங்களில் பரந்து விரிந்துள்ளது.
இந்த தொகுதி, 2009-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் போதுதான் புதிதாக உருவாக்கப்பட்டது.
இந்த தொகுதியில் 13 லட்சத்து 25 ஆயிரத்து 788 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் ஆண்கள் 6 லட்சத்து 55 ஆயிரத்து 786 பேர், பெண்கள் 6 லட்சத்து 70 ஆயிரத்து 2 பேர். ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்களே அதிகம் உள்ளனர்.
காங்கிரஸ் வெற்றி
2009, 2014 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற இரு நாடாளுமன்ற தேர்தல்களிலும் காங்கிரசை சேர்ந்த ஷா நவாஸ் வெற்றி பெற்றார்.
2009-ம் ஆண்டு தேர்தலில், இந்திய கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளரை 1 லட்சத்து 53 ஆயிரத்து 439 வாக்குகள் வித்தியாசத்தில் ஷா நவாஸ் தோற்கடித்தார். 2014-ம் ஆண்டு தேர்தலில், இந்திய கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளரை சுமார் 21 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அவர் மரணம் அடைந்ததால் இந்த தொகுதி காலியாக இருந்தது.
கேரளாவில் காங்கிரசுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ள தொகுதிகளில் ஒன்றாக வயநாடு இருக்கிறது. தற்போதைய நாடாளுமன்ற தேர்தலில், சித்திக் என்பவர் காங்கிரஸ் சார்பில் களம் இறங்க இருந்தார். ஆனால், ராகுல் காந்தி போட்டியிடும் தகவல் அறிந்து அவர் ஒதுங்கிக் கொண்டார்.
ராகுல் காந்தி போட்டியிடுவதால் வயநாடு தொகுதி ஒரே நாளில் ஒட்டுமொத்த இந்தியாவின் கவனத்தையும் ஈர்த்து, நட்சத்திர அந்தஸ்து பெற்றுவிட்டது.
பா.ஜனதா களம் இறங்கும்?
எளிதாக வெற்றி பெற வாய்ப்புள்ள இத்தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுகிறார். அவரது வெற்றி உறுதியாகி விட்டதாக கேரள காங்கிரசார் இப்போதே சொல்லத் தொடங்கி விட்டனர்.
இந்த தேர்தலில் இடதுசாரி ஜனநாயக முன்னணியில் வயநாடு தொகுதி இந்திய கம்யூனிஸ்டுக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது. அந்த கட்சியின் சார்பில் பி.பி.சுனீர் வேட்பாளராக போட்டியிடுகிறார்.
பாரதீய ஜனதா கூட்டணியில் இந்த தொகுதி ‘பாரத் தர்ம ஜனசேனா’ என்ற சிறிய கட்சிக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது. ராகுல் காந்தி அங்கு போட்டியிடுவது உறுதியான நிலையில், வயநாடு தொகுதியை பாரதீய ஜனதா திரும்ப பெற்று, தானே போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த தேர்தல் முடிவு
வயநாடு நாடாளுமன்ற தொகுதியில் கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 15 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அவர்களில் முக்கிய கட்சிகளுக்கு கிடைத்த வாக்குகள் விவரம் வருமாறு:-
ஷாநவாஸ் (காங்.) - 3,77,035
சத்யன் மோகிரி (இந்திய கம்யூ.) - 3,56,165
பி.ஆர்.ரஸ்மில்நாத் (பா.ஜ.க.) - 80,752
பி.வி.அன்வர் (சுயே.) - 37,123
ஜலீல் நீலாம்பிரா (எஸ்.டி.பி.ஐ.) - 14,327
ராம்லா மம்பத் (இந்திய நல்வாழ்வு கட்சி) - 12,645
பி.பி.ஏ.சாகீர் (ஆம் ஆத்மி) - 10,684