வாக்காளர்கள் | : | | 59123197 |
ஆண் | : | | 29256960 |
பெண் | : | | 29860765 |
திருநங்கை | : | | 5472 |
தமிழ்நாட்டில் காலூன்ற வேண்டும் என்பது பா.ஜனதாவின் நீண்ட நாள் கனவு. கேரளாவில், எந்த ஆளுமையும் இல்லாமல், இரு கூட்டணிகளுக்கு இடையிலான மோதலாகவே ஒவ்வொரு தேர்தலும் நடந்து வருகிறது. தமிழ்நாட்டில், மிகப்பெரிய ஆளுமைகளாக திகழ்ந்த ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோரின் மறைவுக்கு பிறகு, கேரளாவைப் போலவே இங்கும் இரு கூட்டணிகளுக்கு இடையிலான மோதலாக தேர்தல் களத்தை மாற்ற பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார்.
அதற்கு முதலில் வலிமையான கூட்டணியில் பா.ஜனதாவை இடம்பெறச் செய்ய விரும்பினார். இந்த தேர்தலுக்கு மட்டுமின்றி, ஆளுமை இல்லாத தமிழ்நாட்டில் தனது நீண்ட கால முதலீடாகவும் இக்கூட்டணி திகழ வேண்டும் என்பது மோடியின் விருப்பம். கடந்த 2014-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் தே.மு.தி.க., பா.ம.க., மற்றும் சிறிய கட்சிகளுடன் சேர்ந்து பா.ஜனதா போட்டியிட்டது. 2 தொகுதிகளில் இந்த கூட்டணி வெற்றி பெற்றது. கிடைத்த மொத்த ஓட்டு சதவீதம் 5.5 சதவீதம். பா.ஜனதா தனித்துப் போட்டியிட்ட தேர்தல்களில், வெறும் 2 சதவீத ஓட்டுகளையே பெற்றது.
கூட்டணி முயற்சியில் அ.தி.மு.க.வை மோடி தேர்வு செய்தார். அதனுடன் சில சாதிக்கட்சிகளை கூட்டணி சேர்க்க விரும்பினார். இதன்மூலம், பா.ஜனதாவுக்கு கவுரவமான தொகுதிகளில் வெற்றி கிடைப்பதுடன், கூட்டணிக்கு கணிசமான வெற்றி கிடைக்கும் என்று கணக்கு போட்டார்.
இந்த கூட்டணி அமைக்கும் முயற்சிக்கு புத்திசாலித்தனமாக அவர் மத்திய மந்திரி பியூஸ் கோயலை தேர்வு செய்தார். தே.மு.தி.க.வுடன் சளைக்காமல் பேச்சுவார்த்தை நடத்தி, அந்த கட்சியை கூட்டணிக்கு கொண்டு வந்ததில் பெரும்பங்கு பியூஸ் கோயலையே சாரும்.
பா.ஜனதா தலைவர் அமித் ஷா, இந்த கூட்டணியை ‘தேசிய ஜனநாயக கூட்டணி’ என்று முத்திரை குத்த முயன்றநிலையில், ‘இது அ.தி.மு.க. கூட்டணி’ என்று பியூஷ் கோயல் அறிவித்தார். இதன்மூலம், கூட்டணியில் இணக்கமான அணுகுமுறையை உருவாக்கினார். கிடைத்த 5 தொகுதிகளிலேயே திருப்தியடையும் சூழ்நிலையை உண்டாக்கினார். அவரது அணுகுமுறை, அ.தி.மு.க.வினரிடையே பாராட்டு பெற்றுள்ளது.
தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவு காரணமாக, அவருடைய மகன் மு.க.ஸ்டாலின் தலைமை பொறுப்பை ஏற்றுள்ளார். அவருக்கென ஆதரவாளர்கள் கூட்டம் இருந்தாலும், கருணாநிதியை போன்ற ஆளுமை அவருக்கு இல்லை என்று பிரதமர் மோடியின் உள்வட்டாரம் கருதுகிறது. மோடியும், மு.க.ஸ்டாலினுடைய அரசியல் நகர்வுகளை உன்னிப்பாக கண்காணித்து, அதற்கு பதிலடி அளித்து வருகிறார்.
அந்தவகையில், தமிழ்நாட்டு வாக்காளர்களை கவர மோடி பின்பற்றும் 3 அம்ச வியூகம் என்னவென்றால், 1. திட்டங்கள் அறிவித்தல். 2. உணர்வுரீதியாக பேசுதல். 3. தேசியத்துடன் மாநில உணர்வுகளை கலத்தல்.
இதற்கு உதாரணமாக, புதிய பாம்பன் பாலம், தேஜாஸ் ரெயில், எய்ம்ஸ் ஆஸ்பத்திரி என புதிய திட்டங்களை மோடி அறிவித்தார். தானே நேரில் வந்து அத்திட்டங்களை தொடங்கி வைத்தார்.
கஜா புயல் தாக்கியபோது, பாதிக்கப்பட்ட மக்களை பார்க்க பிரதமர் மோடி நேரில் வரவில்லை என்ற குற்றச்சாட்டு உண்டு. ஆனால், கடந்த ஜனவரி 27-ந் தேதியில் தொடங்கி, 40 நாட்களில் அவர் 4 தடவை தமிழ்நாட்டுக்கு வந்து விட்டார்.
