வாக்காளர்கள் | : | | 138810557 |
ஆண் | : | | 75961829 |
பெண் | : | | 62841617 |
திருநங்கை | : | | 7111 |
உத்தரப் பிரதேசம் இந்தியாவின் பெரிய மாநிலம் ஆகும்.
இந்தியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலம் இதுவே. லக்னோ இம்மாநிலத்தின் தலைநகராகும். அலகாபாத், கான்பூர், வாரணாசி, ஆக்ரா ஆகியவை மற்ற முக்கிய நகரங்கள்.
இந்தி, உருது ஆகியவை இம்மாநிலத்தில் பெரும்பான்மையாக பேசப்படும் மொழிகள். இந்தியாவின் ஆறு பிரதமர்கள் (ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி, வி. பி. சிங், சந்திரசேகர், சரண் சிங், லால் பகதூர் சாஸ்திரி இம்மாநிலத்தில் பிறந்தவர்கள்.
இந்த மாநிலத்தில் மொத்தம் 80 பாராளுமன்ற தொகுதிகள் உள்ளன.
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்ற போற்றுதலுக்குரிய நமது நாட்டின் 17-வது பொதுத்தேர்தல், சர்வதேச நாடுகளின் கவனத்தை ஒரு சேர ஈர்த்துள்ளது. உள்நாட்டைப் பொறுத்தமட்டில் தேசிய தலைவர்கள், கட்சிகளின் பார்வை உத்தரபிரதேசம் என்ற ஒற்றை மாநிலத்தின் மீது அதிகம், அதிகமாய் படிந்திருக்கிறது.
அந்த மாநிலத்தின் 80 தொகுதிகளில் பெரும்பாலான தொகுதிகளை எந்த கட்சி தனதாக்கிக்கொள்கிறதோ, அந்த கட்சிதான் நாட்டை ஆளும் என்பது மரபு வழி நம்பிக்கையாக இருக்கிறது.
2014 நாடாளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி, அப்னா தளம் என்ற குட்டி கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. இந்த கூட்டணி 73 இடங்களில் அபார வெற்றி பெற்றது. ஆனால் நாட்டை 10 ஆண்டுகளாக ஆண்டு வந்த காங்கிரஸ் கட்சிக்கு உத்தரபிரதேச மக்கள் அப்போது வழங்கிய இடங்கள் இரண்டே இரண்டுதான். அதுவும் அந்த கட்சியின் அப்போதைய தலைவரான சோனியாவும், அவரது மகன் ராகுலும் வென்ற ரேபரேலி, அமேதி மட்டும்தான்.
இந்த அளவுக்கு பாரதீய ஜனதா வெற்றி பெற்றது என்றால் அதற்கு அப்போது மோடி என்ற பேரலை தாக்கியதுதான் மிக முக்கிய காரணம். அந்த அலையில் சோனியாவும், ராகுலும் கரை சேர்ந்ததே ஆச்சரியமான ஒன்றுதான்.
2017-ம் ஆண்டு அங்கு நடந்த சட்டசபை தேர்தலில் மீண்டும் பாரதீய ஜனதா கட்சிக்குத்தான் நல்ல அறுவடை. அதுவும் நான்கில் மூன்று பங்கு மகசூல். யோகி ஆதித்யநாத்தை முதல்-மந்திரி நாற்காலியில் அமரவைத்து அழகு பார்த்தது அந்த கட்சி.
ஆனால் அடுத்த ஆண்டு 2 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி, முலாயம் சிங்கின் சமாஜ் வாடியிடம் தோல்வி கண்டது. என்ன கொடுமை என்றால், முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் 1998 முதல் 2014 வரை தொடர்ந்து 5 முறை வெற்றி கண்ட கோரக்பூரிலேயே பாரதீய ஜனதா தோல்வி கண்டது, உள்ளபடியே அந்த கட்சிக்கு இடி தாக்கிய அதிர்ச்சி என்றால் அது மிகையல்ல. இந்த தோல்வியால் முதல்-மந்திரி பதவியில் இருந்து ஆதித்யநாத் கழற்றி விடப்படுவார் என்றெல்லாம் ஊகச்செய்திகள் பரவின. அப்படி எதுவும் நடைபெறவில்லை.
