வாக்காளர்கள் | : | | 29529788 |
ஆண் | : | | 14853185 |
பெண் | : | | 14675235 |
திருநங்கை | : | | 1368 |
தெலுங்கானா ஆந்திர மாாநிலத்தில் இருந்து பிரிக்கப்பட்டு ஜூன் 2, 2014 முதல் தனி மாநிலமாக பிரித்து அறிவிக்கப்படது.
கிழக்குத் தொடர்ச்சி மலைகளின் மேற்கில் தக்காணத்தில் அமைந்துள்ள இந்த மண்டலத்தில் ஆந்திர மாவட்டங்கள் வாரங்கல், அதிலாபாத், கம்மம், மகபூப்நகர், நல்கொண்டா, ரங்காரெட்டி, கரீம்நகர், நிசாமாபாத், மேதக் ஆகியனவும் மாநிலத் தலைநகர் ஐதராபாத்தும் அடங்கும். கோதாவரி மற்றும் கிருஷ்ணா ஆறுகள் இம்மண்டலத்தில் மேற்கிலிருந்து கிழக்காகப் பாய்கின்றன.
தெலங்கான மாநிலத்தின் முக்கிய நகரங்கள்; ஐதராபாத், வாரங்கல், நிசாமாபாத், கரீம்நகர், கம்மம், ராமகுண்டம், மகபூப்நகர், நல்கொண்டா, ஆதிலாபாத், பத்ராச்சலம், கொத்தகூடம் மற்றும் சூர்யபேட்டை ஆகும்.
ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலம் பிரிக்கப்பட்டு தெலங்கானா மாநிலம் உருவானது. தெலங்கானா மாநிலத்தில் சந்திரசேகர் ராவ் தலைமையிலான தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி (டிஆர்எஸ்) கட்சி வலுவாக இருக்கிறது. மாநிலம் பிரிக்கப்பட்டபபோது ஆட்சியைப் பிடித்த சந்திரசேகர் ராவ், கடந்த சில மாதங்களுக்கு முன் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலிலும் தனிப் பெரும்பான்மையுடன் 2-வது முறையாக ஆட்சியைப் பிடித்துள்ளார். 119 இடங்களில் 100 இடங்களில் வென்று அசுரபலத்துடன் சந்திரசேகர் ராவ் ஆட்சியில் இருக்கிறார்.
இந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி போட்டியிட்டு படுதோல்வியைச் சந்தித்தது. 13 இடங்களில் இரு இடங்களில் மட்டுமே தெலுங்கு தேசம் கட்சி வென்றது.
இதனால், விழித்துக்கொண்ட சந்திரபாபு நாயுடு ஆந்திராவில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியில்லாமல் தனித்துப் போட்டியிடுகிறார்.
தெலங்கானா மாநிலத்தில் மொத்தம் 17 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. மாநிலத்தில் டிஆர்எஸ் அசுர பலத்துடன் இருக்கிறது.சமீபத்தில் வெளியான பல்வேறு கருத்துக் கணிப்புகளில் 17 இடங்களில் 16 இடங்கள் வரை டிஆர்எஸ் கட்சி கைப்பற்ற வாய்ப்பு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெலங்கானாவில் தெலுங்கு தேசம் கட்சி போட்டியிடுவதாக அறிவித்து, 17 தொகுதிகளுக்கான வேட்பாளர்களையும் அறிவித்தது. ஆனால், நாளுக்கு நாள் தெலுங்கு தேசம் கட்சியில் இருந்து முக்கியப் பிரமுகர்கள், கட்சி நிர்வாகிகள் டிஆர்எஸ் கட்சியில் சேர்ந்து வருகிறார்கள்.
தெலங்கானா மாநிலத்தில் இடதுசாரிகளுடன் கூட்டணிக்கு சந்திரபாபு நாயுடு முயற்சித்தார். அதற்கும் பலன் கிடைக்கவில்லை. இடதுசாரிகள் பவன் கல்யாணின் ஜனசேனாவுடன் கூட்டணி சேர்ந்துவிட்டதால், தெலுங்கு தேசம் கட்சி தெலங்கானா மாநிலத்தில் தனித்து விடப்பட்டுள்ளது.
ஒருவேளை தெலுங்கு தேசம் கட்சி தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என முடிவு எடுத்தால், தெலுங்கு தேசம் கட்சி கடந்த 1982-ம் ஆண்டுக்குப் பின் மக்களவைத் தேர்தலில் போட்டியிடாமல் இருப்பது இதுதான் முதல்முறையாகும்.
சந்திரசேகரராவ் என்ற பெயர்தான் தெலுங்கானாவில் எங்கும் எதிரொலிக்கிறது.
ஒரு காலத்தில் காங்கிரஸ் கட்சிக்கும், தெலுங்குதேசம் கட்சிக்கும் கோட்டையாக திகழ்ந்த, இந்தப் பகுதி இப்போது சந்திரசேகரராவின் தெலுங்கானா ராஷ்டிர சமிதியின் கோட்டையாக கம்பீரமாய் நிற்கிறது.