தமிழ்நாட்டு மக்கள், உணர்வுரீதியாக பின்னப்பட்டவர்கள் என்பதை மோடி நன்றாக உணர்ந்துள்ளார். அதனால், தனது உரையில், மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர்கள் காமராஜர், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரை நினைவுகூர்ந்து, அவர்களின் சாதனைகளை புகழ்ந்து பேசி வருகிறார். கடந்த மாதம் காஞ்சீபுரம் மாவட்டம் வண்டலூர் அருகே கிளாம்பாக்கத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசும்போது, “காசியில் (வாரணாசி) இருந்து காஞ்சிக்கு வந்துள்ளேன்” என்று கூறி நெருக்கத்தை உருவாக்க முயன்றார்.
தனது சொந்த தொகுதியான வாரணாசியை போலவே, தமிழ்நாட்டையும் தனது மனதுக்கு நெருக்கமாக கருதுவதாக காட்டிக்கொள்ள மோடி விரும்புகிறார். அந்த அடிப்படையில், ஏழை விவசாயிகளுக்கு தனது அரசு வழங்கும் ரூ.6 ஆயிரம் நிதிஉதவி திட்டத்தின் தொடக்க விழாவை ஜெயலலிதா பிறந்தநாளில் சென்னையில் நடத்தவைத்தார். அதில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் மத்திய மந்திரி பியூஸ் கோயலையும் பங்கேற்க அனுப்பி வைத்தார். இந்த திட்டத்தால், தமிழ்நாட்டில் 60 லட்சம் விவசாயிகள் பலன் அடைவார்கள் என்று பா.ஜனதா கூறுகிறது.
தமிழ்நாட்டில் கொண்டாடப்படும் பண்டிகைகளுக்கு தமிழிலேயே வாழ்த்து செய்தி அனுப்புவதும், தனது மேடைப்பேச்சில் தமிழில் சில வார்த்தைகள் பேசுவதும் மோடி ஸ்டைல்.
பாகிஸ்தான் ராணுவத்தின் பிடியில் சிக்கி தாயகம் திரும்பிய இந்திய விமானப்படை அதிகாரி அபிநந்தன், தமிழ்நாட்டை சேர்ந்தவர் என்பதையும் மோடி தனது பேச்சில் குறிப்பிட மறக்கவில்லை. இதன்மூலம், தேசிய உணர்வுடன் பிராந்திய உணர்வை கலந்து மக்களிடம் நெருங்க முற்பட்டுள்ளார்.
மத்தியில், எந்த கட்சி ஆட்சிக்கு வர வாய்ப்புள்ளதோ, அந்த கட்சிக்கு வாக்களிப்பதையே தமிழ்நாட்டு மக்கள் விரும்புவார்கள் என்பது பா.ஜனதா தலைமைக்கு தெரியும். எனவே, தமிழ்நாட்டில் உள்ள அ.தி.மு.க. அரசுக்கு இணக்கமான பா.ஜனதா அரசே மீண்டும் வர வேண்டும் என்று தமிழ்நாட்டு வாக்காளர்களிடம் வலியுறுத்தி வருகிறது. இந்த இரு அரசுகளும் இரட்டை என்ஜின்களாக செயல்பட்டு வளர்ச்சியை ஏற்படுத்தி தரும் என்று மத்திய மந்திரி பியூஸ் கோயல் பேசி வருகிறார்.
இது ஒருபுறம் இருக்க, மோடி எதிர்ப்பாளர்கள் தங்கள் பங்குக்கு அவருக்கு எதிரான உணர்வுகளுக்கு உரமேற்றி வருகிறார்கள். நீட் தேர்வு, மேகதாது அணை பிரச்சினை, காவிரி பிரச்சினை ஆகியவற்றில் தமிழ்நாட்டு நலன்களுக்கு எதிராக மோடி செயல்பட்டு வருவதாக அவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். கஜா புயல் பாதிப்பை பார்க்க வரவில்லை என்பதற்காக, மோடி தமிழ்நாட்டுக்கு வரும்போதெல்லாம் சில கட்சிகள் கருப்புக்கொடி காட்டி வருகின்றன.
கஜா புயலுக்கு தமிழக அரசு கேட்ட நிதியில் 10 சதவீதம்தான் மத்திய அரசு விடுவித்துள்ளதாக தெரிகிறது. இதுவும் மோடி எதிர்ப்பாளர்களின் குற்றச்சாட்டு பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
இருப்பினும், அனைத்தையும் மீறி, தமிழ்நாட்டு வாக்காளர்களை கவர்ந்து விட முடியும் என்று பா.ஜனதா திடமாக நம்புகிறது. அதற்கு உதாரணமாக, ஒரு சமீபத்திய நிகழ்வை சுட்டிக்காட்டுகிறது. தமிழ்நாட்டில் பியூஸ் கோயல் ஒரு கூட்டத்தில், “நான் சொல்வது சரியா?” என்று கேட்டபோது, கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள், “சரிதான்” என்று ஒரே குரலில் கூறியதை அவர்கள் நினைவுகூர்கிறார்கள்.
பா.ஜனதாவுக்கு இசைவான இந்த பதில், ஓட்டுகளாக மாறுமா? என்பது ஓட்டு எண்ணிக்கை நாளான மே 23-ந் தேதி தெரியும்.