இந்த நிலையில் 2019 நாடாளுமன்ற தேர்தல் களம், உத்தரபிரதேசத்தில் எப்படி அமைந்திருக்கிறது?
இந்த தேர்தலில் 2014-ல் வீசிய மோடி அலை இல்லை. இம்முறை பாரதீய ஜனதா கடும் போட்டியை எதிர்கொண்டாக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஏனென்றால் கடந்த தேர்தலில் சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ், காங்கிரஸ் என 3 கட்சிகளும் தனித்து களம் கண்டன. அதில் பாரதீய ஜனதா எதிர்ப்பு ஓட்டுகள் பிரிந்தன. அதுவும் பாரதீய ஜனதாவுக்கு சாதகமாக அமைந்தது.
இந்த முறை ‘கேக்வாக்’ என்று சொல்வார்களே, அது பாரதீய ஜனதாவுக்கு வாய்ப்பது சிரமம். ஏனென்றால் எதிர் எதிர் துருவங்களில் இருந்த சமாஜ்வாடி கட்சியும், பகுஜன் சமாஜ் கட்சியும் கரம் கோர்த்து உள்ளன. இந்த அணியில் அஜித் சிங்கின் ராஷ்ட்ரிய லோக் தளமும் சேர்ந்துள்ளது.
காங்கிரஸ், இதர பிற்படுத்தப்பட்டோர் வாக்கு வங்கியை கொண்டுள்ள சிறிய கட்சிகளுடன் கரம் கோர்த்து இருக்கிறது.
கடந்த தேர்தலில் பாரதீய ஜனதா ஓட்டு சதவீதம் 42.30. சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் ஆகிய இரு கட்சிகளின் ஓட்டு சதவீதத்தை கூட்டிப்பார்த்தால் 41.80 சதவீதம். ஆக இவ்விரு தரப்பினருக்கும் இடையேயான ஓட்டு சதவீதத்தில் பெரிய வித்தியாசம் இல்லை.
விவசாயிகள் பிரச்சினை, வேலை இல்லா திண்டாட்டம், பதவியில் இருக்கிற எம்.பி.க்கள் மீதான எதிர்ப்புணர்வு, கடந்த முறை பாரதீய ஜனதாவுக்கு வாக்களித்த தாழ்த்தப்பட்டோர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோரில் ஒரு பிரிவினர் எதிராக திரும்பி இருப்பது ஆகியவை இந்த முறை பாரதீய ஜனதாவுக்கு எதிராக திரும்பி இருக்கிறது என்று அங்கிருந்து வரும் தகவல்கள் சொல்கின்றன.
இத்துடன் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் ஒட்டுமொத்தமாக ஓரங்கட்டப்பட்டிருப்பது, பாரதீய ஜனதா கட்சி தொண்டர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தாமல் இல்லை.
அயோத்தியில் ராமர் கோவில் என்ற முக்கிய செயல் திட்டத்தை பாரதீய ஜனதா கட்சி நிறைவேற்றவில்லை. இது இந்துத்துவா ஆதரவாளர்கள் முகங்களில் அதிருப்தி ரேகைகளை படர விட்டிருக்கின்றன.