17 இடங்களைக்கொண்ட தெலுங் கானா மாநிலத்தில் நாடாளுமன்ற தேர்தல் பிரசாரம் களை கட்டி விட்டது.
2014-ல் நாடாளுமன்ற தேர்தலுடன் இந்த மாநிலம் சட்டசபை தேர்தலை சந்தித்தது. அப்போது மாநில பிரிவினையில் வெற்றி வாகை சூடிய சந்திரசேகரராவின் தெலுங்கானா ராஷ்டிர சமிதி தனித்தே களம் கண்டது. தெலுங்குதேசமும், பாரதீய ஜனதாவும் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. காங்கிரசும் களத்தில் இருந்தது.
சட்டசபை தேர்தலில் சந்திரசேகரராவ் கட்சி அபார வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. நாடாளுமன்ற தேர்தலில் 11 இடங்களை அந்த கட்சி கைப்பற்றியது. தெலுங்குதேசம், பாரதீய ஜனதா கூட்டணி 2 இடங்களுடன் திருப்திபட்டுக்கொள்ள நேரிட்டது. காங்கிரஸ் கட்சிக்கு 2 இடங்களும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடமும், ஒவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சிக்கு ஒரு இடமும் கிடைத்தது.
இந்த முறை காட்சிகள் மாறி விட்டன.
நாடாளுமன்ற தேர்தலும், சட்டசபை தேர்தலும் ஒன்றாக நடக்கவில்லை. கடந்த டிசம்பர் மாதமே சட்டசபை தேர்தல் நடத்தி, நினைத்தபடியே வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக்கொண்டார் சந்திரசேகரராவ். அவர் சந்திரசேகரராவ் மட்டுமல்ல தந்திரசேகரராவும்கூட. அதனால்தான் யாருடனும் கூட்டணி சேராமல், மக்கள் ‘நாடி’ பார்த்து நடந்து கொள்கிறார்.
சட்டசபை தேர்தலில் என்ன சோகம் என்றால், தெலுங்குதேசம் கட்சியுடன் கூட்டணி சேர்ந்து காங்கிரஸ் கட்சி கையை சுட்டுக்கொண்டது. 119 இடங்களை கொண்ட சட்டசபையில் காங்கிரசுக்கு 19 இடங்களும், தெலுங்குதேசம் கட்சிக்கு 2 இடங்களும் கிடைத்தன. காங்கிரஸ் தனித்து போட்டியிட்டிருந்தால்கூட இன்னும் கூடுதலான இடத்தை பெற்றிருக்க முடியும், மாநில பிரிவினை விவகாரத்தில் சந்திரபாபு நாயுடு மீதும், அவரது கட்சியின் மீதும் உள்ள வெறுப்புணர்வால், அதனுடன் கரம் கோர்த்த காங்கிரசையும் தெலுங்கானா வாக்காளர்கள் காலை வாரினர்.
வெற்றி பெற்ற 19 இடங்களைக்கூட காங்கிரசால் தக்க வைக்க முடியவில்லை. அவர்களில் 10 பேர் ஒரே மாதத்தில் ஆளும் கட்சிக்கு தாவ, பரிதாபமாக நிற்கிறது காங்கிரஸ்.
தெலுங்கு தேசம் நிலையோ இன்னும் பரிதாபமாக இருக்கிறது. சட்டசபை தேர்தலில் விழுந்த அடியால், இந்தமுறை தெலுங்கானா நாடாளுமன்ற தேர்தலில் களத்துக்கே வரவில்லை என்று அறிவித்து விட்டது.
இதுபற்றி அந்தக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ராவுல சந்திரசேகர ரெட்டி இதுபற்றி குறிப்பிடுகையில், “நாடாளுமன்ற தேர்தலில் தோல்வி அடைந்தால் அது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்ற நிலையில், தெலுங்குதேசம் போட்டியிடாது என தலைமை எடுத்த முடிவு, சரியான முடிவு” என்கிறார்.
தெலுங்கானா ராஷ்டிர சமிதி 16 நாடாளுமன்ற தொகுதிகளில் போட்டி போடுகிறது.
அந்த கட்சியின் தலைவர் சந்திரசேகரராவ், மூன்றாவது அணி அமைக்க பகீரதபிரயத்தனம் செய்து தோல்வி கண்டாலும்கூட, இந்த தேர்தலில் தனது கட்சி கூடுதல் இடங்களை கைப்பற்றி விட்டால், அடுத்து மத்தியில் அமைகிற அரசில் முக்கிய பங்கு வகிக்க முடியும் என்று நம்புகிறார். தேசிய அரசியல் களத்தில் அவர் தனது மகள் கே.கவிதாவை களம் இறக்கி பயிற்சி அளித்து வருகிறார்.
இந்த முறையும் கவிதா, நிஜாமாபாத் தொகுதியில் இருந்தே போட்டியிடுகிறார். அவரது தொகுதியில் விவசாயிகள் தங்கள் பிரச்சினைகளை வலியுறுத்தி தேர்தல் களத்தில் நேரடியாக குதித்து இருக்கிறார்கள். மஞ்சளுக்கும், கேழ்வரகுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலையை மத்திய, மாநில அரசுகள் அறிவிக்க வேண்டும் என்பதுதான் அவர்களின் முக்கிய கோரிக்கை.
இந்த தொகுதியில் மொத்தம் 185 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இந்த தொகுதியில் வாக்குச்சீட்டு முறை பின்பற்றப்படும் என முதலில் தகவல்கள் வெளியாகின. ஆனால் இப்போது தேர்தல் கமிஷன் இந்த தொகுதியில் ‘எம்-3’ என்கிற ராட்சத மின்னணு ஓட்டு எந்திரத்தை பயன்படுத்தப்போகிறது. எனவே வாக்குச்சீட்டு நடைமுறை இங்கும் இல்லை.
இங்கே உண்மையான போட்டி கவிதாவுக்கும், காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் மது யாக்ஷி கவுடுவுக்கும், பாரதீய ஜனதா வேட்பாளர் டி.அரவிந்துக்கும்தான். மும்முனைப்போட்டியில் கவிதாதான் முந்துகிறார்.
2014 தேர்தலில் கவிதா 1 லட்சத்து 67 ஆயிரத்துக்கும் அதிகமான ஓட்டு வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார். விவசாயிகள் தேர்தல் களத்தில் குதித்து மிரட்டினாலும், அது கவிதாவுக்கு பாதிப்பை பெரிதாக ஏற்படுத்தாது. எனவே அவரது வெற்றி மீண்டும் தொடரும்.
பாரதீய ஜனதா கட்சி 17 இடங்களில் போட்டியிட்டாலும் கூட கடந்த முறை அந்த கட்சியின் மூத்த தலைவர் பண்டாரு தத்தாத்ரேயா அமோக வெற்றி பெற்ற செகந்திராபாத் உள்ளிட்ட 5 அல்லது 6 தொகுதிகளில் தான் கவனத்தை செலுத்துகிறது. பண்டாரு தத்தாத்ரேயாவுக்கு கட்சி ‘சீட்’ தரவில்லை என்பது வேறுகதை.
காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தமட்டில் அது தள்ளாடுகிறது என்பதுதான் உண்மை நிலவரம்.
இருப்பினும் முன்னாள் மத்திய மந்திரி ரேணுகா சவுத்ரி கம்மம் தொகுதியிலும், மாநில காங்கிரஸ் தலைவர் உத்தம்குமார் ரெட்டி நால்கொண்டா தொகுதியிலும் வெற்றிக்காக போராடுகிறார்கள்.
இதேபோன்று கடந்த முறை ஒரு இடத்தைப்பிடித்த ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியும், அவரை தன்பக்கம் தக்க வைக்க முடியாத நிலையில் இந்த முறை தோதாவில் இறங்காமல், தனது ஒட்டுமொத்த கவனத்தையும் ஆந்திரா மீது தான் திருப்பி இருக்கிறது.
தெலுங்கானாவில் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய ஒரு தொகுதி ஐதராபாத் தொகுதி. இந்த தொகுதி ஒவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சியின் கோட்டையாக உள்ளது. 1989-ம் ஆண்டு முதல் தொடர்ந்து 8 முறை அந்தக் கட்சி வெற்றி பெற்றிருக்கிறது. 5 முறை அந்தக் கட்சியின் தலைவர் சுல்தான் சலாகுதீன் ஒவைசி வெற்றி பெற்றிருக்கிறார். அதன்பின்னர் 3-வது முறை அவரது மகன் அசாதுதீன் ஒவைசி வெற்றி பெற்று வந்துள்ளார். இந்த தேர்தலிலும் அவர் வெற்றி பெறுவது உறுதி என்பதுதான் கள நிலவரம். அவருக்கு தெலுங்கானா ராஷ்டிர சமிதி ஆதரவு தருகிறது என்பதுவும் முக்கிய அம்சம்.
‘மிஷன் 16’ என்ற இலக்கை அறிவித்து, போட்டியிடுகிற 16 தொகுதிகளிலும் வெற்றிக்கொடி கட்ட வேண்டும் என்பதுதான் தெலுங்கானா ராஷ்டிர சமிதி தலைவர் சந்திரசேகரராவின் கனவு. அது நனவாகி, மத்தியில் யாருக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காமல் தொங்கு நாடாளுமன்றம் அமையுமானால், இந்த கட்சி புதிய அரசு அமைவதில் முக்கிய பங்கு வகிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
காங்கிரஸ், பாரதீய ஜனதா கட்சி ஆகிய இரண்டுமே ஒற்றை இலக்க தொகுதிகளையாவது பிடிக்க முடியுமா என்பது கேள்விக்குறி.