பிரதமர் மோடி அங்குள்ள வாரணாசிக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுப்பாரோ, அதே முக்கியத்துவத்தை உத்தரபிரதேசம் முழுவதும் கொடுப்பார் என்று பாரதீய ஜனதா கட்சி தொண்டர்கள் சிலாகிக்கிறார்கள். பூத் கமிட்டிகள் அமைத்து செயல்படுவதில் அக்கட்சி கவனம் செலுத்துகிறது. அதே நேரத்தில் கடந்த தேர்தலில் உத்தரபிரதேசத்தில் பாரதீய ஜனதா கட்சிக்கு வியூகங்களை வகுத்து தந்து செயல்பட்ட அமித்ஷா, இந்த முறை குஜராத்தில் காந்திநகர் தொகுதியில் முதல் முறையாக களம் இறங்கி இருக்கிறார். அங்கு வெற்றி பெற்றாக வேண்டிய நிலை அவருக்கு.
அப்படிப்பட்ட நிலையில் உத்தரபிரதேசத்தில் மட்டுமல்ல, இந்தி பேசும் பிற மாநிலங்களிலும் அவரால் கடந்த தேர்தலைப்போல கவனத்தை செலுத்த முடியுமா என்ற கேள்வியை எழுப்பாமல் இல்லை.
அதே நேரத்தில் சமாஜ்வாடி கட்சியும், பகுஜன் சமாஜ் கட்சியும் கரம் கோர்த்து இருப்பது தாழ்த்தப்பட்டோர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோர் குறிப்பாக யாதவ் ஓட்டுகளை அந்த அணிக்கு அள்ளித்தரும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. மாநில மக்கள் தொகையில் 12 சதவீத பங்களிப்பை கொண்டுள்ள ஜாதவ் இனத்தவரின் ஓட்டுகளும் இந்த அணிக்கு கணிசமாக கிடைக்கும் என சொல்லப்படுகிறது. மேற்கு உத்தரபிரதேசத்தில் ஜாட் இனத்தவர் அதிகளவில் இருப்பதால் அங்கு அஜித் சிங்கின் ராஷ்ட்ரிய லோக்தளம் சற்றே செல்வாக்குடன் உள்ளது என்பதுவும் இந்த அணிக்கு சாதகமாக தென்படுகிறது.
அதே நேரத்தில் நேற்று வரை எதிர் எதிர் துருவங்களில் இருந்த கட்சிகள் அணி சேர்ந்ததால் அதை மக்கள் ஏற்பார்களா என்றொரு வாதம் இருந்தாலும்கூட, பல மாநிலங்களில் இப்படி கொள்கைகளில் முரண்பட்ட கட்சிகள் கூட்டு சேர்ந்திருப்பது இனி அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா என்று சமரசம் செய்து கொள்ள வைத்து விடுகிறது.
மாயாவதிக்கு எதிரான தனிப்பட்ட விமர்சன கணைகளை பாரதீய ஜனதா கட்சி விடுவது, பொது மக்களால் ரசிக்கப்படவில்லை.
இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு மிகப்பெரிய தூணாக அமைந்திருப்பது அந்த கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி என்றால் மிகையல்ல. அவர் செல்கிற இடங்களில் எல்லாம் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது. அவரது பாட்டி இந்திரா காந்தியின் தோற்றமும், வசீகரமும் அப்படியே பிரியங்காவிடமும் இருப்பதாக சொல்கிறார்கள். சாமானிய மக்களோடு அவர் கலந்து பழகுகிறார். இளைய தலைமுறையினருடன் வெகு இயல்பாக செல்பி படங்கள் எடுத்துக்கொள்கிறார். தனிப்பட்ட முறையில் தாக்குதல்கள் தொடுக்காமல், மத்திய பாரதீய ஜனதா கட்சியின் ஆட்சியை மட்டுமே விமர்சிக்கிறார்.
அதே நேரத்தில் அவருடன் உத்தரபிரதேச மேற்கு மாநில பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட ஜோதிர் ஆதித்ய சிந்தியாவை பிரசார களத்தில் காண முடியவில்லை. மத்திய பிரதேச மாநிலத்தில் குவாலியர் தொகுதியில் அவர் போட்டியிடுகிறார். கூடவே அவரது மனைவி பிரியதர்சினி ராஜே சிந்தியா குணா தொகுதியில் களம் இறங்கி இருக்கிறார். இந்த நிலையில் ஜோதிர் ஆதித்ய சிந்தியா டெல்லியில் உட்கார்ந்து கொண்டு வேட்பாளர்களின் பிரசாரத்தை கண்காணித்து வருவதில் கவனத்தை செலுத்துகிறார். மாநில காங்கிரஸ் தலைவர் ராஜ் பப்பர் பிரசார களத்தில் இல்லை. இவர் பதேப்பூர்சிக்ரி தொகுதியில் நிற்பதால், அங்கே பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி அமேதியில் கடும் போட்டியை எதிர்கொண்டிருக்கிறார். 2004, 2009, 2014 என தொடர்ந்து மூன்று முறை அவர் வெற்றி பெற்று, ‘ஹாட்ரிக்’ அடித்திருந்தாலும்கூட, 2014 தேர்தலில் அவரது ஓட்டு சதவீதம் 36.71 தான். அவரை எதிர்த்து நின்ற ஸ்மிருதி இரானி 34.38 சதவீத வாக்குகளை அள்ளினார். கடந்த முறை நடிகையாக களம் இறங்கிய அவர் இந்த முறை மத்திய மந்திரி என்ற தோரணையுடன் களம் இறங்கி இருப்பது கவனத்தை ஈர்ப்பதாக இருக்கிறது.
இந்த நிலையில் தான் தற்காப்பு உணர்வுடன் ராகுல் காந்தி கேரள மாநிலத்தின் வயநாடு தொகுதியில் போட்டியிடுவது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி உடல்நல பிரச்சினை காரணமாக சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசாரம் செய்யவில்லை. பிரசார களத்திலேயே அவர் இன்னும் குதிக்கவில்லை.
உத்தரபிரதேசத்தில் ஏறத்தாழ 20 சதவீதம் முஸ்லிம்கள் வாக்கு வங்கி இருக்கிறது. சிறுபான்மை இன மக்களின் தோழன் என்று சொல்லிக்கொள்கிற காங்கிரசுக்கு, அந்த ஓட்டு வங்கியில் இருந்து கணிசமான வாக்குகள் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக சொல்கிறார்கள்.
2018 வாக்காளர் பட்டியல் நிலவரப்படி உத்தரபிரதேச மாநிலத்தில் 39 லட்சம் வாக்காளர்கள் புதிதாக சேர்ந்துள்ளனர். இந்த புதிய வாக்காளர்கள், தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றி முக்கிய பங்காற்றப்போகிறார்கள். அவர்கள் யார் பக்கம் என்பது முக்கிய கேள்வி.
இதெல்லாம் தற்போதைய கள நிலவரம்தான்.
உத்தரபிரதேசத்தை பொறுத்தவரையில் ஏப்ரல் 11 தொடங்கி மே 19 வரை ஏழு கட்ட தேர்தலை சந்திக்கிறது. எனவே அங்கு நெடிய பயணத்தை அரசியல் கட்சி தலைவர்கள் நடத்துவார்கள். தேர்தல் வாக்குறுதிகள், பிரசார உத்திகள், வாக்காளர்களை கவர்வதில் பின்பற்றப்போகிற வழிகள் எல்லாமே சதுரங்கத்தில் காய்களை நகர்த்துவதுபோல வாக்காளர்களின் மனங்களை குறிப்பிட்ட கட்சி வேட்பாளர்களை நோக்கி நகர்த்தும். மின்னணு எந்திரத்தில் அவர்கள் பொத்தானை அழுத்துகிறபோது நாட்டின் தலையெழுத்து தீர்மானிக்கப்படும். அதுவரை பொறுத்திருந்து கைகளை கட்டிக்கொண்டு வேடிக்கைதான் பார்க்க வேண்டும்.